Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - காண்டம் 5
சுந்தர காண்டம் (இரண்டாம் பகுதி) /படலங்கள் 7-15

irAmAyaNam of kampar
canto 5 (cuntara kAnTam), part 2
(paTalams 7-15, verses 5537 - 6185)
In tamil script, unicode/utf-8 format



    Acknowledgements:
    Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
    providing us with a romanized transliterated version of this work and for permissions
    to publish the equivalent Tamil script version in Unicode encoding
    We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2016.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are :
    http://www.projectmadurai.org/


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - சுந்தர காண்டம் (இரண்டாம் பகுதி) /படலங்கள் 7-15

5.7 பொழில் இறுத்த படலம் 5537 - 5596
5.8 கிங்கரர் வதைப் படலம் 5597 - 5657
5.9 சம்புமாலி வதைப் படலம் 5658 - 5708
5.10 பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் 5709 - 5775
5.11 அக்ககுமாரன் வதைப் படலம் 5776 - 5825
5.12 பாசப் படலம் 5826 - 5888
5.13 பிணி வீட்டு படலம் 5889 - 6028
5.14 இலங்கை எரியூட்டு படலம் 6029 - 6092
5.15 திருவடி தொழுத படலம் 6093 - 6185


5.7 பொழில் இறுத்த படலம் 5537 - 5596

பிராட்டியிடம் விடை பெற்றபின் அநுமன் நினைவு பற்றிய கவிக்கூற்று

நெறிக்கொடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்
பொறிக் குலம் மலர்ப் பொழில் இடைக் கடிது போவான்
'சிறுத்தொழில் முடித்து அகல்தல் தீது’ எனல் தெரிந்தான்;
மறித்தும் ஒர் செயற்கு உரிய காரியம் மதித்தான்.         5.7.1

அநுமன் தனக்குள் எண்ணுதல் (5538-5543)

ஈனம் உறு பற்றலரை எற்றி எயின் மூதூர்
மீன நிலயத்தின் உற வீசி விழி மானை
மானவன் மலர்க் கழலின் வைத்தும் இலென்; என்றால்
ஆனபொழுது எப்பரிசின் நான் அடியன் ஆவேன்.         5.7.2

வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால்
அஞ்சின் உடன் அஞ்சுதலை தோள் உற அசைத்தே,
வெம் சிறையில் வைத்தும் இலென் வென்றும் இலென்; என்றால்
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல், தகவு ஆமே.         5.7.3

கண்ட நிருதக்கடல் கலக்கினென் வலத்தில்
திண்திறல் அரக்கனும் இருக்க ஒர் திறத்தில்
மண்ட உதரத்தவள் மலர்க்குழல் பிடித்துக்
கொண்டு சிறைவைத்திடுதலில் குறையும் உண்டோ?         5.7.4

மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளதன்றால்;
ஓட்டி இவ் அரக்கரை உலைத்து உரிமை எல்லாம்
காட்டும் அதுவே கருமம்; அன்னவர் கடும்போர்
மூட்டும் வகை யாவதுகொல்? என்று முயல்கின்றான்.         5.7.5

இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்
அப் பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர்
வெப்பு உறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்
துப்பு அற முருக்கி உயிர் உண்பல்; இது சூதால்.        5.7.6

வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்
வெம் திறல் அரக்கனும் வெலற்கு அரும் வலத்தான்
முந்தும்; எனின் அன்னவன் முடித்தலை முசித்து என்
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன்.         5.7.7

அநுமன் அசோகவனத்தை அழித்தல

என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்;
அன்று உலகு எயிற்று இடைகொள் ஏனம் எனல் ஆனான்;
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான்.         5.7.8
       
அசோகவன அழிவுபாடுகளின் வருணனை (5545-5576)

முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த;
இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;
ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த.         5.7.9

வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில்
காரொடு செறிந்த சில; காலினொடு வேலைத்
தூரொடு பறிந்த சில; தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில; உக்கசில; நெக்க.         5.7.10

சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் பேர்
ஆனை நுகரக் குளகும் ஆன; அடி பற்றா
மேல் நிமிர விட்டன விசும்பின்வழி மீப் போய்
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த.        5.7.11

அலைந்தன கடல் திரை; அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக இடிந்தன; குலக் கிரிகேளாடு
மலைந்து பொடி உற்றன; மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும் மீனினொடு வெண்மலர் உதிர்ந்த.        5.7.12

முடக்கும் நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்வகை வீசின களித்த திசையானை
மடப் பிடியினுக்கு உதவ மையில் நிமிர் கைவைத்து
இடுக்கியன ஒத்தன; எயிற்றின் இடை ஞால்வ.        5.7.13

விஞ்சை உலகத்தினும் இயக்கர்மலை மேலும்
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும்
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார்;
நஞ்சம் அனையான் உடைய சோலையின் நறும்பூ.        5.7.14

பொன் திணி மணிப் பரு மரன் திசைகள் போவ
மின் திரிவ ஒத்தன; வெயில் கதிரும் ஒத்த;
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழில்
தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த.        5.7.15

புள்ளினொடு வண்டும் ஞிமிறும் களிகொள் பூவும்
கள்ளும் முகையும் தளிர்கேளாடு இனிய காயும்
வெள்ள நெடு வேலை இடை மீன் இனம் விழுங்கித்
துள்ளின; மரன்பட நெரிந்தன துடித்த.        5.7.16

தூவிய மலர்த்தொகை சுமந்து திசைதோறும்
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத
தேவியர்கேளாடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய; திரை ஆர்கலிகள் அம்மா!        5.7.17

இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும்
தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூரக்
கடந்து செலவு என்பது கடந்தது; இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது; நல்நீர்.         5.7.18

வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
வானின் இடை வீசிய அரும் பணை மரத்தால்;
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய;
வான இடியால் ஒடியும் மால்வரைகள் மான.         5.7.19

எண்ணில் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே
தண்ண மழைபோல் இடை தழைந்தது சலத்தால்
அண்ணல் அனுமான்'அடல் இராவணனது அந்நாள்
விண்ணும் ஒரு சோலை உளதாம்'என விதித்தான்.         5.7.20
       
தேன் உறை துளிப்ப நிறை புள் பல சிலம்பப்
பூ நிறை மணி தரு விசும்பின்மிசை போவ
மீன்முறை நெருக்க ஒளி வாெளாடு வில் வீச
வான் இடை நடாய நெடுமானம் எனல் ஆன.         5.7.21

சாகம் நெடு மாப் பணை தழைத்தன தனிப்
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும்
மாகம் நெடு வான் இழிந்து புனல் வாரும்
மேகம் எனல் ஆய; நெடு மா கடலின் வீழ்வ.         5.7.22

ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர்
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு எனத்
தான கற்பகத் தண்டலை விண்தலம்
போன புக்கன முன் உறை பொன் நகர்.         5.7.23

மணிகொள் குட்டிமம் மட்டித்து மண்டபம்
துணிபடுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர்
திணி சுவர்த்தலம் சிந்திச் செயற்கு அரும்
பணி படுத்து உயர் குன்றம் படுத்து அரோ.         5.7.24

வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்ப்
பாங்கர் சண்பகப் பத்தி பறித்து அயல்
மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே.         5.7.25

சந்தனங்கள் தகர்ந்தன; தாள்பட
இந்தனங்களின் வெந்து எரி சிந்திட
முந்து அனங்க வசந்தன் முகம் கெட
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே.         5.7.26

காமரம் கனி வண்டு கலங்கிட
மாமரங்கள் மடிந்தன மண்ணொடு;
தாம் அரங்க அரங்கு தகர்ந்து உகப்
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே.         5.7.27

குழையும் கொம்பும் கொடியும் குயில் குலம்
விழையும் தண் தளிர்ச் சூழலும் மென்மலர்ப்
புழையும் வாசப் பொதும்பும் பொலன்கொள் தேன்
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே.         5.7.28

பவள மாக்கொடி வீசின பல் மழை
துவளும் மின் எனச் சுற்றிடச் சூழ்வரை
திவளும் பொன்பணை மாமரம் சேர்ந்தன
கவள யானையின் ஓடையில் காந்தவே.         5.7.29

பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம்
இற எடுத்த இடிக்குரல் ஓசையும்
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின்
புற நிலத்தையும் கை மிகப் போயதே.         5.7.30

பாடலம் படர் கோங்கொடும் பன் இசைப்
பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன;
பாடு அலம்படப் புள் இனம் பார்ப்பொடே.         5.7.31

வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன;
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண்புனல்
விண்டு அலம்புக நீள்மரம் வீழ்ந்தவே.         5.7.32

தாமரைத் தடம் பொய்கை செஞ் சந்தனம்
தாம் அரைத்தன ஒத்தது; உகைத்தலின்
காமரக் களி வண்டொடும் கள்ெளாடும்
கா மரக்கடல் பூக்கடல் கண்டவே.         5.7.33

சிந்துவாரம் திசைதொறும் சென்றன
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன;
தம் துவாரம் புதவொடு தாள் அறத்
தந்து வாரம் துகள்படச் சாய்ந்தவே.         5.7.34

நந்தவானத்து நாள் மலர் நாறின
நந்த வானத்து நாள் மலர் நாறின;
சிந்து அ வானம் திரிந்து உகச் செம்மணி
சிந்த வால் நந்து இரிந்த திரைக் கடல்.         5.7.35

புல்லும் பொன் பணைப் பல் மணிப் பூமரம்
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால்
எல்லி இட்டு விளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன : விண் உற வீசின.         5.7.36

ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும்
பானத் தானமும் பாய் பரிப் பந்தியும்
ஏனைத் தார் அணி தேரொடும் இற்றன;
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே.         5.7.37

மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரிநேர்
இயக்கு உறத் திசைதோறும் எறிந்தன
வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன
புயல் கடல்தலை புக்கன போல்வன.         5.7.38

பெரிய மாமரமும் பெருங்குன்றமும்
விரிய வீசலின் மின் நெடும் பொன் மதில்
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ
இரியல் போனது இலங்கையும் எங்கணும்.         5.7.39

சந்திராத்தமன வருணனை

"தொண்டை அம் கனிவாய்ச் சீதை
        துயக்கினால் என்னைச் சுட்டாய்!
விண்ட வானவர் கண் முன்னே
        விரிபொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய்!" என்று
        காணுமேல் அரக்கன் காய்தல்
உண்டு என வெருவினான்போல்
        ஒளித்தனன்; உடுவின் கோமான்.         5.7.40

அநுமன் வீசிய (மணி) மரங்களால் வைகறை இருள் விலகல்

காசு அறு மணியும் பொன்னும்
        காந்தமும் கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள் ஆகக்
        குயிற்றிய மதனச் சோலை,
ஆசைகள் தோறும் ஐயன்
        கைகளால் அள்ளி அள்ளி
வீசிய, விளக்கலாலே
        விளங்கின உலகம் எல்லாம்.         5.7.41

விலங்கு பறவைகளின் நிலை (5578-5579)

கதறின வெருவி, உள்ளம்
        கலங்கின, விலங்கு; கண்கள்
குதறின பறவை, வேலை
        குளித்தன, குளித்திலாத
பதறின; பதைத்த; வானில்
        பறந்தன; பறந்து பார்வீழ்ந்து
உதறின சிறையை; மீள
        ஒடுக்கின உலந்து போன.         5.7.42

தோட்டொடும் துதைந்த தெய்வ
        மரம் தொறும் தொடுத்த புள், தம்
கூட்டொடும் துறக்கம் புக்க;
        குன்று எனக் குவவுத் திண் தோள்
சேட்டு அகன் பரிதி மார்பன்
        சீறியும் தீண்டல் தன்னால்,
மீட்டு அவன் கருணைசெய்தால்
        பெறும் பதம் விளம்பல் ஆமோ.         5.7.43

பிராட்டி தங்கியிருந்த மரமொன்றுமே அழியாதிருத்தல்

பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும்,
மும்முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம்முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது. அம்மா!         5.7.44

சூரியோதய வருணனை

உறு சுடர்ச் சூடைக்காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறி ஆக விட்டாள், ஆதலான் வறியள் அந்தோ!
செறி குழல் சீதைக்கு என்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான்.         5.7.45

அசோகவனத்தை அழித்து நின்ற அனுமனது தோற்றம்

.தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான்,
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்;
ஆழியின் நடுவண் நின்ற அரும் வரைக்கு அரசும் ஒத்தான்;
ஊழியின் இறுதிக் காலத்து உருத்திர மூர்த்தி ஒத்தான்.         5.7.46

அநுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர் பிராட்டியை வினவுதல்

இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கிப்,
பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புகன்று நோக்கி,
'அன்னை! ஈது என்ன மேனி? யார்கொல்?'என்று அச்சம் உற்றார்;
நன்னுதல் தன்னை நோக்கி, 'அறிதியோ?'நங்கை! என்றார். 5.7.47

பிராட்டியின் மறுமொழி

'தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்
தூயவர் தெரிதல் உண்டோ? நும் உடைச் சூழல் எல்லாம்
ஆய மான் எய்த, அம்மான் இளையவன், "அரக்கர் செய்த
மாயம்" என்று உரைக்கவேயும், மெய் என மையல்கொண்டேன்.       5.7.48

அநுமன் சயித்தியம் ஒன்றைக் கண்டு பறித்தெறியத் தொடங்குதல்

என்றனள், அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகிக்
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய ஓட,
நின்றது ஓர் சயித்தம் கண்டான், 'நீக்குவல் இதனை'என்னாத்
தன் தடக்கைகள் நீட்டிப் பற்றினன் : தாதை ஒப்பான்.       5.7.49

சயித்தத்தின் பெருமை (5586-5588)

கண்கொள அரிது, மீது கார் கொள அரிது, திண் கால்
எண்கொள அரிது, இராவும் இருள்கொள அரிது, மாக
விண்கொள நிவந்த மேரு வெள்குற வெதும்பி உள்ளம்
புண்கொள உய்ர்ந்தது, இப்பார் பொறைகொள அரிது போலாம்.       5.7.50

பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிப் புதிய பால் பொழிவது ஒக்கும்
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன
அங்கை பத்து இரட்டியான் தன் ஆணையால் அழகு மானப்
பங்கயத்து ஒருவன் தானே பசும் பொனால் படைத்தது அம்மா.       5.7.51

தூண் எலாம் சுடரும் காசு, சுற்று எலாம் முத்தம் சொன்னம்
பேணல் ஆம் மணியின் பித்தி பிடர் எலாம் ஒளிகள் விம்மச்
சேண் எலாம் விரியும் கற்றைச் சேயொளிச் செல்வற்கு ஏயும்
பூணலாம் எம்மனோரால் புகழலாம் புதுமைத்து அன்றே.       5.7.52

அநுமன் சயித்தத்தைப் பெயர்த்து இலங்கைமேல் எறிதல் (5589-5590)

'வெள்ளி அம் கிரியைப் பண்டு அவ் வெம் தொழில் அரக்கன் வேரோடு
அள்ளினன்'என்னக் கேட்டான்; அத்தொழிற்கு இழிவு தோன்றப்
புள்ளி மா மேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல,
வள் உகிர்த் தடக்கை தன்னால் மண் நின்றும் வாங்கி, அண்ணல்.       5.7.53

விட்டனன் இலங்கை தன்மேல்; விண்ணுற விரிந்த மாடம்
பட்டன பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற;
சுட்டன பொறிகள் வீழத், துளங்கினர் அரக்கர் தாமும்;
கெட்டனர் வீரர் அம்மா! பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்.       5.7.54

அசோகவனம் அழிந்த செய்தியைக் காவலர் இராவணனிடம் தெரிவித்தல் (5591-5593)

நீர் இடு துகிலர், அச்சம் நெருப்பிடும் நெஞ்சர், நெக்குப்
பீரிடும் உருவர், தறெ்றிப் பிணங்கிடு தாளர், பேழ்வாய்
ஊர் இடு பூசல் ஆர, உளைத்தனர் ஓடி உற்றார்;
பார் இடு பழுவச் சோலை பாரிக்கும் பருவத் தேவர்.       5.7.55

அரிபடு சீற்றத்தான் தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார்,
'கரிபடு திசையின் நீண்ட காவலா! காவல் ஆற்றோம்;
கிரிபடு குவவுத் திண்தோள் குரங்கு இடை கிழித்து வீச
எரிபடு துகிலின் நொய்தின் இற்றது கடி கா'என்றார்.       5.7.56

'சொல்லிட எளியது அன்றால் சோலையைக் காலில் கையில்
புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப், பொன்னால்
வில்லிடு வேரம் தன்னை வேரொடும் வாங்கி வீசச்
சில்லிடம் ஒழியத் தெய்வ இலங்கையும் சிதைந்தது'என்றார்.       5.7.57

காவலர் கூறக்கேட்ட இராவணன் இகழ்ந்து நகுதல்

ஆடகத் தருவின் சோலை பொடிபடுத்து, அரக்கர் காக்கும்
தேடு அரும் வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா!
கோடரம் ஒன்றே, நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல்
மூடரும் மொழியார்; என்ன மன்னனும் முறுவல் செய்தான்.       5.7.58

காவலர் அநுமன் திறத்தைப் பின்னும் வியந்து கூறுதல்

தேவர்கள், பின்னும்'மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப்
பூவலயத்தை அன்றோ புகழ்வது! புலவர் போற்றும்
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத
ஏவம்; அக்குரங்கை ஐய! காணுதி இன்னே'என்றார்.       5.7.59

அநுமனது போரார்ப்பு

மண்டலம் கிழிந்த வாயில் மறிகடல் மோழை மண்ட,
எண்திசை சுமந்த மாவும் தேவரும் இரியல் போக,
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர,
அண்டமும் பிளந்து விண்டதாம் என அனுமன் ஆர்த்தான       5.7.60
-------------

5.8 கிங்கரர் வதைப் படலம் 5597 - 5657

அநுமன் ஆரவாரம் இராவணன் செவியில் விழுதல்

அருவரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி
வெருவரு முழக்கும், ஈசன் வில்லிறும் ஒலியும் என்னக்,
குருமணி மகுட கோடி முடித்தலை குலுங்கும் வண்ணம்,
இருபது செவியினூடும் நுழைந்தது அவ் எழுந்த ஓசை.       5.8.1

அநுமனைப் பிடிக்குமாறு இராவணன் கிங்கரரை ஏவுதல்

புல்லிய முறுவல் தோன்றப் பொறாமையும் சிறிது பொங்க,
எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி,
"வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றிக்,
கொல்லலிர், குரங்கை நொய்தில் பற்றுதிர், கொணர்திர்!" என்றான்.       5.8.2

கிங்கரர்கள் புறப்படுதல்

சூலம், வாள், முசலம், கூர்வேல், தோமரம், தண்டு, பிண்டி
பாலமே, முதலாயுள்ள படைக்கலம் பரித்த கையர்;
ஆலமே அனைய மெய்யர்; அகலிடம் அழிவு செய்யும்
காலம் மேல் எழுந்த மூரிக் கடல் எனக், கடிது செல்வார்.       5.8.3

கிங்கரர் வருணனை (5600-5614)

'நானிலம் அதனின் உண்டு போர்'என நவிலின், அச்சொல்
தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர்த் தெரித்தும் என்னின்,
கானினும் பெரியர் : ஓசை கடலினும் பெரியர் : கீர்த்தி
வானினும் பெரியர் : மேனி மலையினும் பெரியர் மாதோ!       5.8.4

திருகு உறும் சினத்துத், தேவர் தானவர் என்னும் தெவ்வர்
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் : வசை என்று எண்ணிப்,
பொரு குறும்பு என்று, வென்று புணர்வது பூ உண் வாழ்க்கை
ஒருகுறும் குரங்கு என்று எண்ணி, நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்.      5.8.5

கட்டிய வாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத்
தட்டிய தோளர்; மேகம் தடவிய கையர்; வானை
எட்டிய முடியர்; தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக்
கொட்டிய பேரி என்ன, மழை எனக், குமுறும் சொல்லார்.       5.8.6

வானவர் எறிந்த தெய்வ அடுபடை வடுக்கள், மற்றைத்
தானவர் துரந்த ஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்;
யானையும் பிடியும் வாரி இடும் கயவாயர்; ஈன்ற
கூனல் வெண்பிறையில் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும்கண்ணர்.       5.8.7

சக்கரம், உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிகம், சங்கு,
முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம், வேல், சூலம், முள் கோல்,
பொன்கரம் குலிசம், பாசம், புகர்மழு, எழு பொன்குந்தம்,
வில், கரும் கணை, விட்டேறு, கழுக்கடை எழுக்கள் மின்ன.       5.8.8

பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளர்;
மின்நின்ற படையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர்;
'என்? என்றார்க்கு,'என்? என்?' என்றார்; எய்தியது அறிந்திலாதார்,
முன் நின்றார் முதுகு தீயப் பின் நின்றார் முடுகுகின்றார்.       5.8.9

வெய்து உறு படையின் மின்னர், வில்லினர், வீசு காலர்,
மை உறு விசும்பில் தோன்றும் மேனியர், மடிக்கும் வாயர்,
கைபரந்து உலகு பொங்கிக் கடையுகம் முடியும் காலைப்
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார்.       5.8.10

'பனி உறு சோலை சிந்தி, வேரமும் பறித்தது, அம்மா!
தனி ஒரு குரங்கு போலாம்! நன்று நம் தருக்கு!'என்கின்றார்,
'இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின்?'என்று இரைத்துப் பொங்கி,
முனிவு உறு மனத்தில் தாவி, முந்துற முடுகுகின்றார்.       5.8.11

எற்றுறு முரசும், வில் நாண் ஏற விட்டு எடுத்த ஆர்ப்பும்,
சுற்றுறு கழலும், சங்கும், தழெிதழெித்து உரப்பும் சொல்லும்,
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில்
நல் திரைக் கடல்கேளாடு மழைகளை, நா அடக்க.       5.8.12

தெரு இடம் இல் என்று எண்ணி வானிடைச் செல்கின்றாரும்,
புருவமும் சிலையும் கோட்டிப் புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்,
ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும்,
விரிவு இலது இலங்கை'என்று வழி பெறார் விளிக்கின்றாரும்.       5.8.13

வாள் உறை விதிர்க்கின்றாரும், வாயினை மடிக்கின்றாரும்,
தோள் உறத் தட்டிக் கல்லைத் துகள் படத் துகைக்கின்றாரும்,
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும்,
கோள் வளை எயிறு தின்று தீ எனக் கொதிக்கின்றாரும்.       5.8.14

அனைவரும் மலை என நின்றார், அளவு அறு படைகள் பயின்றார்,
அனைவரும் அமரின் உயர்ந்தார், அகல் இடம் நெளிய நடந்தார்,
அனைவரும் வரனின் அமைந்தார், அசனியின் அணிகள் அணிந்தார்,
அனைவரும் அமரரை வென்றார், அசுரரை உயிரை அயின்றார்.       5.8.15

குறுகின கவசரும் மின்போல் குரை கழல் உரகரும், வன்போர்
முறுகின பொழுதின், உடைந்தார் முதுகு இட, முறுவல் பயின்றார்;
இறுகின நிதிகிழவன் பேர் இசை கெட அளகை எறிந்தார்;
தெறுகுநர் இன்மையின் வல்தோள் தினவு உற உலகு திரிந்தார்.       5.8.16

'வரைகளை இடறுமின்!'என்றால், 'மறிகடல் பருகுமின்!'என்றால்,
'இரவியை விழவிடும்!'என்றால், 'எழுமழை பிழியுமின்!'என்றால்,
'அரவினது அரசனை, ஒன்றோ, தரையினொடு அரையுமின்!'என்றால்,
'தரையினை எடும், எடும்!'என்றால், ஒருவர் அது அமைதல் சமைந்தார்.       5.8.17

தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற, வெம் போர்
மீளியின் இனம் என, வல் தாள் விரை புலி நிரை என, விண் தோய்
ஆளியின் அணி என, அன்றேல், அலை கடல் விடம் என, அஞ்சா,
வாளியின் விசை கொடு, திண் கார் வரை வருவன என, வந்தார்.       5.8.18
கிங்கரர் பொழிலை வளைந்துகொள்ளுதல்

பொறி தர விழி, உயிர் ஒன்றோ? புகை உக, அயில் ஒளி, மின் போல்,
செறிதர, உரும் அதிர்கின்றார், திசைதொறும் விசைகொடு சென்றார்,
எறிதரு கடையுக வன்கால் இடறிட, உடுவின் இனம்போய்
மறிதர, மழை அகல் விண்போல் வடிவு அழி பொழிலை, வளைந்தார்.       5.8.19
அநுமன் கிங்கரரைக் காணுதல்

வயிர் ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி, முரசு ஒலி, மண்பால்
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்;
வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட, வெளியிடை விண்தோய்
கயிலையின் மலை என நின்றான், அனையவர் வருதொழில் கண்டான்.       5.8.20
அநுமன் தன் எண்ணம் பலித்ததற்கு மகிழ்தல்

இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான்;
பத இயல் அறிவு பயந்தால், அதின் நல பயன் உளது உண்டோ?
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர்
உதவு இயல் இனிதின் உவந்தான், எவரினும் அதிகம் உயர்ந்தான்.       5.8.21
கிங்கரர்கள் அநுமன்மேல் படைவீசுதல் (5618-5619)

'இவன்! இவன்! இவன்!'என நின்றார், 'இது!'என முதலி எதிர்ந்தார்,
பவனனின் முடுகி நடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார்,
புவனியும், மலையும், விசும்பும், பொரு அரு நகரும் உடன் போர்த்
துவனியில் அதிர, விடம் போல் சுடர்விடு படைகள் துரந்தார்.       5.8.22

மழைகளும், மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார்,
முழைகளின் இதழ்கள் திறந்தார், முதிர் புகை கதுவ முனிந்தார்,
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார்,
கழை தொடர் வனம் எரி உண்டால் என, எறி படைஞர் கலந்தார்.       5.8.23
அநுமன் ஒருமரத்தைக் கையிற்கொண்டு நிமிர்தல்

அறவனும் அதனை அறிந்தான், அருகினில் அழகின் அமைந்தார்
இற இனின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒருகை இயைந்தான்,
உற வரு துணை என, ஒன்றோ, உதவிய அதனை உவந்தான்,
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என, நடுவண் நிமிர்ந்தான்.       5.8. 24
அரக்கர் சிதைந்து அழிதல் (5621-5631)

பருவரை புரைவன வன் தோள் பனி மலை அருவி நெடும் கால்
சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்,
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார்;
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்.       5.8.25

பறை புரை விழிகள் பறிந்தார், படியிடை நெடிது படிந்தார்,
பிறை புரை எயிறும் இழந்தார், பிடரொடு தலைகள் பிளந்தார்,
குறை உயிர் சிதற நெரிந்தார், குடரொடு குருதி குழைந்தார்,
முறை முறை படைகள் எறிந்தார், முடை உடல் மறிய முறிந்தார்.       5.8.26

புடையொடு விடு கனலின் காய் பொறி இடை மயிர்கள் புகைந்தார்,
தொடையொடு முதுகு துணிந்தார், சுழிபடு குருதி சொரிந்தார்,
படை இடை ஒடிய, நெடும் தோள் பறிதர, வயிறு திறந்தார்,
இடையிடை, மலையின், விழுந்தார், இகல் பொர முடுகி எழுந்தார்.       5.8.27

புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது புரண்டார்,
விதைபடும் உயிரர் விழுந்தார், விளியொடு விழியும் இழந்தார்,
கதையொடு முதிர மலைந்தார், கணைபொழி சிலையர் கலந்தார்,
உதைபட உரனும் நெரிந்தார், உதறொடு குருதி உமிழ்ந்தார்.       5.8.28

அயல் அயல் மலையொடு அறைந்தான், அடு பகை அளகை அடைந்தார்,
வியல் இடம் மறைய விரிந்தார், மிசை உலகு அடைய மிடைந்தார்,
புயல் தொடு கடலின் விழுந்தார், புடை புடை சிதைவொடு சென்றார்,
உயர்வு உற விசையின் எறிந்தான், உடலொடும் உலகு துறந்தார்.       5.8.29

தெறித்த வன்தலை, தெறித்தன செறி சுடர்க் கவசம்,
தெறித்த பைங்கழல், தெறித்தன சிலம்பொடு பொலம் தார்,
தெறித்த பல் மணி, தெறித்தன பெரும் பொறித் திறங்கள்,
தெறித்த குண்டலம், தெறித்தன கண்மணி சிதறி.       5.8.30

வாள்கள் இற்றன இற்றன வரிசிலை வயிரத்
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழுச் சூலம்
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம்
தாள்கள் இற்றன இற்றன படையுடைத் தடக்கை.       5.8.31

தெறித்த வன்தலை, தெறித்தன செறி சுடர்க் கவசம்,
தெறித்த பைங்கழல், தெறித்தன சிலம்பொடு பொலம் தார்,
தெறித்த பல் மணி, தெறித்தன பெரும் பொறித் திறங்கள்,
தெறித்த குண்டலம், தெறித்தன கண்மணி சிதறி.       5.8.32

உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வு உற்று
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள்
உக்க கப்பணம் உக்கன உயர்மணி மகுடம்.       5.8.33

தாள்களால் பலர் தடக்கைகளால் பலர் தாக்கும்
தோள்களால் பலர் சுடர் விழியால் பலர் தொடரும்
கோள்களால் பலர் குத்துகளால் பலர் தத்தம்
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார்.       5.8.34

ஈர்க்கப்பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப்பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப்பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப்பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.       5.8.35

அநுமன் செய்த போர்முறை (5632-5634)

ஓடிக் கொன்றனன் சிலவரை உடல் உடல் தோறும்
கூடிக் கொன்றனன் சிலவரைக் கொடி நெடு மரத்தால்
சாடிக் கொன்றனன் சிலவரைப் பிணம் தொறும் தடவித்
தேடிக் கொன்றனன் சிலவரைக் கறங்கு எனத் திரிவான்.       5.8.36

முட்டினார் பட முட்டினான் முறை முறை முடுகிக்
கிட்டினார் படக் கிட்டினான் கிரி என நெருங்கிக்
கட்டினார் படக் கட்டினான் கைகளால் மெய்யில்
தட்டினார் படத் தட்டினான் மலை எனத் தகுவான்.       5.8.37

உறக்கினும் கொல்லும், உணரினும் கொல்லும், மால் விசும்பில்
பறக்கினும் கொல்லும், படரினும் கொல்லும், மின் படைக்கை
நிறக் கரும் கழல் அரக்கர் கண் நெறிதொறும் பொறிகள்
பிறக்க நின்று, எறி படைகளைத் தடக்கையால் பியையும்.       5.8.38

அநுமன் செய்த போரினால் சுற்றிலும் நேர்ந்த நிகழ்ச்சிகள் (5635-5641)

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,
நீறு சேர் நெடும்தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப,
ஆறு போல் வரும் குருதி, அவ் அநுமனால் அலைப்பு உண்டு
ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது; அவ் இலங்கை.       5.8.39

கருது காலினும் கையினும் வாலினும் கட்டிச்
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான்
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்
குருதி சாறு எனப் பாய்வது குரைகடல் கூனில்       5.8.40

எடுத்து அரக்கரை எறிதொறும் அவர் உடல் எற்றக்
கொடித் திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த
தடக்கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த
பிடிக் குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய.       5.8.41

தம்தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்;
தம்தம் மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்;
தம்தம் மாக்களைத் தம்படையால் சிலர் தடிந்தார்
எற்றி மாருதி தடக்கைகளான் விசைத்து எறிய.       5.8.42

ஆடல் மாக் களிறு அனையவன், அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்,
கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்,
ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்.       5.8. 43

தரு எலாம் உடல், தறெ்றி எலாம் உடல், சதுக்கத்து
உரு எலாம் உடல், உவரி எலாம் உடல், உள் ஊர்க்
கரு எலாம் உடல், காயம் எலாம் உடல், அரக்கர்
தெரு எலாம் உடல், தேயம் எலாம் உடல் சிதறி.       5.8.44

ஊன் எலாம் உயிர் கவர் உறும் காலன் ஓய்ந்து உலந்தான்
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான்
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல்
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி.       5.8.45

அரக்கர் நடுவில் அநுமன் விளங்கிய காட்சி (5642-5645)

ஆக இச் செரு விளைவுறும் அமைதியின் அரக்கர்
மோகம் உற்றனர் ஆம் என முறை முறை முனிந்தார்
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார்
மேகம் ஒத்தனர்; மாருதி வெய்யவன் ஒத்தான்.       5.8.46

அடல் அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலின், அயரப்
புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின், பொலிவின்,
மிடல் அயில் படை மீன் என விலங்கலின், கலங்கும்
கடல் நிகர்த்தனர், மாருதி மந்தரம் கடுத்தான்.       5.8.47

கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ
நிரை மணித் தலை நெரிந்து உகச் சாய்ந்து உயிர் நீப்பார்
சுரர் நடுக்குற அழுதுகொண்டு எழுந்த நாள் தொடரும்
உரகர் ஒத்தனர் அநுமனும் கலுழனே ஒத்தான்.       5.8.48

மானம் உற்ற தம் பகையினால் முனிவு உற்று வளைந்த
மீன் உடைக் கடல் இடையினும் உலகு எலாம் மிடைந்த
ஊன் அறக் கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர்
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அநுமன்.       5.8.49

அநுமனின் விழுப்புண்

எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலிப்
பொய்த குத்தின பொதுத்தன தொளைத்தன போழ்ந்த
கொய்த சுற்றின பற்றின குடைந்தன பொலிந்த
அய்யன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு அரிதால்.       5.8.50

தேவர்கள் அநுமனைப் புகழ்தல்

கார்க் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும்
வேர்க்க, வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர்க் குழாம் படி பூசலின், ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில்.       5.8.51

அநுமன் மேல் பூச்சொரிதல்

மேவும் வெம் சினத்து அரக்கர்கள் முறை முறை விசையால்
ஏவும் பல் படை எத்தனை கோடிகள் எனினும்
தூவும்; தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த
பூவும், புண்களும், தெரிந்தில மாருதி புயத்தில்.       5.8.52

அநுமனின் தளராத நிலை

பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத் திசைதொறும் பெயர்வின்,
உயர்க்கும் விண்மிசை ஓங்கலின், மண்ணின் வந்து உறலின்,
அயர்த்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார்;
வெயர்த்திலன் மிசை, உயிர்த்திலன் நல் அற வீரன்.       5.8.53

கிங்கரர் அனைவரும் மடிதல்

எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ
நஞ்சம் உண்டவர் ஆம் என அநுமன் மேல் நடந்தார்
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று
அஞ்சினார் இல்லை; அரக்கரில் வீரர் மற்று யாரே.       5.8.54

பொழிற்காவலர் இராவணனிடம் ஓடுதல் (5651-5652)

வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார்;
நந்த வானத்து நாயகர் ஓடினர் நடுங்கிப்
பிந்து காலினர் கையினர் பெரும்பயம் பிடரின்
உந்த ஆயிரம் பிணக்குவை மேல் விழுந்து உளைவார்.       5.8.55

விரைவின் உற்றனர் விம்மல் உற்று யாதொன்றும் விளம்பார்
கரதலத்தினால் பட்டதும் கட்டு உரைக்கின்றார் :
தரையின் நிற்கிலர் திசைதொறும் நோக்கினர் சலிப்பார்;
அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான்.       5.8.56

காவலாளிகளை இராவணன் வினாவுதல்

"இறந்து நீங்கினரோ? இன்று என் ஆணையை இகழ்ந்து,
துறந்து நீங்கினரோ? அன்றி, வெம் சமர் தொலைந்தார்,
மறந்து நீங்கினரோ? என்கொல் வந்தது?" என்று உரைத்தான்,
நிறம் செருக்குற, வாய்தொறும் நெருப்பு உமிழ்கின்றான்.       5.8.57

கிங்கரர் பட்டமை கூறல்

"சலம் தலைக் கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர் செரு களம் அத்து அஞ்சினார் அலர் :
புலம் தெரி பொய்க் கரி புகலும் புன்கணார்
குலங்களின் அவிந்தனர் குரங்கினால்!"என்றார்.       5.8.58

இராவணன் நாணுதல்

ஏவலின் எய்தினர் இருந்த எண்திசைத்
தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான்;
"யாவது? என்று அறிந்திலிர் போலுமால்!"என்றான்
மூவகை உலகையும் விழுங்க மூள்கின்றான்.       5.8.59

இராவணன் மீட்டும் வினாவுதல்

மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார்;
தோட்டு அலர் இன மலர்த் தொங்கல் மோலியான்
"வீட்டியது அரக்கரை என்னும் வெவ்வுரை
கேட்டதோ? கண்டதோ? கிளத்துவீர்!"என்றான்.       5.8.60

அரக்கர் அழிந்ததை அறிவித்தல்

"கண்டனம் ஒரு புடை நின்று கண்களால்
தணெ் திரைக் கடல் என வளைந்த சேனையை
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர்
உண்டது; அக் குரங்கு இனம் ஒழிவது அன்று!"என்றார்.       5.8.61
----------------

5.9 சம்புமாலி வதைப் படலம் 5658 - 5708

அனுமனைப் பிணித்துக் கொணருமாறு இராவணன் சம்புமாலியை ஏவுதல்

கூம்பின கையன் நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள்
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனைப் பாரா,
'வாம் பரித் தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றித்
தாம்பினில் பற்றித் தந்து என் மனச் சினம் தணித்தி'என்றான்.       5.9.1
சம்புமாலி மகிழ்ந்து போருக்குப் புறப்படல்

ஆயவன் வணங்கி, "ஐய! அளப்பரும் அரக்கர் முன்னர்,
'நீ இது முடித்தி'என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி
ஏயினை! என்னப் பெற்றால், என்னின் யார் உயர்ந்தார்?" என்னாப்
போயினன்; இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான்.       5.9.2
சம்புமாலியுடன் சென்ற சேனைகள்

தன்னுடைத் தானையோடும், தயமுகன்'தருக'என்று ஏய
மன் உடைச் சேனையோடும், தாதை வந்து ஈந்த வாளின்
மின் உடைப் பரவையோடும், வேறு உேளார் சிறப்பின் விட்ட
பின் உடை அனிகத்தோடும், பெயர்ந்தனன், பெரும்போர் பெற்றான்.       5.9.3
யானையும் தேரும்

உரும் ஒத்த முழக்கின் செங்கண் வெள் எயிற்று ஓடை நெற்றிப்
பருமித்த கிரியில் தோன்றும் வேழமும், பதுமத்து அண்ணல்
நிருமித்த எழிலி முற்றிற்று என்னல் ஆம் நிலைய நேமிச்
சொரி முத்த மாலை சூழும் துகில் கொடித் தடம் தேர் சுற்ற.       5.9.4
குதிரையும் காலாளும்

காற்றினை மருங்கில் கட்டிக் கால்வகுத்து உயிரும் கூட்டிக்
கூற்றினை ஏற்றி அன்ன குலப்பரி குழுவக், குன்றின்
தூற்றினின் எழுப்பி ஆண்டுத் தொகுத்து எனச் சுழல் பைங்கண்ண
வேற்று இனப் புலியேறு என்ன, வியந்து எழும் பதாதி ஈட்டம்.       5.9.5
பலவகைப் படைக்கலமும் விளங்குதல்

தோமரம், உலக்கை, கூர்வாள், சுடர்மழு, குலிசம், தோட்டி
தாம் அரம் தின்ற கூர்வேல், தழல் ஒளிவட்டம், சாபம்,
காமர் தண்டு, எழுக்கள், காந்தும் கப்பணம், காலபாசம்,
மாமர வலயம், வெம் கோல் முதலிய வயங்க மாதோ.       5.9.6
பதாகைகள் செறிதல்

எத்திய அயில், வேல், குந்தம், எழுமுதல் இனைய ஏந்திக்
குத்திய திளைப்ப, மீதில் குழுவின மழை மாக் கொண்டல்
பொத்து உகு பொருவு இல் நல் நீர் சொரிவன போவ போலச்
சித்திரப் பதாகை ஈட்டம் திசை தொறும் செறிவ செல்ல.       5.9.7
பலவகை ஒலியெழல்

பல் இயம் துவைப்ப, நல் மாப் பணிலங்கள் முரலப், பொன் தேர்ச்
சில்லிகள் இடிப்ப, வாசி சிரித்திடச் செறி பொன் தாரும்,
வில்லும் நின்று இசைப்ப, யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப, விண் தோய்
ஒல் ஒலி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்கும் மன்னோ.       5.9.8
தூளி பரவுதல்

மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கித் தோன்ற
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன;
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய
பொன் நகர் தகர்ந்து, பொங்கி, ஆர்த்து, எழு, தூளி போர்ப்ப.       5.9.9
சம்புமாலியொடு சென்ற சேனையின் அளவு

ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர், அத்தேர்க்கு
ஏயின இரட்டி யானை, யானையின் இரட்டி பாய்மா,
போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போல் ஆம்,
தீயவன் தடம் தேர் சுற்றித் தறெ்று எனச் சென்ற சேனை.       5.9.10

தேர் வீரர்

வில் மறைக் கிழவர், நானா விஞ்சையர், வரத்தின் மிக்கார்,
வல் மறக் கண்ணர், ஆற்றல் வரம்பு இலா வயிரத் தோளார்,
தொல் மறக் குலத்தர், தூணி தூக்கிய புறத்தர், மார்பின்
கல் மறைத்து ஒளிரும் செம்பொன் கவசத்தர், கடும் தேர் ஆட்கள்.       5.9.11

யானை வீரர்

பொரு திசை யானை ஊரும் புனிதனைப் பொருவும் பொற்பர்,
சுரி படைத் தொழிலும் மற்றை அங்குசத் தொழிலும் தொக்கார்
நிருதியில் பிறந்த வீரர், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணர்,
பரிதியில் பொலியும் மெய்யர், படு மதக் களிற்றின் பாகர்.       5.9.12

குதிரை வீரர்

ஏர் கெழு திசையும், சாரி பதினெட்டும், இயல்பின் எண்ணிப்
போர் கெழு படையும் கற்ற வித்தகப் புலவர்; போரில்
தேர் கெழு மறவர், யானைச் சேவகர், சிரத்தில் செல்லும்
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவப் போனார்.       5.9.13

சம்புமாலி நால்வகைத்தானையொடும் போர்க்குச் செல்லுதல்

அந் நெடும் தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்ற,
பொன் நெடும் தேரில் போனான்; பொருப்பு இடை நெருப்பில் பொங்கி,
தன் நெடும் கண்கள் காந்த, தாழ்பெரும் கவசம் மார்பில்
மின் இட, வெயிலும் வீச, வில் இடும் எயிற்று வீரன்.       5.9.14

அரக்கர் வரவு நோக்கி நின்ற அனுமன் தோற்றம் (5672-5673)

நந்தன வனத்துள் நின்ற, நாயகன் தூதன் தானும்,
"வந்திலர் அரக்கர்,"என்னும் மனத்தினன், வழியை நோக்கி,
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற,
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான்.       5.9.15

கேழ் இரும் மணியும், பொன்னும், விசும்பு இருள் கிழித்து வீங்க,
ஊழ் இரும் கதிர்கேளாடும் தோரணத்து உம்பர் மேலான்,
சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி,
ஆழியின் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான்.       5.9.16

அனுமன் ஆர்த்தல்

செல்லொடு மேகம் சிந்தத், திரைக்கடல் சிலைப்புத் தீர,
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால,
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடிபுக அச்சம், வீரன்
வில் என இடிக்க, விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான்.       5.9.17

அனுமன் தோள்கொட்டுதல்

நின்றன திசைக்கண் வேழம், நெடும் களிச் செருக்கு நீங்க,
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கு என, சிந்தி வானில்
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர, பூவும்
குன்றமும் பிளக்க, வேலை துளக்கு உற, கொட்டினான் தோள்.       5.9.18

அரக்கரும் ஆர்த்து அனுமனை அணுகமுடியாது நிற்றல்

அவ்வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார்,
செவ்வழிச் சேறல் ஆற்றார், பிணப் பெரும் குன்றம் தறெ்றி
வெவ்வழிக் குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க
"எவ்வழிச் சேறும்,"என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார்.       5.9.19

அணிவகுத்து எதிர்ந்த சம்புமாலியைக் கண்டு அனுமன் மகிழ்தல்

ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து, அனிகம் தன்னை
மூண்டு இரு புடையும் முன்னும் முறை முறை முடுக ஏவித்
தூண்டினன், தானும் திண் தேர்; தோரணத்து இருந்த தோன்றல்
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசயத் திண் தோள்.       5.9.20

அனுமனும் போர்க்கு அமைந்து நிற்றல்

ஐயனும் அமைந்து நின்றான், ஆழியான் அளவின் நாமம்
நெய் சுடர் விளக்கில் தோன்றும் நெற்றியே நெற்றி ஆக,
மொய் மயிர்ச் சேனை பொங்க, முரண் அயில் உகிர் வாள் மொய்த்த
கைகளே கைகள் ஆக, கடைக்குழை திருவால் ஆக.       5.9.21

அரக்கர் அனுமன்மேல் படைவழங்கல்

வயிர்கள் வால் வளைகள் விம்ம, வரி சிலை சிலைப்ப, மாயப்
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப, மூரிப் பல் இயம் குமுற, பற்றிச்
செயிர்கொள் வாள் அரக்கர், சீற்றம் செருக்கினர், படைகள் சிந்தி,
வெயில்கள் போல் ஒளிகள் வீச, வீரன் மேல் கடிதுவிட்டார்.       5.9.22

அனுமன் போர்த்திறம் (5680-5697)

கருங்கடல் அரக்கர்தம் படைக்கலம், கரத்தால்
பெருங்கடல் உறப், புடைத்து, இறுத்து உகப் பிசைந்தான்;
விரிந்தன பொறிக் குலம்; நெருப்பு என வெகுண்டு ஆண்டு
இருந்தவன், கிடந்தது ஒர் எழு தெரிந்து எடுத்தான்.       5.9.23

இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான்
திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார்;
விரிந்தவர் குவிந்தவர் விலங்கினர் கலந்தார்
பொருந்தினர் நெருங்கினர் களம் படப் புடைத்தான்.       5.9.24

எறிந்தன எய்தன இடி உருமு என மேல்
செறிந்தன படைக்கலம் இடைக்கையின் சிதைத்தான்
முறிந்தன தெறும் கரி முடிந்தன தடம் தேர்
மறிந்தன பரி நிரை வலக்கையின் மலைந்தான்.       5.9.25

அனுமனால் யானைப்படை அழிதல்

இழந்தன நெடும் கொடி இழந்தன இரும் கோடு
இழந்தன நெடும் கரம் இழந்தன வியன் தாள்
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை.       5.9.26

தேர்ப்படை அழிதல்

நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார்
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால்
நெரிந்தன கொடிஞ்சிகள் நெரிந்தன வியன்தார்
நெரிந்தன கடும்பரி நெரிந்தன நெடும் தேர்.       5.9.27

குதிரைப்படை அழிதல்

ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த;
இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த;
மடிந்தன மறிந்தன முறிந்தன மலைபோல்
படிந்தன முடிந்தன கிடந்தன பரிமா.       5.9.28

காலாட்படை அழிதல்

வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்;
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்
சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்.       5.9.29

கரிகொடு கரிகளைக் களம் படப் புடைத்தான்
பரிகொடு பரிகளைத் தலத்து இடைப் படுத்தான்
வரி சிலை வயவரை வயவரின் மடித்தான்
நிரைமணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான்.       5.9.30

மூளையும் உதிரமும் முழங்கு இரும் குழம்பாய்
மீள் இரும் குழைபடக் கரி விழுந்து அழுந்த
தாெளாடும் தலை உக தடம் நெடும் கிரிபோல்
தோெளாடும் நிருதரை வாெளாடும் துகைத்தான்.       5.9.31

மல்லொடு மலை மலைத் தோளரை வளைவாய்ப்
பல்லொடும் நெடும் கரப் பகட்டொடும் பரும் தாள்
வில்லொடும் அயிலொடும் விறலொடும் விளிக்கும்
சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான்.       5.9.32

புகை நெடும் பொறி புகும் திசைதொறும் பொலம் தார்ச்
சிகை நெடும் சுடர் விடும் தேர் தொறும் சென்றான்;
தகை நெடும் கரிதொறும் பரிதொறும் சரித்தான்;
நகை நெடும் படைதொறும் தலைதொறும் நடந்தான்.       5.9.33

வென்றி வெம் புரவியின் வெரிநினும் விரவார்
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணித் தேர்
ஒன்றின் நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ்
குன்றினும் கடை உகத்து உரும் எனக் குதித்தான்.       5.9.34

பிரிவு அரும் ஒரு பெரும் கோல் என பெயரா
இரு வினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும்
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான்.       5.9.35

"அண்ணல் அவ் அரியினுக்கு அடியவர் அவன்சீர்
நண்ணுவர்"எனும் பொருள் நவை அறத் தெரிப்பான்
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் மலைந்தார்
கண்ணினும் மனத்தினும் தனித்தனி கலந்தான்.       5.9.36

கொடித் தடம் தேரொடும் குரகதக் குழுவை
அடித்து ஒரு தடக் கையின் நிலத்திடை அரைத்தான்;
இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பைப்
பிடித்து ஒரு தடக் கையின் உயிர் உகப் பிழிந்தான்.       5.9.37

கறுத்து எழு நிறத்தினர் எயிற்றினர் கயிற்றார்
செறுத்து எரி விழிப்பவர் சிகைக் கழு வலத்தார்
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார்;
ஒறுத்து உருத்திரன் என தனித்தனி உதைத்தான்.       5.9.38

சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள்
மிக்கன தேர் பரி குடை கொடி விரவி
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி
புக்கன கடல் இடை நெடும் கரம் பூட்கை.       5.9.39

எட்டின விசும்பினை எழு பட எழுந்த
முட்டின மலைகளை முயங்கின திசையை
ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து
தட்டு முட்டு ஆடின தலையொடு தலைகள்.       5.9.40

சம்புமாலி தனிப்பட்டுச் சீற்றங்கொள்ளுதல்

கானே காவல் வேழக் கணங்கள், கதம் வாள் அரி கொன்ற
வானே எய்தத் தனியே நின்ற, மதம் மால் வரை ஒப்பான்,
தேனே புரை கண், கனலே சொரிய, சீற்றம் செருக்கினான்;
தானே ஆனான் சம்புமாலி, காலன் தன்மையான்.       5.9.41

சம்புமாலி போர்க்கு விரைதல்

காற்றின் கடிய கலினம் புரவி நிருதர் களத்து உக்கார்;
ஆற்றுக் குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளைச்
சேற்றில் செல்லா தேரின் ஆழி, ஆழும்; நிலை தேரா
வீற்றுச் செல்லும் வெளியோ இல்லை, அளியன் விரைகின்றான்       5.9.42

அனுமன், தனிநின்ற சம்புமாலியிடம் இரங்கிக் கூறுதல்

"ஏதி ஒன்றால், தேரும் அஃதால், எளியோர் உயிர் கோடல்
நீதி அன்றால், உடன்வந்தாரைக் காக்கும் நிலை இல்லாய்!
சாதி, அன்றேல் பிறிது என் செய்தி? அவர் பின் தனி நின்றாய்!
போதி,"என்றான்; பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான்       5.9.43

சம்புமாலி சினந்து அனுமன்மீது அம்பு தொடுத்தல்

"நன்று, நன்று உன்கருணை,"என்னா, நெருப்பு நக நக்கான்,
"பொன்று வாரின் ஒருவன் என்றாய் போலும் எனை"என்னா,
வன்திண் சிலையின் வயிரக் காலால் வடித் திண் சுடர்வாளி
ஒன்று பத்து நூறு நூறாயிரமும் உதைப்பித்தான்.       5.9.44

சம்புமாலியின் அம்புகளை அனுமன் விலக்குதல்

"செய்தி செய்தி! சிலை கைக் கொண்டால் வெறும் கை திரிவோரை
நொய்தின் வெல்வது அரிதோ?" என்னா, முறுவல் உக நக்கான்;
அய்யன், அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான்       5.9.45

அனுமன்கை எழுவைச் சம்புமாலி அறுத்து வீழ்த்துதல்

முற்ற முனிந்தான் நிருதன், முனியா, முன்னும் பின்னும் சென்று
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா,
சுற்றும் நெடுந்தேர் ஓட்டித் தொடர்ந்தான், தொடரும் துறை காணான்,
வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான்       5.9.46

சம்புமாலியை அனுமன் கொல்லுதல்

சலித்தான் ஐயன், கையால் எய்யும் சரத்தை உகச் சாடி,
ஒலித்தார் அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரின் உள் புக்கு,
கலித்தான் சிலையைக் கையால் வாங்கிக் கழுத்தினிடை இட்டு
வலித்தான்; பகுவாய் மடித்து மலைபோல் தலை மண்ணிடை வீழ       5.9.47

பருவத்தேவர் சம்புமாலி இறந்தமை சொல்லச் செல்லுதல்

குதித்து, தேரும், கோல் கொள் ஆளும், பரியும் குழம்பு ஆக
மிதித்து, பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான்;
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி,
உதித்துப் புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார்.       5.9.48

அனுமனால் இலங்கையில் அறமும் தளிர்த்தமை

பரிந்து புலம்பும் மகளிர் காண, கணவர் பிணம் பற்றி
விரிந்த குருதிப் பேராறு ஈர்த்து மனைகள் தொறும் வீச,
இரிந்தது இலங்கை; எழுந்தது அழுகை; "இன்று, இங்கு இவனாலே,
சரிந்தது அரக்கர் வலி" என்று எண்ணி அறமும் தளிர்த்ததால்.       5.9.49

பருவத்தேவர் இராவணனிடம் சம்புமாலி இறந்த செய்தி சொல்லுதல்

புக்கார் அமரர் பொலம் தார் அரக்கன் பொரு இல் பெரும் கோயில்,
விக்கா நின்றார், விளம்பல் ஆற்றார், வெருவி விம்முவார்,
நக்கான் அரக்கன்,'நடுங்கல்'என்றான்; 'ஐய! நமர் எல்லாம்,
உக்கார், சம்புமாலி உலந்தான், ஒன்றே குரங்கு'என்றார்       5.9.50

இராவணன் சினந்து அனுமனைப் பிடிக்க எழக்கண்ட பஞ்சசேனாபதிகள் கூறுதல்

என்னும் அளவின் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான்,
உன்ன உன்ன உதிரக் குமிழி விழி ஊடு உமிழ்கின்றான்,
"சொன்ன குரங்கை, யானே பிடிப்பன் கடிது தொடர்ந்து", என்றான்.
அன்னது அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார்       5.9.51
-------------------

5.10 பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் 5709 - 5775

படைத்தலைவர் ஐவர் இராவணனிடம் கூறல் (5709-5712)

சிலந்தி உண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல், திறலோய்!
கலந்த போரில் நின் கண் புலம் கடும் கனல் கதுவ,
உலந்த, மால்வரை அருவியாறு ஒழுக்கு அற்ற ஒழுக்க,
புலர்ந்த மாமதம் பூக்கும் அன்றே! திசைப் பூட்கை       5.10.1

இலங்கு வெம் சினத்து அம் சிறை எறுழ் வலிக் கலுழன்
உலங்கின் மேல் எழுந்தன்ன, நீ, குரங்கின்மேல் உருக்கின்,
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து, அல்லும் நன் பகலும்
குலுங்கும் வன் துயர் நீங்குமால், வெள்ளி அம் குன்றம்.       5.10.2

உறுவது என்கொலோ? உரன் அழிவு என்பது ஒன்று உடையார்
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர், கேட்கிலர், பெயர்ந்தார்,
சிறுமை ஈது ஒப்பது யாது? நீ குரங்கின்மேல் செல்லின்,
முறுவல் பூக்கும் அன்றே! நின்ற மூவர்க்கும் முகங்கள்.       5.10.3

அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால்'அரச!
வென்றி இல்லவர் மெல்லியோர் தமைச் செல விட்டாய்
நன்று நீ இன்று காண்டியேல் எமைச் செல நயத்தி
என்று கைதொழுது இறைஞ்சினர்; அரக்கனும் இசைந்தான்.       5.10.4

படைத்தலைவர் கட்டளை

உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார்
திலகம் மண் உற வணங்கினர்; கோயிலில் தீர்ந்தார்;
அலகில் தேர் பரி கரியொடு ஆள் மிடைந்த போர் அரக்கர்
'தொலைவு இலாதது கதும் என வருக'எனச் சொன்னார்.       5.10.5

படை திரளுதல்

ஆனை மேல் முரசு அறைந்தனர் வள்ளுவர் அழைத்தார்
பேன வேலையில் புடை பரந்தது பெரும் சேனை;
சோனை மா மழை முகில் எனப் போர்ப் பணை துவைத்த;
மீன வான் இடு வில் எனப் படைக் கலம் மிடைந்த.      5.10.6

வெண்கொடிகளின் தோற்றம்

தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள
மான மாற்று அரு மாருதி முனிய நாள் உலந்து
போன மாற்றலர் புகழ் எனக் கால் பொரப் புரண்ட;
வான யாற்று வெண் திரை என வரம்பு இல பரந்த.       5.10.7

படைகளின் போர்க்கோலம்

விரவு பொன் கழல் விசித்தனர்; வெரிந் உற்று விளங்கச்
சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர்; சமையக்
கருவி புக்கனர் அரக்கர்; மா பல்லணம் கலினப்
புரவி இட்ட; தேர் பூட்டின; பருமித்த பூட்கை.       5.10.8

படைகளால் நிகழ்ந்தவை

ஆறு செய்தன ஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச்
சேறு செய்தன தேர்களின் சில்லி; அச் சேற்றை
நீறு செய்தன புரவியின் குரம்; மற்றை நீற்றை
ஈறு செய்தன அப் பரிக் கலின மா விலாழி.       5.10.9

படைகளின் பேரொலி

வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்,
முழங்கு வெம் களிற்று அதிர்ச்சியும், மொய் கழல் ஒலியும்,
தழங்கு பல் இயத்து அமலையும், கடை யுகத்து ஆழி
முழங்கும் ஓதையின் மும்மடங்கு எழுந்தது முடுகி.       5.10.10

படைகளின் அளவு

ஆழித் தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே
சூழிப் பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின் தொகைய
ஊழிக் காற்று அன்ன புரவி; மற்று அவற்றினுக்கு இரட்டி
பாழித் தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி       5.10.11

படைகளின் நெருக்கம்
கூய்த் தரும் தொறும், தரும் தொறும், தானை வெம் குழுவின்
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க,
காய்த்து அமைந்த வெம் கதிர்ப் படை ஒன்று ஒன்று கதுவித்
தேய்த்து எழுந்தன; பொறிக் குலம் மழைக் குலம் தீய.       5.10.12

யானைப் படை

பண் மணிக் குலம் யானையின் புடைதொறும் பரந்த
ஒண் மணிக் குலம் மழை இடை உரும் என ஒலிப்ப;
கண் மணிக் குலம் கனல் எனக் காந்துவ; கதுப்பின்
தண் மணிக் குலம் மழை எழு கதிர் எனத் தழைப்ப.       5.10.13

அரக்க வீரருக்கு இரங்கிச் சுற்றத்தார் தடுத்தல்

தொக்க தம்புடை சுரிகுழல் மடந்தையர் தொடிக்கை
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி;
'ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர; ஒருவர்
புக்கு மீண்டிலர்'என்று அழுது இரங்கினர் புலம்பி.       5.10.14

ஐவரும் படையொடு செல்லல்

கை பரந்து எழு சேனை அம் கடல் இடைக் கலந்தார்;
செய்கை தாம் வரும் தேர் இடைக் கதிர் எனச் செல்வார்;
மெய்கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார்;
ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார்.       5.10.15

ஐவரின் வீரம் (5724-5732)

முந்து இயம் பல கறங்கிட, முறை முறை பொறிகள்
சிந்தி, அம்பு உறு கொடும் சிலை உருமு எனத் தெறிப்பார்;
வந்து இயம்பு உறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலி ஆர்,
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார்.       5.10.16

வாசவன் வயக் குலிசமும் வருணன் வன் கயிறும்,
ஏசில் தென் திசைக் கிழவன் தன் எரி முனை எழுவும்,
ஈசன் வன் தனிச் சூலமும் என்று இவை ஒன்றும்
ஊசி போழ்வது ஓர் வடுச் செயா நெடும் புயம் உடையார்       5.10.17

சூர் தடிந்தவன் மயில் இடைப் பறித்த வன் தோகை
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடைப் பறித்த
மூரி வெம் சிறகு இடை இட்டுத் தொடுத்தன முறுக்கி
வீர சூடிகை நெற்றியின் அயல் இட்டு விசித்தார்.       5.10.18

பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையர்;
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி
மின் திணிந்த அன ஓடையின் வீர பட்டத்தர்.       5.10.19

நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர்ப்
பதியொடும் பெரும் திருப் பறித்த பண்டைநாள்
விதி என அன்னவன் வெந் இட்டு ஓடவே
பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார்.       5.10.20

இந்திரன் இசை இழந்து ஏகுவான் இகல்
தந்திமுன் கடவினன் முடுக தாம் அதன்
மந்தர வால் அடி பிடித்து'வல்லையேல்
உந்துதி இனி'என வலிந்த ஊற்றத்தார்.       5.10.21

'பால்நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின்
கோல் நினைத்திலன்'என உலகம் கூறலும்
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான்
காலனைக் காலினில் கையில் கட்டினார்.       5.10.22

மலைகளை நகும் தட மார்பர் மால் கடல்
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன்
கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார்.       5.10.23

தோல் கிளர் திசை தொறும் உலகைச் சுற்றிய
சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும்
கால் கிளர்ந்து ஓங்கினும் காலம் கையுற
மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார்.       5.10.24

அணிவகுத்து நிற்கும் ஐவரை அனுமன் பார்த்தல்

இவ் வகை அனைவரும் எழுந்த தானையர்
மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார்;
கையொடு கையுற அணியும் கட்டினார்
ஐயனும் அவர் நிலை அறிய நோக்கினான்.       5.10.25

வானவர் மனநிலை

அரக்கரது ஆற்றலும் அளவு இல் சேனையின்
தருக்கும் அம் மாருதி தனிமைத் தன்மையும்
பொருக்கு என நோக்கிய புரந்தரர் ஆதியர்
இரக்கமும் அவலமும் துளக்கும் எய்தினார்.       5.10.26

அரக்கர் படையை அனுமன் நோக்குதல்

'இற்றனர் அரக்கர் இப் பகல் உளே'எனாக்
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான்
முற்று உறச் சுலாவிய முடிவு இல் தானையைச்
சுற்று உற நோக்கி தன் தோளை நோக்கினான்.       5.10.27

அரக்கர் அனுமனைப்பற்றிக் கருதல்

'புன்தலைக் குரங்கு இது போலுமால் அமர்
வென்றது; விண்ணவர் புகழை வேரொடும்
தின்ற வல் அரக்கரைத் திருகித் தின்றதால்
என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண் இலார்.       5.10.28

அனுமன் பேருருவம் கொள்ளல்

ஆயிடை அனுமனும் அமரர்கோன் நகர்
வாயில் நின்று அவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச்
சேயொளி தோரணத்து உம்பர்ச் சேண் நெடு
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான்.       5.10.29

அரக்கர் சினந்து படைவழங்கல்

வீங்கிய வீரனை வியந்து நோக்கிய
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம்
வாங்கிய சிலையினர் வழங்கினார் படை;
ஏங்கிய சங்கு இனம்; இடித்த பேரியே.       5.10.30

அரக்கர் எறிந்த படைக்கலங்களை அனுமன் பொருட்படுத்தாமை

எறிந்தனர் எய்தனர் எண் இறந்தன
பொறிந்து எழு படைக்கலம் அரக்கர்; பொங்கினார்;
செறிந்தன மயிர்ப் புறம்;'தினவு தீர்வுறச்
சொறிந்தனர்'என இருந்து ஐயன் தூங்கினான்.       5.10.31

அனுமன் இருப்புத்தூணை எடுத்தல்

உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர்;
செற்று உற நெருக்கினர்; செருக்கும் சிந்தையர்;
'மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து
எற்றுவன்'என எழு அனுமன் ஏந்தினான்.       5.10.32

அனுமன் செய்த போர் (5741-5746)

ஊக்கிய படைகளும் உருத்த வீரரும்
தாக்கிய பரிகளும் தடுத்த தேர்களும்
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல்
நூக்கிய கரிகளும் புரள நூக்கினான்.       5.10.33

வார் மதம் கரிகளின் கோடு வாங்கி மா
தேர் படப் புடைக்கும்; அத் தேரின் சில்லியால்
வீரரை உருட்டும்; அவ் வீரர் வாளினால்
தார் உடைப் புரவியைத் துணியத் தாக்குமால்.       5.10.34

இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறு
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால்;
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால்.       5.10.35

மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு
ஆயிரம் தேர் பட அரைக்குமால்; அழித்து
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால்.       5.10.36

உதைக்கும் வெம் கரிகளை; உழக்கும் தேர்களை;
மிதிக்கும் வன் புரவியை; தேய்க்கும் வீரரை;
வதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண் இடை;
குதிக்கும் வன் தலை இடை; கடிக்கும் குத்துமால்.       5.10.37


விசையின் மான் தேர்களும் களிறும் விட்டு அகன்
திசையும் ஆகாயமும் செறியச் சிந்துமால்;
குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும்
பிசையுமால் அரக்கரைப் பெரும் கரங்களால்.       5.10.38

அநுமன் கடலில் வீழ்த்திய படைகள் (5747-5750)

தீ உறு பொறி உடைச் செம் கண் வெம் கை மா
மீ உறத் தடக் கையால் வீரன் வீசுதோறு
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே.       5.10.39

தாரொடும் உருெளாடும் தடக் கையால் தனி
வீரன் விட்டு எறிந்தன கடலின் வீழ்வன
வாரியின் எழுசுடர்க் கடவுள் வானவன்
தேரினை நிகர்த்தன புரவித் தேர்களே.       5.10.40

வீ உற விண் இடை முட்டி வீழ்வன
ஆய் பெரும் திரைக் கடல் அழுவத்து ஆழ்வன
ஓய்வு இல புரவி வாய் உதிரம் கால்வன
வாய் இடை எரி உடை வடவை போன்றவே.       5.10.41

வரிந்து உற வல்லிதில் சுற்றி வாலினால்
விரிந்து உற வீசலின் கடலின் வீழ்ந்தவர்
திரிந்தனர்; செறி கயிற்று அரவினால் திரி
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார்.       5.10.42

போரில் இரத்தப் பெருக்கு

வீரன் வன்தடக் கையால் எடுத்து வீசிய
வார் மத கரியினில் தேரின் வாசியின்
மூரி வெம் கடல் புகக் கடிதின் முந்தின;
ஊரின் வெம் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின.       5.10.43

பிணக் குவியல்

பிறைக் கடை எயிற்றின பிலத்தின் வாயின
கறைப் புனல் பொறிகேளாடு உமிழும் கண்ணன
உறுப்பு உறு படையின உதிர்ந்த யாக்கைகள்
மறைத்தன மகரம் தோரணத்தை வான் உற.       5.10.44

கவிக் கூற்று

குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உள;
அன்றினர் பலர் உளர்; ஐயன் கை உள;
பொன்றுவது அல்லது புறத்துப் போவரோ.       5.10.45

அனுமன் அரக்கர் படையை ஒழித்தல்

முழுமுதல் கண்ணுதல் முருகன் தாதை கை
மழு எனப் பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினில் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினைக் கரி எனக் கொன்று நீக்கினான்.       5.10.46

அனுமனைப் படைத் தலைவர் அணுகல்

உலந்தது தானை; உவந்தனர் உம்பர்;
அலந்தலை உற்றது அவ் ஆழி இலங்கை;
கலந்தது அழும் குரலின் கடல் ஓதை;
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார்;       5.10.47

ஐவரும் பல்லாயிரம் அம்புகளை விடுதல்

ஈர்த்து எழு செம் புனல் எக்கர் இழுக்க
தேர்த் துணை ஆழி அழுந்தினர் சென்றார்;
ஆர்த்தனர்; ஆயிரம் ஆயிரம் அம்பால்
தூர்த்தனர்; அஞ்சனை தோன்றலும் நின்றான்.       5.10.48

அநுமன் தேர்ப்பொறியைச் சிதைத்தல்

எய்த கடும்கணை யாவையும் எய்தா
நொய்து அகலும்படி கைகளின் நூறா
பொய் தகடு ஒன்று பொருந்தி நெடும் தேர்
செய்த கடும் பொறி ஒன்று சிதைத்தான்.       5.10.49

அநுமன் ஐவருள் ஒருவனைப் பொருது அழித்தல் (5758-5759)

உற்று உறு தேர் சிதையாமுன் உயர்ந்தான்
முற்றின வீரனை வானின் முனிந்தான்
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான்
எற்றினன்; அஃது அவன் வில்லினில் ஏற்றான்.       5.10.50

முறிந்தது மூரி வில்; அம் முறியே கொண்டு
எறிந்த அரக்கன் ஓர் வெற்பை எடுத்தான்;
அறிந்த மனத்தவன் அவ் எழுவே கொண்டு
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான்.       5.10.51

மற்றை நால்வரும் அநுமனும் பொருதல் (5760-5761)

ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த
கொழுந்து உறு தீ என வெய்த்துறு கொட்பர்
பொழிந்தனர் வாளி; புகைந்தன கண்கள்;
விழுந்தன சோரி அவ் வீரன் மணித் தோள்.       5.10.52

ஆயிடை வீரனும் உள்ளம் அழன்றான்;
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான்;
மீ எரி உய்ப்பது ஒர் கல் செல விட்டான்;
தீயவர் அச் சிலையைப் பொடி செய்தார்       5.10.53

நால்வருள் ஒருவனை அநுமன் அழித்தல் (5762-5764)

தொடுத்த தொடுத்த சரங்கள் துரந்த;
அடுத்து அகன் மார்பில் அழுந்தி அகன்ற;
மிடல் தொழிலான் விடு தேரொடு நொய்தின்
எடுத்து ஒருவன்தனை விண்ணின் எறிந்தான்.       5.10.54

ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம்
நீந்தியது; ஓடி நிமிர்ந்தது; வேகம்
ஓய்ந்தது; வீழ்வதன் முன் உயர் பாரில்
பாய்ந்தவன் மேல் உடன் மாருதி பாய்ந்தான்.       5.10.55

மதத்த களிற்றினில் வாள் அரி ஏறு
கதத்தது பாய்வது போல் கதிகொண்டு
குதித்து அவன் மால்வரை மேனி குழம்ப
மிதித்தனன் வெம் சின வீரருள் வீரன்.       5.10.56

அநுமன் பின்னும் இருவரை அழித்தல் (5765-5770)

மூண்ட சினத்தவர் மூவர் முனிந்தார்
தூண்டிய தேரர் சரங்கள் துரந்தார்
வேண்டின வெம் சமம் வேறு விளைப்பார்
'ஈண்டு இனி ஏகுதிர்'என்று எதிர் சென்றார்.       5.10.57

திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்
மருண்டு விசும்பு உறைவோர்களும் அஞ்ச
முரண்தரு தேர் அவை ஆண்டு ஒரு மூன்றின்
இரண்டை இரண்டு கையும் கொடு எழுந்தான்.       5.10.58

தூங்கின பாய் பரி; சூதர் உலைந்தார்
வீங்கின தோளவர் விண்ணில் விசைத்தார்;
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலாமுன்
ஓங்கிய மாருதி ஒல்லையில் உற்றான்.       5.10.59

கால் நிமிர் வெம் சிலை கையின் இறுத்தான்;
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான்;
ஏனை ஓர் வெம் படை இல்லவர் எஞ்சார்
வான் இடை நின்று உயர் மல்லின் மலைந்தார்.       5.10.60

வெள்ளை எயிற்றர் கறுத்து உயா மெய்யர்
பிள்ள விரித்த பிலப் பெரு வாயர்
கொள்ள உருத் துடர் கோள் அரவு ஒத்தார்;
ஒள் இகல் வீரன் அருக்கனை ஒத்தான்.       5.10.61

தாம்பு என வாலின் வரிந்து உயர் தாேளாடு
ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான்;
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்வார்;
ஆம்பல் நெடும்பகை போல் அவன் நின்றான்.       5.10.62

எஞ்சிய ஒருவனையும் அனுமன் ஒழித்தல்

நின்றனன் ஏனையன்; நின்றது கண்டான்;
குன்று இடை வாவு உறு கோளரி போல
மின் திரி வன் தலை மீது குதித்தான்;
பொன்றி அவன் புவி தேரொடு புக்கான்.       5.10.63

கவிக் கூற்று

வஞ்சமும் களவும் வெஃகி, வழி அலா வழிமேல் ஓடி,
நஞ்சினும் கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய நீரார்
வெம் சின அரக்கர் ஐவர், ஒருவனே வெல்லப்பட்ட
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார்; அவனும் நல் அறிவு போன்றான்.      5.10.64

அரக்கர் அழிவை யாவருங் காணல்

நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அச் செருவில் நேர்ந்தார்
உய்தலை உற்று மீண்டார், ஒருவரும் இல்லை; உள்ளார்,
கை தலைப் பூசல் பொங்கக் கடுகினர்; காலன் உட்கும்
      ஐவரும் உலந்த தன்மை, அனைவரும் அமையக் கண்டார். 5.10.65

ஐவரும் அழிந்ததை இராவணனிடம் சொல்லல் (5774-5775)

'இறுக்குறும் இன்று நம்மைக் குரங்கு'என, இரங்கி, ஏங்கி,
மறுக்கு உறுகின்ற நெஞ்சின் மாதரை, வைது நோக்கி,
உறுக்குறும் சொல்லான், ஊழித் தீ என உலகம் ஏழும்
சுறு கொள நோக்குவான் தன், செவித் தொளை தீயச் சொன்னார்.       5.10.66

தானையும் உலந்தது; ஐவர் தலைவரும் சமைந்தார்; தாக்கப்
போனபின் மீள்வேம் யாமே; அதுவும், போர் புரிகிலாமை;
வானையும் வென்று உளாரை வல்லையின் மடிய நூறி,
ஏனையர் இன்மை, சோம்பி இருந்தது அக் குரங்கும் என்றார்       5.10.67
------------------

5.11 அக்ககுமாரன் வதைப் படலம் 5776 - 5825

அட்சகுமாரன் குரங்கைப் பற்றித்தரத் தன்னை அனுப்ப வேண்டல் (5776-5778)

கேட்டலும், வெகுளி வெம் தீ கிளர்ந்து எழ, விலங்கல் மார்பில்
தோடு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறு கொண்டு ஏற,
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான், ஒருப்பட்டானைத்
தாள் துணை தொழுது, மைந்தன், தடுத்து இடை தருதி என்றான்.       5.11.1

முக்கணான் ஊர்தி அன்றேல், மூவுலகு அடியில் தாயோன்
ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல்,
திக்கயம் அல்ல, ஆகில், குரங்கின் மேல் சேறி போலாம்!
இக் கடன் அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய       5.11.2

'அண்டர் கோன் தன்னைப் பற்றித் தருக'எனா, அடியேன் நிற்க,
கொண்டனை எம்முன் தன்னைப் பணி, என நெஞ்சம் கோடி
உண்டது; தீரும் அன்றே! உரன் இலாக் குரங்கு ஒன்று ஏனும்,
எண் திசை வென்ற நீயே, ஏவுதி என்னை என்றான்.       5.11.3

அட்சகுமாரன் உறுதிகூறல் (5779-5780)

கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு,
கைதவம் கண்ணி, ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான்,
எய்தினன், இமையா முக்கண் ஈசனே என்றபோதும்,
நொய்தினில் வென்று, பற்றித் தருகுவென் நொடியின் உன்பால்       5.11.4

துண்டத் தூண் அதனில் தோன்றும் கோள் அரி, சுடர் வெண் கோட்டு
மண் தொத்த நிமிர்ந்த பன்றி, ஆயினும், மலைதல் ஆற்றாது;
அண்டத்தைக் கடந்து போகி, அப்புறத்து அகலில், என்பால்
தண்டத்தை இடுதி அன்றே; நின்வயின் தந்திலேனேல்.       5.11.5

அட்சகுமாரன் விடைபெற்றுப் பெரும்படையுடன் செல்லல் (5781-5791)

என இவை இயம்பி, "ஈதி விடை" என, இறைஞ்சி நின்ற
வனைகழல் வயிரத் திண் தோள் மைந்தனை, மகிழ்ந்து நோக்கித்
"துனைபரித் தேர் மேல் ஏறிச் சேறி"என்று, இனைய சொன்னான்;
புனை மணித் தாரினானும் போர் அணி அணிந்து போனான்.      5.11.6

ஏறினன் என்ப, மன்னோ, இந்திரன் இகலில் இட்ட,
நூறொடு நூறு பூண்ட, நொறில் வயப் புரவி நோன் தேர்;
கூறினர் அரக்கர் ஆசி; குமுறின முரசக் கொண்மூ;
ஊறின உரவுத் தானை ஊழி பேர் கடலை ஒப்ப.       5.11.7

பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை; பொங்கித்
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர்;
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவுத் தானை;
வரு திரை மரபில் எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி.       5.11.8

ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர்; ஆவி
வேறு இலாத் தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர்,
ஏறிய தேரர் சூழ்ந்தார், இறுதியின் யாவும் உண்பான்
சீறிய காலத்தீயின் செறி சுடர்ச் சிகைகள் அன்னார்.       5.11.9

மந்திரக் கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர் மக்கள்,
தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள் பிறரும், தாதைக்கு
அந்தரத்து அரம்பை மாரில் தோன்றினர் ஆதி ஆனோர்,
எந்திரத் தேரர், சூழ்ந்தார் ஈர் இரண்டு இலக்கம் வீரர்.       5.11.10

தோமரம், உலக்கை, சூலம், சுடர், மழு, குலிசம், தோட்டி,
ஏ மரு வரிவில், வேல், கோல், ஈட்டி, வாள், எழு, விட்டேறு,
மா மரம், வீசு பாசம், வயிர், வளை, வயிரத் தண்டு,
காமரு கணையம், குந்தம், கப்பணம், காலநேமி.       5.11.11

என்று இவை முதல ஆய எழில் திகழ் படைகள் ஈண்டி,
மின் திரண்ட அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச,
துன்று இரும் தூளி பொங்கித் துறுதலால் இறுதி செல்லாப்
பொன் திணி உலகம் ஆன பூதலம் ஆன மாதோ.       5.11.12

அட்சகுமாரன் படையின் தீய நிமித்தங்களும் ஆரவாரமும் (5788-5791)

காகமும், கழுகும், பேயும், காலனும், கணக்கு இல் காலம்
சேகு உற வினையின் செய்த தீமையும், தொடர்ந்து செல்ல;
பாகு உள கிளவி செவ்வாய் படைவிழி பணைத்த வேய்த் தோள்
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற.       5.11.13

உழைக் குலம் நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர்
அழைத்து அழு குரலின் வேலை அமலையின், அரவச் சேனை
தழைத்து எழும் ஒலியின் ஓசை பல்லியம் துவைக்கத் தாவி
மழைக் குரல் இடியில் சொன்ன மாற்றங்கள் உரைப்ப மன்னோ.       5.11.14

வெயில் கர மணிகள் வீசும் விரி கதிர் விழுங்க, வெய்ய
அயில் கர மணிகளாலும் அவிர் ஒளி பருக, அஃதும்
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க, யாணர்
உயிர்க் குலவு இரவும் அன்று, பகல் அன்று, என்று உணர்வு தோன்ற.       5.11.15

ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வயப் புரவி ஒல்கித்
தூங்கின வீழ, தோளும் கண்களும் இடத்துத் துள்ள,
வீங்கின மேகம் எங்கும் குருதி நீர்த் துளிகள் வீழ்ப்ப
ஏங்கின காகம் ஆர்ப்ப, இருளில் விண் இடிப்ப மாதோ.       5.11.16

அனுமன் அட்சகுமாரனைக் காணலும் ஐயுறலும் (5792-5795)

வெள்ள வெம் சேனை சூழ, விண் உேளார் வெருவி விம்ம,
உள்ளம் நொந்து அனுங்கி, வெய்ய கூற்றமும் உறுவது உன்ன,
துள்ளின சுழல் கண் பல் பேய் தோள் புடைத்து ஆர்ப்ப, தோன்றும்
கள் அவிழ் மாலையானைக் காற்றின் சேய் வரவு கண்டான்.      5.11.17

"இந்திரசித்தோ? மற்று அவ் இராவணனேயோ?"என்னாச்
சிந்தையின் உவகை தோன்ற, முனிவு உற்ற குரக்குச் சீயம்,
"வந்தனன்; முடிந்தது அன்றோ? மனக் கருத்து"என்ன வாழ்த்தி,
சுந்தரத் தோளை நோக்கி, இராமனைத் தொழுது சொன்னான்.      5.11.18

"எண்ணிய இருவர் தம்முள் ஒருவனால், யானும் நோற்ற
புண்ணியம் உளதாய், எம் கோன் தவத்தொடும் பொருந்தினானேல்,
நண்ணினன் நானும் நின்றேன்; காலனும் நணுகி நின்றான்;
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின்" என்றான்.       5.11.19

"பழி இலது உரு என்றாலும், பல தலை அரக்கன் அல்லன்;
விழி இடை இமைக்கும் மேல்நாள் வேந்தை வென்றானும் அல்லன்;
மொழியின் மற்றவர்க்கு மேலான்; முரண் தொழில் முருகன் அல்லன்;
அழிவில் ஒண் குமரன் யாரோ? அஞ்சனக் குன்றம் அன்னான்.       5.11.20

அனுமனை அட்சகுமாரன் எள்ளி நகைத்தல்

என்றவன் உவந்து, விண் தோய்,       இந்திர சாபம் என்ன
நின்ற, தோரணத்தின் உம்பர்       இருந்த போர் நீதியானை,
வன் தொழில் அரக்கன் நோக்கி,       வாள் எயிறு இலங்க நக்கான்;
'கொன்றது இக்குரங்கு போலாம்!       அரக்கர் தம் குழாத்தை'என்றான்.       5.11.21

தேர்ப்பாகன் ஏளனமாக எண்ணக் கூடாதனெல்

அன்னதாம் அச்சொல் கேட்ட       சாரதி, "ஐய! கேண்மோ!
இன்னதாம் என்னலாமோ       உலகியல்? இகழல்! அம்மா!
மன்னனோடு எதிர்ந்த வாலி       குரங்கு என்றால், மற்றும் உண்டோ?
சொன்னது துணிவில் கொண்டு       சேறி" என்று உணரச் சொன்னான்.       5.11.22

அட்சகுமாரன் வஞ்சினம் கூறல்

விடம் திரண்டு அனைய மெய்யான்,       அவ் உரை விளம்பக் கேளா,
"இடம் புகுந்து, இனைய செய்த       இதனொடு, சீற்றம் எஞ்சேன்,
தொடர்ந்து சென்று, உலகம் மூன்றும்       துருவினென், ஒழிவு உறாமல்
கடந்து, பின் குரங்கு என்று ஓதும்       கருவையும் களைவென்" என்றான்.       5.11.23

அனுமனும் அரக்கர் படையும் பொருதல் (5799-5805)

ஆர்த்து எழுந்து, அரக்கர் சேனை,
      அஞ்சனைக்கு உரிய குன்றைப்
போர்த்தது; பொழிந்தது, அம்மா!
      பொழிபடப் பருவ மாரி;
வேர்த்தனர் திசை காப்பாளர்;
      சலித்தது விண்ணும் மண்ணும்;
தார்த் தனி வீரன், தானும்
      தனிமையும், அவர் மேல் சார்ந்தான்.       5.11.24

எறிந்தனர், நிருதர் வெய்தின்       எய்தின படைகள் எல்லாம்,
முறிந்தன வீரன் மேனி       முட்டின, முகர யானை
மறிந்தன, மடிந்த தேரும்       மான மாக் குழுவும், மற்றும்
நெறிந்தன வரம்பில் யாக்கை,       இலங்கை தன் நிலையில் பேர.       5.11.25

காய் எரி, முளி புல் கானில்       கலந்து எனக் காற்றின் செம்மல்
ஏ எனும் அளவில் கொல்லும் <       நிருதர்க்கு, ஓர் எல்லை இல்லை,
போயவர், உயிரும் போகித்       தென்புலம் படர்தல், பொய்யாது,
ஆயிர கோடி தூதர்       உளர்கொலோ! நமனுக்கு அம்மா.       5.11.26

வர உற்றார் வாரா நின்றார்
      வந்தவர் வரம்பில் வெம் போர்
பொர உற்ற பொழுது வீரன்
      மும்மடங்கு ஆற்றல் பொங்க
விரவிப் போய்க் கதிரோன் ஊழி
      இறுதிமேல் என்னல் ஆனான்
உரவுத்தோள் அரக்கர் எல்லாம்
      என்பு இலா உயிர்கள் ஒத்தார்.       5.11.27

பிள்ளப்பட்டன, நுதல் ஓடைக் கரி,
      பிறழ் பொன் தேர், பரி, பிழையாமல்,
அள்ளல் பட்டு அழி குருதிப் பொருபுனல்
      ஆறாகப் படி சேறு ஆக,
"வள்ளப்பட்டன மகரக் கடல் என
      மதில் சுற்றிய பதி "மறலிக்கு ஓர்
கொள்ளைப்பட்டன உயிர்" என்னும்படி,
      கொன்றான் ஐம்புலன் வென்றாறேன.       5.11.28

'தேரே பட்டன'என்றார் சிலர்; சிலர்,
      'தெறு கண் செம்முக வயிரத் தோள்
பேரே பட்டன'என்றார்; சிலர் சிலர்,
      'பரியே பட்டன சில'என்றார்;
'காரேபட்டு அலை நுதல் ஓடைக்
      கடகரியே பட்டன கடிது'என்றார்;
நேரே பட்டவர் பட, மாடே
      தனி, நில்லா உயிரொடு நின்றாரே.       5.11.29

ஆழிப் பொருபடை நிருதப் பெரு வலி
      அடலோர், ஆய்மகள் அடு பேழ்வாய்த்
தாழிப் படு தயிர் ஒத்தார்; மாருதி
      தனிமத்து என்பது ஒர் தகையானான்;
ஏழ் இப் புவனமும் மிடை வாழ் உயிர்களும்,
      எறி வேல் இளையவர் இனமாக,
ஊழிப் பெயர்வது ஒர் புனல் ஒத்தார்; அனல்
      ஒத்தான், மாருதம் ஒத்தானே.       5.11.30

அனுமனும் அட்சகுமாரனும் பொருதல் (5806-5812)

கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர்
      குறைகின்றார் உடல் குலைகின்றார்;
பின்றா நின்றனர்; உதிரப் பெருநதி
      பெருகா நின்றன அருகு ஆரும்
நின்றார் நின்றிலர்; தனி நின்றான், ஒரு
      நேமித் தேரொடும் அவன் நேரே
சென்றான்; வன் திறல் அயில் வாய் அம்புகள்
      தெரிகின்றான் விழி எரிகின்றான்.       5.11.31

உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்;
      ஒரு நாளே பலர் உயிர் உண்ணக்
கற்றானும் முகம் எதிர் வைத்தான்; அது
      கண்டார் விண்ணவர்; கசிவு உற்றார்;
"எற்றே மாருதி நிலை"என்றார்; இனி
      "இமையா விழியினை இவை ஒன்றோ
பெற்றாம், நல்லது பெற்றாம்" என்றனர்;
      பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்.       5.11.32

எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன
      ஈரேழ்; எதிர் அவை பார் சேரப்
பொய்தான் மணி எழு ஒன்றால்; அன்று, அது,
      பொடியாய் உதிர்வு உற வடி வாளி
வெய்து ஆயின பல விட்டான்; வீரனும்
      வேறு ஓர் படை இலன் மாறா வெம்
கை தானே பொரு படை ஆகத் தொடர்
      கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான்.       5.11.33

தேரில் சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர்
      தின்றான்; அப் பொரு செறி திண் தேர்
பாரில் சென்றது; பரிபட்டன, அவன்
      வரிவில் சிந்திய பகழிக் கோல்,
மார்பில் சென்றன சில; பொன் தோள் இடை
      மறைவு உற்றன சில; அறவோனும்,
நேரில் சென்று, அவன் வயிரக் குனிசிலை
      பற்றிக் கொண்டு, எதிர் உற நின்றான்.       5.11.34

ஒரு கையால் அவன் வயிரச் சிலைதனை
      உற்றுப் பற்றலும், உரவோனும்
இரு கையால், அவன் வலியா முன்னம் அது
      இற்று ஓடியது; இவர் பொன் தோளான்
சுரிகையால் எதிர் உருவிக் குத்தலும்,
      அதனைச் சொல் கொடு வரு தூதன்,
பொரு கையால் இடை பிதிர்வித்தான் முறி
      பொறி ஓடும்படி பறியாவே.       5.11.35

வாளாலே பொரல் உற்றான்; இற்று அது
      மண் சேராதமுன், வயிரத் திண்
தோளாலே பொர முடுகிப் புக்கு, இடை
      தழுவிக் கொண்டலும், உடல் முற்றும்
நீள் ஆர் அயில் என மயிர் தைத்தன; மணி
      நெடு வால் அவன் உடல் நிமிர்வு உற்று
மீளாவகை புடை சுற்றிக்கொண்டது;
      பற்றிக்கொண்டனன் மேல் ஆனான்.       5.11.36

பற்றிக் கொண்டு, அவன் வடிவாள் என
      ஒளிர் பல் இற்று உக, நிமிர் படர் கையால்
எற்றி, கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர்
      இன மின் இனம் விழுவன என்ன
முற்றி, குண்டலம் முதலாம் அணி உக,
      முழை நால் அரவு இவர் குடர் நாலக்
கொற்றத் திண் சுவல் வயிரக் கை கொடு
      குத்திப், புடை ஒரு குதி கொண்டான்.       5.11.37

அநுமன் அட்சகுமாரனை அழித்தல்

நீத்தாய் ஓடின உதிரப் பொரு நதி
      நீராகச் சிலை பார் ஆகப்
போய்த் தாழ் தெறி தசை அரி சிந்தினபடி
      பொங்கப் போம் உயிர் போகாமல்,
மீத்தா நிமிர் சுடர் வயிரக் கை கொடு
      பிடியா, விண்ணொடு மண் காணத்
தேய்த்தான்; ஊழியொடு உலகு ஏழ் தேயினும்
      ஒரு தன் புகழ் இறை தேயாதான்.       5.11.38

எஞ்சிய படை சிதறி மறைந்து ஓடல் (5814-5816)

புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர்கொடு
      புக்கார் சிலர்; சிலர், பொரு பேயின்
பண்டாரத்து இடை இட்டார் தம் உடல்;
      பட்டாரில் சிலர் பயம் உந்தத்
திண்டாடித் திசை அறியா மறுகினர்;
      செத்தார் சிலர்; சிலர், செலவு அற்றார்;
கண்டார் கண்டது ஒர் திசையே விசை கொடு
      கால்விட்டார்; படை கைவிட்டார்.       5.11.39

மீனாய் வேலையில் உற்றார் சிலர்; சிலர்
      பசு ஆய் வழிவழி மேய்வு உற்றார்;
ஊனார் பறவையின் வடிவு ஆனார் சிலர்;
      சிலர் நான்மறையவர் உரு ஆனார்;
மானார் கண் இள மடவார் ஆயினர்
      முன்னே தம் குழல் வகிர்வு உற்றார்
ஆனார் சிலர்; சிலர், ஐயா நின் சரண்
      என்றார்; நின்றவர் அரி என்றார்.       5.11.40

தம் தாரமும் உறுகிளையும் தமை எதிர்
      தழுவுந்தொறும்,'நும தமர் அல்லோம்;
வந்தோம் வானவர்'என்று, ஏகினர் சிலர்;
      சிலர், மானுயர் என வாய் விட்டார்;
மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள்
      ஆனார் சிலர்; சிலர் மருள்கொண்டார்;
இந்து ஆர் எயிறுகள் அறுவித்தார் சிலர்,
      எரிபோல் குஞ்சியை இருள்வித்தார்.       5.11.41

அரக்கியர் அழுதரற்றல்

குண்டலக் குழைமுகக் குங்குமக் கொங்கையார்
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருட ஆய்
விண்டு அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால்
அண்டம் உற்று உளது; அவ் ஊர் அழுத பேர் அமலையே.       5.11.42

அரக்கியர் துன்ப நிகழ்ச்சி (5818-5822)

கதிர் எழுந்து அனைய செம் திருமுகக் கணவன்மார்
எதிர் எழுந்து அடி விழுந்து அழுதுசோர் இள நலார்
அதிநலம் கோதைசேர் ஓதியோடு அன்று அவ் ஊர்
உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே.       5.11.43

தாவு இல் வெம் செரு நிலத்து அடி, உலந்தவர் தம் மேல்,
ஓவியம் புரை நலார் விழுதொறும், சிலர் உயிர்த்து
ஏவுகண்களும் இமைத்தனர்கள் ஆம்; இது எலாம்,
ஆவி ஒன்று, உரு இரண்டு, ஆதலாலே கொல் ஆம்?       5.11.44

ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல்; உதவியால்
வீடினார்; வீடினார் மிடை உடல் குவைகள் வாய்
நாடினார் மடம் நலார்; நவை இலா நண்பரைக்
கூடினார்; ஊடினார் உம்பர்வாழ் கொம்பு அனார்.       5.11.45

தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள்
ஆட்டி நின்று அயர்வது ஓர் அறுதலைக் குறையினைக்
கூட்டி "நின் ஆர் உயிர்த் துணைவன் எம் கோனை நீ
காட்டுவாய் ஆதி"என்று அழுது கை கூப்பினாள்.       5.11.46

ஏந்தினாள் தலையை ஓர் எழுது அரும் கொம்பு அனாள்;
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை
"வேந்து நீ அலசினாய் விடுதியால் நடம்"எனாப்
பூந் தளிர்க் கையினால் மெய் உறப் புல்லினாள்.       5.11.47

அரக்கியர் துன்புறலும் விண்ணவர் இராவணனிடம் உரைத்தலும்

நாடினார்; நாடியே நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர் தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ்வயின் வெருவி விண்ணவர்கள் தாம்
ஓடினார் அரசன்மாட்டு அணுகி நின்று உரை செய்வார்.       5.11.48

மந்தோதரி புலம்பல்

கயல் மகிழ் கண்மலர் கலுழி கான்றிடப்
புயல் மகிழ் புரிகுழல் பொடி அளாவுற
அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்
மயன் மகள்; வயிறு அலைத்து அழுது மாழ்கினாள்       5.11.49

அனைவரும் அழுதல்

தாவு அரும் திரு நகர்த் தையலார் முதல்
ஏவரும் இடைவிழுந்து இரங்கி ஏங்கினார்;
காவலன் கால்மிசை விழுந்து காவல் மாத்
தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தையார்.       5.11.50
--------------------

5.12 பாசப் படலம் 5826 - 5888

இந்திரசித்தின் வெகுளி

அவ் வழி அவ் உரை கேட்ட ஆண்தகை
வெவ் வழி எரி புக வெகுளி வீங்கினான்
எவ்வழி உலகமும் குலைய இந்திரத்
தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான்.       5.12.1

இந்திரசித்து போர்க்கு எழல்

அரம் சுடர் வேல் தனது இளவல் அற்ற சொல்
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான்;
புரம் சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய
பரம் சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான்.       5.12.2

இந்திரசித்து தேர் ஏறுதல்

ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவான்
ஆறு இருநூறு பேய் பூண்ட ஆழித் தேர்;
கூறின கூறின சொற்கள் கோத்தலால்
பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே.       5.12.3

படையின் ஆரவாரம்

ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச;
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன்;
"சீர்த்தது போரும்"என்னாத் தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள் தாமும் தத்தம் யோகத்தின் முயற்சி விட்டார்.       5.12.4

இந்திரசித்தின் துன்பமும் வீரமும்

தம்பியை நினையும் தோறும் தாரைநீர் ததும்பும் கண்ணான்,
அம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான்;
"கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குறுகா வாழ்க்கை
எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது" என்றான்.       5.12.5

வேற்படை யானைப்படை முதலியவற்றின் மிகுதி

வேல் திரண்டனவும், வில்லும் மிடைந்தவும், வெற்பு என்றாலும்
கூறு இரண்டு ஆக்கும் வாள் கைக் குழுவையும், குணிக்கல் ஆற்றேம்;
சேறு இரண்டு அருகு செய்யும் செறிமதச் சிறு கண் யானை
ஆறு இரண்டு அஞ்சு நூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே.       5.12.6

இந்திரசித்து இராவணன் கோயில் புகல்

ஆய மாத் தானை தான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத்
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேரத் தேரில்
ஏ எனும் அளவின் வந்தான்; இராவணன் இருந்த யாணர்
வாயில் தோய் கோயில் புக்கான், அருவி சோர் வயிரக் கண்ணான்.       5.12.7

இந்திரசித்து இராவணனிடம் பேசல் (5833-5836)

தாள் இணை வீழ்ந்தான்; தம்பிக்கு இரங்கினான்; தறுகணானும்
தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினான்; அழுது சோர்ந்தான்;
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க,
மீளி போல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பல் உற்றான்.       5.12.8

"ஒன்று நீ உறுதி ஓராய், உற்று இருந்து உளையகிற்றி;
வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்து மன்னோ,
'சென்று நீர் பொருதிர்'என்று, திறம் திறம் செலுத்தித் தீயக்
கொன்றனை நீயே அன்றோ? அரக்கர் தம் குழுவை" என்றான்.       5.12.9

கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்று இப்
பைங்கழல் அரக்கரோடும் உடன் சென்ற ப குதிச் சேனை,
இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்!
சங்கரன், அயன், மால், என்பார் தாம் எனும் தரத்தது ஆமோ.       5.12.10

திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற
முக்கணன் கயிலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்;
அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காண்டி;
புக்கு இனி வென்றும் என்றால், புலம்பு அன்றிப் புலமைத்து ஆமோ.       5.12.11

இராவணனிடம் உறுதிகூறிப் புறப்படல்

ஆயினும், "ஐய, நொய்தின் ஆண்டு எழில் குரங்கை, நானே
ஏ எனும் அளவில் பற்றித் தருகுவென்; இடர் ஒன்று ஒன்றும்,
நீ, இனி உழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி;"என்று,
போயினன்; இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான்.       5.12.12

படையின் பரப்பு

உடைந்த வல் இருள், நோற்றுப் பல் உருக்கொடு, அக் கதிர்க் குழாங்கள்
மிடைந்தன, மிலைச்சி ஆங்கு, மெய் அணி பலவும் மின்னக்
குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்றப் போர் வாள் வில் வீச,
அடைந்த கார் அரக்கர் தானை, அகலிடம் இடம் இன்று, என்ன.       5.12.13

இந்திரசித்து மலைபோல் படைநடுவில் நிற்றல்

ஆழி அம் தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செம் கண்
சூழி வெம் கோல மாவும், துவன்றிய நிருதர் சேனை,
ஊழி வெம் கடலில் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற
பாழி மா மேரு ஒத்தான்; வீரத்தின் பன்மை தீர்த்தான்.       5.12.14

அனுமனால் நேர்ந்த அழிவைக் கருதல் (5840-5842)

சென்றனன் என்ப, மன்னோ திசைகேளாடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும், வீரத்தே நின்ற வீரன்,
அன்று அது கண்ட வாழி அனுமனை, அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார்.       5.12.15

இலை குலாம் பூணினானும், "இரும் பிணக் குருதி ஈரத்து,
அலகு இல் வெம் படைகள் தறெ்றி, அளவு இடற்கு அரிய ஆகி,
மலைகளும், கடலும், யாறும், கானமும், பெற்று, மற்று ஓர்
உலகமே ஒத்தது, அம்மா! போர்ப் பெரும் களம்,"என்று உன்னா.       5.12.16

வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்;
"அப்பு அடை வேலை அன்ன பெருமையார், ஆற்றலோடும்
ஒப்பு அடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே;
எப் படை கொண்டு வெல்வது? இராமன் வந்து எதிர்க்கில்;"என்றான்.       5.12.17
இந்திரசித்து இறந்த வீரருக்கு இரங்கல்

கண்ணனார், உயிரே ஒப்பார் கைப் படைக்கலத்தில் காப்பார்,
எண்ணலாம் தகைமை அல்லர் இறந்து இடைக் கிடந்தார் தம்மை
மண்ணுளே நோக்கி நின்று, வாய்மடித்து, உயிர்த்தான்; மாயாப்
புண் உளே கோல் இட்டு அன்ன, மானத்தால் புழுங்குகின்றான்.       5.12.18

இந்திரசித்து தம்வீரம் குறைந்ததனெ வருந்தல்

கான் இடை அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும்,
யான் உடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம்
மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும்
ஆனிடத்து உள, என் வீரம் அழகிற்றே அம்ம என்றான்.       5.12.19

இந்திரசித்து பிணக்குவியலில் தம்பியின் சிதைவைக் கண்டு வருந்தல் (5845-5847)

நீப்பு உண்ட உயிர ஆகி, நெருப்பு உண்ட நிறத்தில் தோன்றி,
ஈர்ப்பு உண்டற்கு அரிய ஆய பிணக் குவடு, இடறச் செல்வான்;
தேய்ப்பு உண்ட தம்பி யாக்கை, சிவப்பு உண்ட கண்கள், தீயில்
காய்ப்பு உண்ட செம்பில் தோன்றக் கறுப்பு உண்ட மனத்தன் கண்டான்.       5.12.20

தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மாச் சீயக்
கூர் உகிர் அளைந்த கொற்றக் கனகன் மெய்க் குழம்பில் தோன்றத்
தேர் உகக் கையில் வீரச் சிலை உக, வயிரச் செங்கண்
நீர் உகக் குருதி சிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான்.       5.12.21

வெவ் இலை அயில்வேல் உந்தை வெம்மையைக் கருதி, வீர!
வவ்வுதல் கூற்றும் ஆற்றான்; மாறுமாறு உலகின் வாழ்வார்,
அவ் உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க; ஐயா,
எவ் உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய்.       5.12.22

துயரமும் வீரமும்

ஆற்றலன் ஆகி, அன்பால் அறிவு அழிந்து, அயரும் வேலை,
சீற்றம் என்று ஒன்று தானே மேல் நிமிர் செலவிற்று ஆகித்
தோற்றிய துன்ப நோயை உள்ளூறத் துரந்தது; அம்மா!
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன.       5.12.23

இந்திரசித்தைப் பார்த்த அநுமனின் எண்ணம் (5849-5852)

ஈண்டு இது நிகழ்வுழி இரவி தேர் எனத்
தூண்டுறு தேரின் மேல் தோன்றும் தோன்றலை
மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனில்
ஆண்டகை வனைகழல் அனுமன் நோக்கினான்.       5.12.24

வென்றேன் இதன்முன் சில வீரரை என்னும் மெய்ம்மை
அன்றோ, முடுகிக் கடிது எய்த அழைத்தது; அம்மா!
ஒன்றோ இனி வெல்லுதல்; தோற்றல் அடுப்பது உள்ளி,
இன்றே அமையும் இவன்; இந்திரசித்தும் என்பான்.       5.12.25

கட்டேறு நறும் கமழ் கண்ணி இக் காளை, என் கைப்
பட்டால், அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும்;
'கெட்டேம்'என எண்ணி, இக் கேடு அரும் கற்பினாளை
விட்டு, ஏகும்; அது அன்றி, அரக்கரும் வெம்மை தீர்வார்.       5.12.26
ஓன்றோ? இதனால் வரும் ஊதியம்; ஒண்மையானைக்
கொன்றேன் எனில், இந்திரனும் துயர்கோளும் நீங்கும்;
இன்றே கடிகெட்டது அரக்கர் இலங்கை மூதூர்;
வென்றேன் அவ் இராவணன் தன்னையும் வேரொடு; என்றான்.       5.12.27

அநுமன் அரக்கர் படையுடன் பொருதல் (5853-5858.)

அக்காலை, அரக்கரும், ஆனையும், தேரும், மாவும்,
முக்கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றிப்
புக்கானின் முன் புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை,
மிக்கானும், வெகுண்டு ஒர் மராமரம் கொண்டு புக்கான்.       5.12.28

உதையுண்டன யானை; உருண்டன யானை; ஒன்றோ,
மிதியுண்டன யானை; விழுந்தன யானை; மேல் மேல்
புதையுண்டன யானை; புரண்டன யானை; போரால்
வதையுண்டன யானை; மறிந்தன யானை மண்மேல்.       5.12.29

முடிந்த தேர்க்குலம்; முறிந்தன தேர்க்குலம், முரண் இற்று
இடிந்த தேர்க்குலம்; இற்றன தேர்க்குலம்; அச்சு இற்று
ஒடிந்த தேர்க்குலம்; உக்கன தேர்க்குலம்; நெக்குப்
படிந்த தேர்க்குலம்; பறிந்தன தேர்க்குலம் படியில்.       5.12.30

சிரன் நெரிந்தவும், கண்மணி சிதைந்தவும், செறிதாள்
தரன் நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார்பூண்
உரன் நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒண்பொன்
குரன் நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும் குதிரை.       5.12.31

பிடியுண்டார்களும், பிளத்தல் உண்டார்களும், பெரும் தோள்
ஒடியுண்டார்களும், தலை உடைந்தார்களும், உருவக்
கடியுண்டார்களும், கழுத்து இழந்தார்களும், மரத்தால்
அடியுண்டார்களும், அச்சம் உண்டார்களும் அரக்கர்.       5.12.32

வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர்
விட்ட வெம் திறல் படைகளும் வீரன் மேல் வீழ்ந்த
சுட்ட மெல் இரும்பு அடைகலைச் சுடுகிலாதன போல்
பட்ட பட்டன திசைதொறும் பொடி ஒடும் பரந்த.       5.12.33

இந்திரசித்தும் அநுமனும் பலவகையாகப் பொருதல் (5859-5878)

சிகை எழும் சுடர் வாளிகள் இந்திரசித்து
மிகை எழும் சினத்து அனுமன் மேல் விட்டன வெந்து
புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போக
நகை எழுந்தன; அழிந்தன வான் உேளார் நாட்டம்.       5.12.34

தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப்
பாரில் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத்தோள்
வீரர் வீரனும், முறுவலும், வெகுளியும், வீங்க,
'வாரும், வாரும்'என்று, அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான்.       5.12.35

புரந்தரன் தலை பொதிர் எறிந்திடப் புயல் வானில்
பரந்த பல் உரும் ஏறு இனம் வெறித்து உயிர் பதைப்ப,
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன்
சிரம் துளங்கிட, அரக்கன் வெம் சிலையை நாண் எறிந்தான்.       5.12.36

ஆண்ட நாயகன் தூதனும், அயனுடை அண்டம்
கீண்டது ஆம் என, கிரி உக, நெடுநிலம் கிழிய,
நீண்ட மாதிரம் வெடிபட, அவன் நெடும் சிலையில்
பூண்ட நாண் இற, தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான்.       5.12.37

'நல்லை நல்லை! இஞ் ஞாலத்து, நின் ஒக்கும் நல்லார்
இல்லை இல்லையால், எறுழ் வலிக்கு, யாரொடும் இகல
வல்லை வல்லை; இன்று ஆகும் நீ படைத்துடை வாழ் நாட்கு
எல்லை எல்லை'என்று, இந்திரசித்துவும் இசைத்தான்.       5.12.38

நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும்,
கோளுக்கு எல்லையும், கொடும் தொழிற்கு எல்லையும், கொடியீர்!
வாளுக்கு எல்லையும் வந்தன; வகைகொண்டு வந்தேன்
தோளுக்கு, எல்லை ஒன்று இல்லை; என்று அனுமனும் சொன்னான்.       5.12.39

"இச் சிரத்தையைத் தொலைப்பென்"என்று இந்திரன் பகைஞன்,
பச்சிரத்தம் வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப,
வச்சிரத்திலும் வலியன வயிர வான் கணைகள்,
அச் சிரத்திலும், மார்பிலும், செறித்தலும், அனுமன்,       5.12.40

குறிது வான் என்று குறைந்திலன், நெடும் சினம் கொண்டான்,
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கிச்
சிறிய தாய் சொன்ன திரு மொழி சென்னியில் சூடி,
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான்.       5.12.41

பாகம் அல்லது கண்டிலன்; அனுமனைப் பார்த்தான்;
மாக வன்திசை பத்தொடும் வரம்பு இலா உலகிற்கு
ஏகநாதனை எறுழ் வலித் தோள் பிணித்து ஈர்த்த
மேகநாதனும், மயங்கினன் ஆம் என வியந்தான்.       5.12.42

நீண்ட வீரனும், நெடும் தடம் கைகளை நீட்டி,
ஈண்டு வெம் சரம் எய்தன, எய்திடா வண்ணம்,
மீண்டு போய் விழ வீசி, அங்கு, அவன் மிடல் தடம் தேர்
பூண்ட பேயொடு, சாரதி தரைப்படப் புடைத்தான்.       5.12.43

ஊழிக் காற்று என ஒரு பரித் தேர் அவண் உதவப்
பாழித் தோளவன் அத் தடம் தேர் மிசைப் பாய்ந்தான்
ஆழிப் பல்படை அனையன அளப்ப அரும் சரத்தால்
வாழிப் போர்வலி மாருதி மேனியை மறைந்தான்.       5.12.44

உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறாக்
கொற்ற மாருதி மற்று அவன் தேர்மிசைக் குதித்தான்;
பற்றி வன்கையால் பறித்து எறிந்து உலகு எலாம் பலகால்
முற்றி வென்ற ஓர் மூரி வெம் சிலையினை முறித்தான்.       5.12.45

முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னம்,
மறிந்துபோர் இடை வழிக் கொள்வான், வயிர வாள் படையால்
செறிந்த வான் பெரும் சிறை அற மலைகளைச் செயிரா
எறிந்த இந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான்.       5.12.46

நூறுநூறு போர் வாளி, ஓர் தொடை கொண்டு, நொய்தின்,
மாறு வெம் சினத்து இராவணன் மகன், சிலை வளைத்தான்;
ஊறு, தன் நெடு மேனியில் பல பட, ஒல்கி,
ஏறு சேவகன் தூதனும், சிறிது போது இருந்தான்.       5.12.47

ஆர்த்த வானவர், ஆகுலம் கண்டு, அறிவு அழிந்தார்;
பார்த்த மாருதி, தாரு ஒன்று, அம் கையில் பற்றாத்
தூர்த்த வாளிகள் துணிபட, முறைமுறை சுற்றிப்
போர்த்த பொன் நெடு மணி முடித் தலையிடைப் புடைத்தான்       5.12.48

பாரம் மாமரம், முடி உடைத் தலையிடைப் படலும்,
தாரையின் நெடும் கற்றைகள், சுற்றின தயங்க;
ஆர மால் வரை அருவியில், வழி கொழும் குருதி
சோர, நின்று, உடன் துளங்கினன் அமரரைத் தொலைத்தான்.       5.12.49

நின்று, போதம் வந்து உறுதலும், நிறை பிறை எயிற்றைத்
தின்று, தேவரும் அவுணரும் முனிவரும் திகைப்பக்
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க,
ஒன்று போல், அவன், ஆயிரம் பகழி கோத்து எய்தான்.       5.12.50

உய்த்த வெம் சரம், உரத்திலும் கரத்தினும், ஒளிப்பக்
கைத்த சிந்தையன், மாருதி, அதிகமும் கனன்றான்,
வித்தகச் சிலை விடு கணை விசையினும் கடுகி,
அத் தடம் பெரும் தேரொடும் எடுத்து, எறிந்து, ஆர்த்தான்.       5.12.51

கண்ணின் மீச் சென்ற இமை இடை கலப்பதன் முன்னம்,
எண்ணின் மீச் சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன்,
புண்ணின் மீச் சென்ற பொழி புலால் பசும்புனல் பொறிப்ப,
விண்ணின் மீச் சென்ற தேரொடும் பார்மிசை விழுந்தான்.       5.12.52

விழுந்து, பார் அடையா முன்னம், மின் அன மெய்யான்
எழுந்து, மால் விசும்பு எய்தினன்; இடை, அவன் படையில்,
செழும் தண் மா மணித் தேர் குலம் யாவையும் சிதைய,
உழுந்து பேர்வதன் முன், நெடு மாருதி உதைத்தான்.       5.12.53

இந்திரசித்து அயன்படை விடுதல் (5879-5883)

ஏறு தேர் இலன், எதிர் நிற்கும் உரன் இலன், எரியில்
சீறு வெம் சினம் திருகினன், அந்தரம் திரிவான்,
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையான், விரிஞ்சன்
மாறு இலாப் பெரும் படைக்கலம் தொடுப்பதா, மதித்தான்.       5.12.54

பூவும், பூநிற அயினியும், தீபமும், புகையும்,
தாவு இல் பாவனையால் கொடுத்து, அருச்சனை சமைத்தான்,
தேவும், யாவையும், உலகமும், திருத்திய தெய்வக்
கோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான்.       5.12.55

கொண்டு கொற்ற வெம் சிலை நெடுநாணொடு கூட்டிச்
சண்ட வேகத்த மாருதி தோெளாடு சாத்தி
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதிதோய்
விண் துளங்கிட மேருவும் துளங்கிட விட்டான்       5.12.56

தணிப்பு அரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண்
பணிக் குலங்களுக்கு அரசனது உருவினைப் பற்றித்
துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்கு உற சுற்றிப்
பிணித்தது; அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க.       5.12.57

5883.திண் என் யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருக,
அண்ணல் மாருதி, அன்று தன்பின் சென்ற அறத்தின்
கண்ணின் நீரொடும், கனம் தோரணத்தொடும், கடைநாள்
தண் என் மாமதி கோெளாடும் சாய்ந்து எனச் சாய்ந்தான்.       5.12.58

அநுமன் அயன்படையில் கட்டுப்படல்

சாய்ந்த மாருதி, சதுமுகன்படை எனும் தன்மை
ஆய்ந்து, மற்று இதன் ஆணையை அவமதித்து அகல்கை
ஏய்ந்தது அன்று என எண்ணினன், கண்முகிழ்த்து இருந்தான்;
'ஓய்ந்தது ஆம் இவன் வலி'என, அரக்கன் வந்து உற்றான்.       5.12.59

அரக்கர் அநுமனைச் சூழல் (5885-5886)

உற்ற காலையில், உயிர் கொண்டு திசைதொறும் ஒதுங்கி
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்,
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவைப்
பற்றி ஈர்த்தனர், ஆர்த்தனர், தழெித்தனர், பலரால்.       5.12.60

"குரக்கு நல்வலம் குறைந்தது"என்று, ஆவலம் கொட்டி
இரைக்கும் மா நகர், எறிகடல் ஒத்தது; எம் மருங்கும்
திரைக்கும் மாசுணம், வாசுகி ஒத்தது; தேவர்;
அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன் அனுமன்.       5.12.61

அயன்படையில் கட்டுண்ட அநுமன் தோற்றம்

கறுத்த மாசுணம், கனக மா மேனியைப் பற்ற,
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன்,
மறத்து மாருதம் பொருத நாள், வாசுகி என்பான்
புறத்துச் சுற்றிய மேரு மா மலையையும் போன்றான்.       5.12.62

இலங்கையர் மகிழ்ச்சி

வந்து இரைத்தனர், மைந்தரும் மகளிரும் மழைபோல்
அந்தரத்தினும் விசும்பினும் திசைதொறும் ஆர்ப்பார்;
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை; மொழியின்,
இந்திரன் பிணிப்பு உண்ட நாள் ஒத்தது அவ் இலங்கை.       5.12.63
----------------

5.13 பிணி வீட்டு படலம் 5889 - 6028

பிணிக்கப்பட்ட அனுமனைக்கண்ட அரக்கர்களின் நிலைமை (5889-5893)

"எய்யுமின் ஈருமின் எறிமின் போழுமின்
கொய்யுமின் குடரினைக் கூறுகூறுகள்
செய்யுமின் மண் இடைத் தேய்மின் தின்னுமின்
உய்யுமேல் இல்லை நம் உயிர்"என்று ஓடுவார்.       5.13.1

மைத் தடம் கண்ணியர் மைந்தர் யாவரும்
பைத் தலை அரவு எனக் கனன்று'பைதலை
இத்தனை பொழுது கொண்டு இருப்பதோ?'எனா
மொய்த்தனர் கொலை செய முயல்கின்றார் சிலர்.       5.13.2

'நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ?
வச்சிர உடல் மறி கடலின்வாய் மடுத்து
உச்சியின் அழுத்துமின் உருத்து; அது அன்று எனின்
கிச்சு இடை இடும்'எனக் கிளக்கின்றார் சிலர்.       5.13.3

'எந்தையை எம்பியை எம் முன்னோர்களைத்
தந்தனை போக'எனத் தடுக்கின்றார் பலர்;
'அந்தரத்து அமரர்தம் ஆணையால் இவன்
வந்தது'என்று உயிர்கொள மறுகினார் பலர்.       5.13.4

'ஓங்கல் அம் பெருவலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம் இவன் சிரம் இருத்தலால் திரு
வாங்கலம்'என்று அழும் மாதரார் பலர்.       5.13.5

அரக்கர்களின் ஆரவாரம்

கொண்டனர் எதிர்செலும் கொற்ற மாநகர்
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது;
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய
குண்டல முகத்தியர்க்கு உவகை கூரவே.       5.13.6

அனுமன் இலங்கையின் அழிவுபாடுகளைக் கண்டுகொண்டே செல்லுதல்

வடி உடைக் கனல் படை வயவர் மால்கரி
கொடி உடைத் தேர் பரி கொண்டு வீசலின்
இடிபடச் சிதைந்த மால் வரையின் இல் எலாம்
பொடிபடக் கிடந்தன கண்டு போயினான்.       5.13.7

அனுமனைக்கண்ட அரக்கர்கள் நிலை (5896-5899.)

முயிறு அலைத்து எழும் முது மரத்தின் மொய்ம்பு தோள்
கயிறு அலைப்பு உண்டது கண்டு காண்கிலாது
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர்.       5.13.8

ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர்
போர்ப் புறச்செயலினைப் புகல்கின்றார் பலர்
பார்ப்புறப் பார்ப்புறப் பயத்தினால் பதைத்து
ஊர்ப்புறத்து இரியல் உற்று ஓடுவார் பலர்.       5.13.9

'காந்து உறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு
பூந்துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம்;
தேர்ந்து உறு பொருள்பெற எண்ணிச் செய்யுமின்
வேந்து உறல் பழுது'என விளம்புவார் சிலர்.       5.13.10

'ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன்
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு'எனாக்
'களிவரு சிந்தையால் காண்டி! நங்களைச்
சுளிகிலை ஆம்'எனத் தொழுகின்றார் சிலர்.       5.13.11

நாகபாசத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் கிங்கரர்களின் வலிமையும் தொகையும்

பைங்கழல் அனுமனைப் பிணித்த பாந்தளைக்
கிங்கரர் ஒருபுடை கிளர்ந்து பற்றினார்;
ஐம்பதினாயிரர் அளவு இல் ஆற்றலர்
மொய்ம்பினின் எறுழ்வலிக் கருளன் மும்மையார்.       5.13.12
அரக்கர்கள் கூற்று

'திண் திறல் அரக்கர்தம் செருக்கு சிந்துவான்
தண்டல் இல் தன் உருக் கரந்த தன்மையான்
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உருக்
கொண்டனன் அந்தகன் கொல்'என்றார் பலர்.       5.13.13
அரக்கரும் அரக்கியரும் நெருங்கிநின்று காணுதல்

அரமியம் தலம் தொறும் அம்பொன் மாளிகைத்
தரம் உறு நிலைதொறும் சாளரம் தொறும்
முரசு எறி கடைதொறும் இரைத்து மொய்த்தனர்;
நிரைவளை மகளிரும் நிருத மைந்தரும்.       5.13.14

அனுமனைக் கண்டு அரக்கர் சிலர் எண்ணியது

'கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்
மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியான்
எயில் உடைத் திருநகர் சிதைப்ப எய்தினன்
அயில் எயிற்று ஒரு குரங்காய்;' என்பார் சிலர்.       5.13.15
தேவமாதர் பலர் அக்காட்சியைக் காண வந்து கூடுதல்

அரம்பையர் விஞ்சைநாட்டு அளக வல்லியர்
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர்
கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர்
வரம்பு அறு சும்மையர் தலைமயங்கினார்.       5.13.16

அரக்கர் பலர் கருத்து

'நீர் இடைக் கண் துயில் நெடிய நேமியும்
தார் உடைத் தனி மலர் உலகின் தாதையும்
ஓர் உடல் கொண்டு தம் உருவம் மாற்றினர்
பார் இடைப் புகுந்தனர் பகைத்து;' என்பார் பலர்.       5.13.17

அரக்கரல்லா ஏனையோர் கண்கலங்குதல்

அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர் நெடு மழைக் கண்ணின் நீர் அது
விரைக் குழல் சீதைதன் மெலிவு நோக்கியோ?
இரக்கமோ? அறத்தினது எண்மையே கொலோ?       5.13.18

அனுமன் கருத்து (5907-5912)

ஆண் தொழில் அனுமனும் அவரொடு ஏகினான்
மீண்டிலன் வேறலும் விரும்பல் உற்றிலன்
'ஈண்டு இதுவே தொடர்ந்து இலங்கை வேந்தனைக்
காண்டலே நலன்'எனக் கருத்தின் எண்ணினான்.       5.13.19

எந்தையது அருளினும் இராமன் சேவடி
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர்
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும்
சிந்துவென் அயர்வு உறு சிந்தை சீரிதால்.       5.13.20

வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து
அளவு உறு முதியரும் அறிய ஆணையால்
விளைவினை விளம்பினால் மிதிலை நாடியை
இளகினன் என்வயின் ஈதல் ஏயுமால்.       5.13.21

அல்லதூஉம் அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு
எல்லையும் தெரிவு உறும்; எண்ணும் தேறல் ஆம்;
வல்லவன் நிலைமையும் மனமும் தேறல் ஆம்;
சொல் உக முகம் எனும் தூது சொல்லவே.       5.13.22

வாலி தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும்
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும்
மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையால்
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால்       5.13.23

'ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும்
நீதியும் மனம் கொள நிறுவி நின்றவும்
பாதியின் மேல் செல நூறி பைப் பையப்
போதலே கருமம்'என்று அனுமன் போயினான்.       5.13.24

இந்திரசித்து அனுமனை இராவணன் மாளிகைக்குக் கொண்டு செல்லுதல்

கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும்
புடைவரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ
விடை பிணிப்பு உண்டது போலும் வீரனைக்
குடைகெழு மன்னன் இல் கொண்டு போயினான்.       5.13.25
அச்செய்தியைத் தூதுவர் சென்று இராவணன்பால் கூறுதல்

தூதுவர் ஓடினர் தொழுது தொல்லைநாள்
மாதிரம் கடந்தவற் குறுகி "மன்ன! நின்
காதலன் மரை மலர் கடவுள் வாளியால்
ஏதில் வானரம் பிணிப்பு உண்டது ஆம்"என்றார்.       5.13.26
நற்செய்தி கூறிய தூதுவர்க்கு இராவணன் பரிசளித்தல்

கேட்டலும் கிளர்சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின்
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர்
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான்.       5.13.27
அனுமனைக் கொல்லாமல் கொணரும்படி இராவணன் பணித்தல்

'எல்லை இல் உவகையால் இவர்ந்த தோளினன்
புல் உற மலர்ந்த கண் குமுதப் பூவினன்
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து "என் ஆணையால்
கொல்லலை தருக"எனக் கூறுவீர்'என்றான்.       5.13.28

தூதுவர் இராவணன் ஆணையை இந்திரசித்துக்குக் கூறுதலும் சீதாதேவியின் நிலைமையும்

அவ் உரை தூதரும் ஆணையால் வரும்
தெவ் உரை நீக்கினான் அறியச் செப்பினார்;
இவ் உரை நிகழ் உழி இருந்த சீதையாம்
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம்.       5.13.29

அனுமன் பிணிப்புண்ட செய்தியைத் திரிசடை சீதைக்குக் கூறுதல்

"இறுத்தனன் கடிபொழில் எண்ணிலோர் பட
ஒறுத்தனன்"என்று கொண்டு உவக்கின்றாள் உயிர்
வெறுத்தனள் சோர்வு உற வீரற்கு உற்றதைக்
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள்.       5.13.30

அதுகேட்டு வருந்திய சீதை அனுமனைக் குறித்துப் பலகூறிப் புலம்புதல் (5919-5923)

ஓவியம் புகை உண்டது போல் ஒளிர்
பூவின் மெல் இயல் மேனி பொடி உறப்
பாவி வேடன் கைப் பார்ப்பு உறப் பேது உறும்
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள்.       5.13.31

உற்று உண்டாய விசும்பை உருவினாய்
முற்று உண்டாய் கலை யாவையும் முற்றுறக்
கற்று உண்டாய் ஒரு கள்ள அரக்கனால்
பற்று உண்டாய் இதுவோ அறம் பான்மையே.       5.13.32

கடர் கடந்து புகுந்தனை; கண்டகர்
உடர் கடந்தும் நின் ஊழி கடந்திலை
அடர் கடந்த திரள் புயத்து ஐய! நீ
இடர்கள் தந்தனை; வந்து இடர் மேலுமே.       5.13.33

ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு
ஊழி காட்டுவென் என்று உரைத்தேன் அது
வாழி காட்டும் என்று உண்டு உன் வரைப்புயப்
பாழி காட்டி அரும் பழி காட்டினாய்.       5.13.34

கண்டு போயினை'நீள்நெறி காட்டிட
மண்டு போரின் அரக்கனை மாய்த்து எனைக்
கொண்டு மன்னவன் போம்'எனும் கொள்கையைத்
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ.       5.13.35

சீதை தளர்ந்து மூர்ச்சித்தல்

ஏய பன்னினள் இன்னன; தன் உயிர்
தேயக் கன்று பிடி உறத் தீங்கு உறு
தாயைப் போலத் தளர்ந்து மயர்ந்தனள்;
தீயைச் சுட்டது ஒர் கற்பு எனும் தீயினாள்.       5.13.36

இந்திரசித்து அனுமனை இராவணன் அரண்மனையுள் கொண்டு சேர்தல்

பெரும் தகைப் பெரியோனைப் பிணித்த போர்
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும்
அரும் தவப் பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த அப் பெருங் கோயில் சென்று எய்தினான்.       5.13.37

இராவணன் அரசுவீற்றிருக்கும் சிறப்பு (5926-5942)

தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன,
அலங்கல் வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி பரப்ப,
வலம் கொள் தோளினான், மண்ணின்று வானுற எடுத்த,
பொலம் கொள் மாமணி வெள்ளி அம் குன்று எனப் பொலிய.       5.13.38

புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும்,
தள்ளின் முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும்,
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர்வாள்,
வள் உகிர்ப் பெருங் குறிகளும் புயங்களின் வயங்க.       5.13.39

துன்று செம்மயிர்ச் சுடர்நெடும் கற்றைகள் சுற்றி,
நின்று திக்கு உற, நிரல்படக் கதிர்க் குழாம் நிமிர,
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்பத்
தென் திசைக்கும் ஓர் வட அனல் திருத்தியது என்ன.       5.13.40

மரகதக் கொழும் கதிரொடு மாணிக்க நெடுவாள்,
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்கச்
சிரம் அனைத்தையும், திசைதொறும் திசைதொறும் செலுத்தி,
உரகர்கோன், இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப.       5.13.41

குவித்த பல மணி குப்பைகள், கலையொடும் கொழிப்பச்
சுவிச் சுடர்க் கலன் அணிந்த பொன் தோெளாடு தயங்கப்
புவித் தடம் படர் மேருவைப் பொன்முடி என்னக்
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப.       5.13.42

சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறியப்
பந்தி வெண் முத்தின் அணிகலன் முழு நிலாப் பரப்ப
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்தது ஆம் என்ன.       5.13.43

வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய,
திண்மைக்கும் தனி உறையுள் ஆம் முழுமுகம் திசையில்,
கண்வைக்கும் தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும்,
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும்பயம் இயற்ற.       5.13.44

ஏக நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னை
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாகம் மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற.       5.13.45

வானரங்களும் வானவர் இருவரும் மனிதர்
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும்
தூ நவின்ற வேல் அரக்கர்தம் குழுவொடு சுற்ற.       5.13.46

நரம்பு கண் அகத்து உள் உறை நறை நிறப் பாண்டில்,
நிரம்பு சில்லரிப் பாணியும் குறடும் நின்று இசைப்ப,
அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல்,
வரம்பு இல் இன்னிசை செவிதொறும் செவிதொறும் வழங்க.       5.13.47

கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூடத்
தோடு சீறு அடி விழி மனம் கையொடும் தொடரும்
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த
வீடு மீட்குறும் மேனகை மேல்நகை விளங்க.       5.13.48

ஊடினார் முகத்து உறும் நறை ஒரு முகம் உண்ணக்
கூடினார் முகக் களிநறை ஒரு முகம் குடிப்பப்
பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக
ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த.       5.13.49

தேவரோடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரோடு மா மந்திரம் ஒருமுகம் முயலப்
பாவகாரிதன் பாவகம் ஒருமுகம் பயிலப்
பூவை சானகி உரு ஒடு உம் ஒருமுகம் பொருந்த.       5.13.50

'காந்தள் மெல் விரல் சனகி தன் கற்பு எனும் கடலை
நீந்தி ஏறுவது எங்ஙன்?'என்று ஒருமுகம் நினையச்
சாந்து அளாவிய வனமுலை மகளிர் தற் சூழ்ந்தார்
ஏந்தும் ஆடியின் ஒருமுகம் எழிலினை நோக்க.       5.13.51

பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும்
மதம்பெய் வண்டு எனச் சனகி மேல் மனம் செல மறுகி,
வெதும்புவார், அகம் வெந்து அழிவார், நகில் விழிநீர்
ததும்புவார் விழித் தாரைவேல் தோள் தொறும் தாக்க.       5.13.52

மாறு அளாவிய மகரந்த நறை உண்டு மகளிர்
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
சேறு அளாவிய சிறு நறும் சீகரத் தென்றல்
ஊறு அளாவிய கடு என உடல் இடை நுழைய.       5.13.53

திங்கள் வாள்நுதல் மடந்தையர் சேயரி கிடந்த
அம் கயல் தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியாப்
பொங்கு கைகளாம் தாமரைக்கு இந்துவே போன்று.       5.13.54

இராவணனைக் கண்டதும் அனுமன் சினங்கொள்ளுதல்

இருந்த எண்திசைக் கிழவனை மாருதி எதிர்ந்தான்;
கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனில் கனன்றான்;
திருந்து தோள் இடை வீக்கிய 'பாசத்தைச் சிந்தி,
உருந்தும் நஞ்சு போல் பவன்வயின் பாய்வென்'என்று உருத்தான்.       5.13.55

இராவணனைக் கொல்வதற்கு அனுமன் புரிந்த ஆலோசனை (5944-5947)

"உறங்குகின்ற போது உயிர் உண்டல் குற்றம்'என்று ஒழிந்தேன்,
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்,
திறங்கள் என் பல சிந்திப்பது? இவன் தலை சிதறி,
அறம் கொள் கொம்பினை மீட்டு, உடன் அகல்வென்" என்று அமைந்தான்.       5.13.56

'தேவர் தானவர் முதலினர் சேவகன் தேவி
காவல் கண்டு இவண் இருந்தவர் கண் புலன் கதுவப்
பாவகாரிதன் முடி தலை பறித்திலென் என்றால்
ஏவதாம் இனிமேல் செயும் ஆள்வினை?'என்றான்.       5.13.57

'மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
ஊடு இரிந்திட முடித்தலை திசைதொறும் உருட்டி
ஆடல் கொண்டு நின்று ஆர்க்கின்றது; அது கொடிது அம்மா!
தேடி வந்தது ஓர் குரங்கு;' எனும் வாசகம் சிறிதோ?       5.13.58

நீண்ட வாள் எயிற்று அரக்கனைக் கண்களின் நேரே
காண்டல் வேண்டி இவ் உயிர் சுமந்து, எதிர் சில கழறி,
மீண்ட போது உண்டு வசைப் பொருள்; வென்றிலேன் எனினும்
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ?       5.13.59

அனுமன் தன் எண்ணம் தகுதியன்றென நினைந்து மேலும் சிந்தித்தல் (5948-5952)

என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏகக்
குன்றின்மேல் எழு கோள் அரியேறு எனக் குதியில்
சென்று கூடுவன் என்பது சிந்தனை செய்யா
நின்று, காரியம் அன்று என நீதியின் நினைந்தான்.       5.13.60

கொல்லம் ஆம் வரத்தனும் அல்லன் கொற்றமும்
வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன் மேலை நாள்
அல் எலாம் திரண்டு அன நிறத்தன் ஆற்றலை
வெல்லல் ஆம் இராமனால்; பிறரும் வெல்வரோ?       5.13.61

என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்
அன்னவே காலங்கள் கழியும் ஆதலால்
துன் அரும் செருத் தொழில் தொடங்கல் தூயதோ?
      5.13.62

'ஏழு பேர் உலகங்கள் யாவும் இன்பு உறப்
பாழி வன் புயங்கேளாடு அரக்கன் பல் தலை
பூழியில் புரட்டல் என் பூணிப்பாம்'என
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால்.       5.13.63

'இங்கு ஒரு திங்களே இருப்பல் யான்'என
அம் கண் நாயகன் தனது ஆணை கூறிய
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்;
பொங்கு வெம் செருவிடைப் பொழுது போக்கினால்.       5.13.64

இவ்வாறு ஆலோசித்து அடங்கி இராவணனருகிற் சார்தல்

ஆதலான் அமர்த்தொழில் அழகிற்று அன்று; அரும்
தூதனாம் தன்மையே தூய்து; என்று உன்னினான்
வேத நாயகன் தனி துணைவன் வென்றிசால்
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான்.      5.13.65

இந்திரசித்து அனுமானை இராவணற்குக் காட்டுதல்

தீட்டிய வாள் எனத் தெறு கண் தேவியர்
ஈட்டிய குழு இடை இருந்த வேந்தற்குக்
காட்டினன் அனுமனைக் கடலின் ஆர் அமுது
ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான்.       5.13.66

இந்திரசித்து அனுமனைப் பற்றி இராவணனிடம் கூறுதல்

புவனம் எத்தனை? அவை அனைத்தும் போர் கடந்
தவனை'உற்று அரி உரு ஆன ஆண்தகை
சிவன் எனச் செங்கணான் என்னச் செய்தவன்
இவன்'எனக் கூறி நின்று இருகை கூப்பினான்.       5.13.67

இராவணன் அனுமனை வெகுண்டு நோக்குதல்

நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி
தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொளத்
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம்புகை
வீக்கின அவ் உடல் விசித்த பாம்பினே.       5.13.68

அனுமனை வினாவுதல் (5957-5961.)

அன்ன ஓர் வெகுளியன் அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற
'என் இவண் வரவு? நீ யாரை?'என்று அவன்
தன்மையை வினாயினான். கூற்றின் தன்மையான்.       5.13.69

நேமியோ? குலிசியோ? நெடும் கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ? தறுகண் பல் தலைப்
பூமி தாங்கு ஒருவனோ? பொருது முற்றுவான்
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்!       5.13.70

நின்று இசைத்து உயிர் கவர் நீலக் காலனோ?
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ?
தென்திசைக் கிழவனோ? திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன்? நீ.       5.13.71

அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின்
வந்து உற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ?
முந்து ஒரு மலர் உேளான்'இலங்கை முற்று உற
சிந்து'எனத் திருத்திய தறுகண் தெய்வமோ?       5.13.72

'யாரை நீ? என்னை இங்கு எய்து காரணம்?
ஆர் உனை விடுத்தவர்? அறிய ஆணையால்
சோர்வு இலை சொல்லுதி!'என்னச் சொல்லினான்.
வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான்.       5.13.73

அனுமன் விடை கூறல் (5962-5970)

சொல்லிய அனைவரும் அல்லென்; சொன்ன அப்
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்;
அல்லி அம் கமலமே அனைய செங்கண் ஓர்
வில்லிதன் தூதன் யான்; இலங்கை மேயினேன்.       5.13.74

'அனையவன் யார்?'என அறிதி ஆதியேல்
முனைவரும் அமரரும் மூவர் தேவரும்
எனையவர் எனையவர் யாவர் யாவையும்
நினைவு அரும் அருவினை முடிக்க நின்றுேளான்.       5.13.75

ஈட்டிய வலியும் மேல் நாள் இயற்றிய தவமும் யாணர்க்
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும்
தீட்டிய அறிவும் எய்தத் திருத்திய பிறவும் எல்லாம்
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடும் நீக்க நின்றான்.       5.13.76

தேவரும் பிறரும் அல்லன்; திசை களிறு அல்லன்; திக்கில்
காவலர் அல்லன்; ஈசன் கயிலை அம் கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப்
பூ வலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போல் ஆம்.       5.13.77

போதமும் பொருந்து கேள்விப் புரை அறு பயனும் பொய் தீர்
மாதவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும்
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின்
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற மூர்த்தி வில்லோன்.       5.13.78

காரணம் கேட்டி ஆயில், கடை இலா மறையின் கண்ணும்
ஆரணம் காட்ட மாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னோன்;
போர் அணங்கு இடங்கர் கவ்வப் பொதுநின்று'முதலே'என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்.       5.13.79

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கடந்து நின்ற காரணன், கைவில் ஏந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான்.       5.13.80

அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூணச் செம் நெறி செலுத்தித் தீயோர்
இறந்து உக நாறித் தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டுப்
பிறந்தனன், தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்.       5.13.81

'அன்னவற்கு அடிமை செய்வேன், நாமமும் அனுமன் என்பேன்,
நல்நுதல் தன்னைத் தேடி நால் பெரும் திசையும் போந்த
மன்னரில், தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி
தன் மகன், அவன்தன் தூதன், வந்தனென் தனியேன்'என்றான்.       5.13.82

இராவணன் வாலியின் நலங்களைப் பற்றி வினவக் கேட்டு அனுமன் நகுதல்

என்றலும் இலங்கை வேந்தன், எயிறு இனம் எழிலி நாப்பண்
மின் திரிந்தென்ன நக்கு, 'வாலி சேய் விடுத்த தூத!
வன் திறல் ஆய வாலி வலியன் கொல்! அரசின் வாழ்க்கை
நன்றுகொல்!'என்னலோடும் நாயகன் தூதன் நக்கான்.       5.13.83
வாலி இறந்த செய்தியை அனுமன் கூறுதல்

'அஞ்சலை, அரக்க! பார்விட்டு, அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி, மீளான்; வாலும் போய் விளிந்தது; அன்றே,
அஞ்சன மேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன், எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல்'என்றான்.       5.13.84
இராவணன் மற்றும் சில வினாவுதல்

'என் உடை ஈட்டினால் அவ் வாலியை எறுழ் வாய் அம்பால்
இன் உயிர் உண்டது? இப்போது யாண்டையான் இராமன் என்பான்?
அன்னவன் தேவி தன்னை அங்கதன் நாடல் உற்ற
தன்மையை உரைசெய்க'என்னச் சமீரணன் தனயன் சொல்வான்.       5.13.85
அனுமன் விடை பகர்தல் (5974-5975)

'தேவியை நாடி வந்த செங்கணாற்கு எங்கள் கோமான்
ஆவி ஒன்றாக நட்டான்; 'அருந்துயர் துடைத்தி'என்ன,
ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன்'உருமையோடும்
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான்'.       5.13.86

'ஆயவன் தன்னொடு ஆண்டுத் திங்கள் ஓர் நான்கும் வைகி
மேய வெம் சேனை சூழ, வீற்று இனிது இருந்த வீரன்,
போய் இனி நாடும் என்னப் போந்தனம், புகுந்தது ஈது'என்று
ஏயவன் தூதன் சொன்னான், இராவணன் இதனைச் சொன்னான்.       5.13.87

இராவணன் இகழ்ந்துரைத்தல் (5976-5977)

'உம் குலத் தலைவன் தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சியானை
வெம் கொலை அம்பில் கொன்றாற்கு ஆள் தொழில் மேல் கொண்டீரேல்,
எங்கு உலப்பு உறும் நும் சீர்த்தி? நும்மொடும் இயைந்தது என்றால்
மங்குலில் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து. மாதோ'.       5.13.88

'தம் முனைக் கொல்வித்து, அன்னாற் கொன்றவற்கு அன்பு சான்ற
உம் இனத் தலைவன் ஏவ, யாது எமக்கு உணர்த்தல் உற்றது?
எம் முனைத் தூது வந்தாய் இகல்புரி தன்மை என்னை?
நொம் எனக் கொல்லாம்! நெஞ்சம் அஞ்சலை, நுவல்தி'என்றான்.       5.13.89

அனுமன் ஆராய்ந்து சில கூறத் தொடங்குதல்

துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களைப்
புணர்த்து நோக்கிப்'பொது நின்ற நீதியை
உணர்த்தினால் அது உறும்'என உன்ன அரும்
குணத்தினான் உம் இனையன கூறினான்.       5.13.90

அனுமன் கூறிய அறிவுரைகள் (5979-5994)

தூது வந்தது; சூரியன் கான்முளை
ஏது ஒன்றிய நீதி இயைந்தன
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன
கோது இறந்தன நின் வயின் கூறுவாம்.       5.13.91

வறிது வீழ்த்தனை வாழ்க்கையை; மன் அறம்
சிறிதும் நோக்கலை; தீமை திருத்தினாய்;
இறுதி உற்றுளது; ஆயினும் இன்னும் ஓர்
உறுதி கேட்டி; உயிர் நெடிது ஓம்புவாய்!       5.13.92

'போய் இற்றீர்; நும் புலன் வென்று போற்றிய
வாயில் தீர்வு அரிது ஆகிய மா தவம்
காயில் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள்
தீயில் தூயவளைத் துயர் செய்ததால்.       5.13.93

'இன்று வீந்தது; நாளைச் சிறிது இறை
நின்று வீந்தது; அல்லால் இறை நிற்குமோ?
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை
வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால்.       5.13.94

"தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது"எனும்
வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்த
தூய்மை தூயவள் தன்வயின் தோன்றிய
நோய்மையால் துடைக்கின்றனை; நோக்கலாய்.       5.13.95

'திறம் திறம்பிய காமச் செருக்கினால்
மறந்து தத்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார்?       5.13.96

'நாமத்து ஆழ்கடல் ஞாலம் புரந்தவர்
ஈமத்தால் மறைந்தார் இளமாதர் பால்
காமத்தால் இறந்தார் களிவண்டு உறை
தாமத் தாரினர் எண்ணினும் சால்வரோ?       5.13.97

'பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு
இருள் உண்டாம் என எண்ணலர்; ஈதலும்
அருளும் காதலில் தீர்தலும் அல்லது ஓர்
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்.       5.13.98

'இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகை உற நாண் இலன்
பச்சை மேனி புலர்ந்து பழி படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ?       5.13.99

'ஓத நீர் உலகு ஆண்டவர் உன்துணைப்
போத நீதியர் ஆர் உளர்? போயினார்
வேத நீதி விதிவழி மேல்வரும்
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ?       5.13.100

வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால்
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின்
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
அறுப்பு உண்டால் அது அழகு எனல் ஆகுமே.       5.13.101

பாரை ஞூறுவ பல் பல பொன் புயம்
ஈர் ஐஞ்ஞூறு தலை உள; என்னினும்
ஊர் ஐஞ்ஞூறும் கடும் கனல் உள் பொதி
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ.       5.13.102

'புரம் பிழைப்பு அரும் தீ புகப் பொங்கியோன்
நரம்பு இழைத்தன பாடலின் நல்கிய
வரம் பிழைக்கும்; மறை பிழையாதவன்
சரம் பிழைக்கும்'என்று எண்ணுதல் சாலுமோ?       5.13.103

ஈறு இல் நாண் உக எஞ்சல் இல் நல் திரு
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ?
வேறும் இந் நகை ஆய வினைத் தொழில்
தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்!       5.13.104

பிறந்து உளார் பிறவாத பெரும் பதம்
சிறந்து உளார் மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய்
இறந்து உளார் பிறர் யாரும் இராமனை
மறந்து உளார் உளர் ஆகிலர்; வாய்மையால்.       5.13.105

"ஆதலால் தன் அரும் பெறல் செல்வமும்
ஓது பல் கிளையும் உயிரும் பெறச்
சீதையைத் தருக"என்று எனச் செப்பினான்;
சோதியான் மகன் நிற்கு எனச் சொல்லினான்.       5.13.106

இராவணன் நகுதல்

என்றலும்'இவை சொல்லியது எற்கு ஒரு
குன்றில் வாழும் குரங்கு கொல் ஆம்; இது
நன்று நன்று'என மாநகை செய்தனன்;
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான்.       5.13.107
இராவணன் அனுமனை வினவுதல்

'குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும்
இருக்க; நிற்க; நீ என்கொல்; அடா! இரும்
புரத்தினுள் தரும் தூது புகுந்த பின்
அரக்கரைக் கொன்றது? அஃது உரையாய்'என்றான்.       5.13.108
அனுமன் விடை

'காட்டுவார் இன்மையால் கடி காவினை
வாட்டினேன்; என்னைக் கொல்ல வந்தார்களை
வீட்டினேன்; பின்னும் மென்மையினால் உன்தன்
மாட்டு வந்தது காணும் மதியினால்.       5.13.109

வீடணன் தூதனாய் வந்த அனுமனைக் கொல்லல் ஆகாது எனல் (5998-6004)

என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக
மின்னும் வாள் எயிற்றன் சினம் வீங்கினான்;
கொன்மின் என்றனன்; கொல்லியர் சேர்தலும்
நின்மின் என்றனன்; வீடணன் நீதியான்.       5.13.110

ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை
நீண்ட கையன் வணங்கினன்;'நீதியாய்
மூண்ட கோபம் முறையது அன்று ஆம்'என
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான்.       5.13.111

அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவம் நெறி உணர்ந்து, தக்கோய்!
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ, இயம்பு'தூது
வந்தனென்'என்ற பின்னும் கோறியே? மறைகள் வல்லோய்       5.13.112

பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டினுள், புறத்துள், பொய்தீர்
வேதம் உற்று இயங்கு வைப்பின், வேறு வேறு இடத்து வேந்தர்,
மாதரைக் கொலை செய்தார்கள் உளர் என வரினும், வந்த
தூதரைக் கொன்றுளார்கள் யாவரே? தொல்லை நல்லோர்.       5.13.113

பகைப்புலன் அணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து, பற்றார்
மிகைப்புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகைப்புலம் கருமத்தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும்
நகைப்புலன் பிறிது உண்டாமோ? நம் குலம் நவை உண்டாமே?       5.13.114

முத்தலை எஃகன் மற்றை முராந்தகன் முனிவன் முன்னா
அத்தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்று ஆமால்;
மெய்த்தலை உலகம் காக்கும் வேந்த! நீ, வேற்றோர் ஏவ
இத்தலை எய்தினானைக் கொல்லுதல், இழுக்கம்; இன்னும்.       5.13.115

'இளையவள் தன்னைக் கொல்லாது, இரு செவி மூக்கொடு ஈர்ந்து,
'விளைவு உரை'என்று விட்டார் வீரராய் மெய்ம்மை ஓர்வார்,
களைதியேல் ஆவி, நம்பால் இவன் வந்து கண்ணில் கண்ட
அளவு உரையாமல் செய்தி ஆதி;' என்று அமையச் சொன்னான்.       5.13.116

இராவணன் அனுமன் வாலில் தீக்கொளுவப் பணித்தல்

"நல்லது உரைத்தாய்; நம்பி! இவன் நவை செய்தானே ஆனாலும்,
கொல்லல் பழுதே; போய் இடை நீ கூறிக் கொணர்தி கடிது" என்னாத்
"தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு நகரைச் சூழ்போக்கி,
எல்லை கடக்க விடுமின்கள்" என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார்.       5.13.117

காலத்து,'அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல்;
தூய பாசம் எனப் பலவும் கொணர்ந்து பிணிமின் தோள்'என்னா
மேய தெய்வப் படைக்கலத்தை விட்டான், அமரர் போர் வென்றான்;
ஏ எனாமுன் இடை புக்குத் தொடைவன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார்.       5.13.118

அரக்கர்கள் கண்ட கயிறுகளையெல்லாம் கொண்டு வருதல்

நாட்டின் நகரின் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே!
வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற; தேரும் விசி துறந்த;
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த;
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை.       5.13.119

பல்வேறு பாசங்களால் அனுமனைக் கட்டுதல்

மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த, தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த;
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டுக் கட்டினார்.       5.13.120

அனுமன் மகிழ்தல்

"கடவுள் படையைக் கடந்து, அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே,
விடுவித்து அளித்தார் தெவ்வரே; வென்றேன் அன்றோ இவர் வென்றி;
சுடுவிக்கின்றது,'இவ் வூரைச் சுடுக' என்று உரைத்த துணிவு"என்று
நடு உற்று அமைய உற நோக்கி, முற்றும் உவந்தான் நவை அற்றான்.       5.13.121

அனுமன் அடங்கிச் செல்லுதல்

நொய்ய பாசம் புரம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி,
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா
ஐயன், விஞ்சைதனை அறிந்தும், அறியாதான் போல், அவிஞ்சை எனும்
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான்.       5.13.122

அரக்கர் அனுமன் வாலில் தீக்கொளுவுதல்

வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து, வெள்ளிடையின்
போந்து, புறம் நின்று இரைக்கின்ற பொறைதீர் மறவர் புறம் சுற்ற,
ஏந்து நெடுவால் கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய்;
காந்து கடும் தீக் கொளுத்தினார், ஆர்த்தார்; அண்டம் கடிகலங்க.       5.13.123

அனுமனைக் காண அரக்கர் திரளுதல்

ஒக்க ஒக்க உடன் விசித்த உலப்பு இலாத உர பாசம்,
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு ஆயிரவர் பற்றினார்;
புக்க படைஞர், புடை காப்போர், புணரிக் கணக்கர்; புறம் செல்வோர்
திக்கின் அளவால்; அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால       5.13.124

அனுமனுக்கு உற்றதைக் காண வருமாறு அரக்கர் அனைவரையும் அழைத்தல்

'அந்த நகரும் கடி காவும் அழிவித்து, அக்கன் முதலாயோர்
சிந்த நூறிச், சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப,
வந்த குரங்கிற்கு உற்றதனை, வம்மின் காண வம்'என்று
தம் தம் தெருவும் வாயில்தொறும் யாரும் அறியச் சாற்றினார்.       5.13.125

அனுமனுக்கு உற்றது கேட்ட பிராட்டி வருந்தல்

ஆர்த்தார், அண்டத்து அப்புறத்தும்
      அறிவிப்பார் போல்; அங்கோடு இங்கு
ஈர்த்தார், முரசம் எற்றினார்,
      இடித்தார், தழெித்தார், எம் மருங்கும்
பார்த்தார், ஓடிச் சானகிக்கும்
      பகர்ந்தார்; அவளும் உயிர் பதைத்தாள்,
வேர்த்தாள், உலந்தாள், விம்மினாள்,
      விழுந்தாள், அழுதாள், வெய்து உயிர்த்தாள்       5.13.126

பிராட்டி அங்கியங் கடவுளை வேண்டல்

'தாயே அனைய கருணையான் துணையை, யாதும் தகவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர் நலியக் கண்டால், நல்காயோ?
நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும், கற்பினால்
தூயேன் என்னில் தொழுகின்றேன், எரியே அவனைச் சுடல்'என்றாள       5.13.127

அனல் குளிர்தல் (6016-6018)

வெளுத்த மெல் நகையவள் விளம்பும் ஏல்வையின்
ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான்;
தளிர்த்தன; மயிர்ப் புறம் சிலிர்ப்பத் தண்மையால்
குளிர்த்தது; அக் குரிசில் வால் என்பு கூரவே.       5.13.128

மற்று இனிப் பல என்? வேலை வட அனல், புவி அளாய
கற்றை வெம் கனலி, மற்றைக் காயம் தீ, முனிவர் காக்கும்
முற்றுறு மும்மைச் செந்தீ, முப்புரம் முருங்கச் சுட்ட
கொற்றவன் நெறறிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே. 129

அண்டமும் கடந்தான் அம் கை அனலியும் குளிர்ந்தது; அங்கிக்
குண்டமும் குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச்
சண்ட வெம் கதிர ஆகித் தழங்கு இருள் விழுங்கும் தாவு இல்
மண்டலம் குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ.       5.13.130

அனல் குளிர்ந்தமையால் அனுமன் மகிழ்தல்

வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி, வெம் தீ
நிற்பினும், சுடாது நின்ற நீர்மையை, நினைவின் நோக்கி,
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும்,'சனகன் பாவை
கற்பினால் இயன்றது'என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான்.       5.13.131

அனுமன் இலங்கைநகர் முழுதும் காணுதல்

அற்றை அவ் இரவில், தான் தன் அறிவினால் முழுதும் உன்னப்
பெற்றிலன் எனினும், ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே,
மற்று உறு பொறி முன் செல்ல, மறைந்து செல் அறிவு மானக்
கற்றிலா அரக்கர் தாமே காட்டலின், தெரியக் கண்டான்       5.13.132

அனுமன் மேலெழ அரக்கர் தோளற்று வீழ்தல்

முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான்,
'வழுவுறு காலம்'ஈது என்று எண்ணினன், வலிதின் பற்றித்
தழுவினர் இரண்டு நூறாயிரம் புயத் தடக்கை, தாம்போடு
எழு என நால, விண்மேல் எழுந்தனன்; விழுந்த எல்லாம்.       5.13.133

அனுமனுடைய தோற்றம்

இற்ற வாள் அரக்கர் நூறாயிரவரும், இழந்த தோளார்,
முற்றினார் உலந்தார்; ஐயன், மொய்ம்பினோடு உடலை மூழ்கச்
சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின் சுற்றம்
பற்றிய கலுழன் என்னப் பொலிந்தனன்; விசும்பின் பாலான்       5.13.134

அனுமன் தன்வாலை இலங்கைமீது செலுத்தல்

'துன்னலர் புரத்தை முற்றும் சுடுதொழில் தொல்லையோனும்,
பன்னின பொருளும், நாணப் பாதகர் இருக்கை பற்ற,
மன்னனை வாழ்த்திப் பின்னை வயங்கு எரி மடுப்பென்'என்னாப்
பொன் நகர் மீதே தன்போர் வாலினைப் போக விட்டான்       5.13.135

வாலின் வருணனை (6024-6025)

தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு,'இன்னே
அன்னவர்க்கு இறுதி ஆக, அணி நகர் அழிப்பல்;' என்னாச்
செந்நிறச் சிகைய வெம் போர் மழு, பின்னர்ச் சேறல் ஒக்கும்;
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல்கெழு கொற்ற நீள் வால்       5.13.136

அப்பு உறழ் வேலை காறும் அலங்கு பேர் இலங்கை தன்னை,
எப் புறத்தளவும் தீய ஒரு கணத்து எரித்த கோட்பால்,
துப்பு உறழ் மேனி அண்ணல், மேருவில் குழையத் தோளால்
முப்புரத்து எய்த கோலே ஒத்தது; அம் மூரிப் போர் வால்       5.13.137

அனுமன் தன் வாலில் பற்றிய தீயை இலங்கை முழுதும் பரவும்படி உய்த்தல்

உகக்கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன் நாட்டம்
சிகைக் கொழுங் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல,
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரிநகர் வீயப், போர் வால்,
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன், சேணில் உய்த்தான்       5.13.138

அனுமன் தன் வாலில் பற்றிய தீயுடன் இலங்கை நகர மாளிகைதோறும் தாவிச் செல்லுதல்

வெள்ளியின் பொன்னின் நானா விளங்குபல் மணியின் விஞ்சை
தெள்ளிய கடவுள் தச்சன், கை முயன்று அரிதின் செய்த,
தள் அறு மனைகள் தோறும், முறை முறை தாவிச் சென்றான்;
ஒள் எரியோடும் குன்றத்து ஊழிவீழ் உருமொடு ஒப்பான்       5.13.139

இலங்கை நகரை எரி உண்டமை

நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன், அன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்,
காலமே என்ன, மன்னோ கனலியும் கடிதின் உண்டான்.       5.13.140
--------------

5.14 இலங்கை எரியூட்டு படலம் 6029 - 6092

மாளிகைகளில் தீப்பற்றல்

கொடியைப் பற்றி விதானம் கொளுவி தான்
நெடிய தூணைத் தழுவி நெடும் சுவர்
முடியச் சுற்றி முழுதும் முருக்கிற்றால்;
கடி கொள் மா நகர் தோறும் கடும் கனல்.       5.14.1

நகரமக்கள் அங்குமிங்கும் ஓடிக் கூக்குரலிடல்

வாசல் இட்ட எரி மண மாளிகை
மூச முட்டி முழுதும் முருக்கிற்றால்
ஊசல் இட்டு என ஓடி உளைந்து உலைப்
பூசல் இட்டது இரியல் புறம் எலாம்.       5.14.2

மணிமாளிகைகளில் மாதர் மயங்கி அலமரல்

மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை
பிணியில் செம் சுடர்க் கற்றை பெருக்கலால்
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார்
அணி வளைக் கை நல்லார் அலமந்து உளார்.       5.14.3

புகையில் அகப்பட்ட மகளிர்

வான் அகத்தை நெடும் புகை மாய்த்தலால்
போன திக்கு அறியாது புலம்பினார்;
தேன் அகத்து மலர் சிலர் சிந்திய
கான் அகத்து மயில் அன்ன காட்சியார்.       5.14.4

தலையில் தீப்பற்றியதும் பற்றாததும் தெரியாமை

கூய்க் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீச் சொரிந்தனர்; மாதரும் வீரரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீக் கொளுத்தினவும் தெரியாமையால்.       5.14.5

ஒரு தத்துவக் கருத்து

இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு
புல்லிக் கொண்டன; மாயைப் புணர்ப்பு அறக்
கல்வித் தம் இயல்பு எய்தும் கருத்தர் போல்.       5.14.6

புகை மேலோங்கி எழுதல்

ஆயது அங்கு ஒர் குறள் உரு ஆய் அடித்
தாய் அளந்து உலகங்கள் தரக் கொள்வான்
மீ எழுந்த கரியவன் மேனியில்
போய் எழுந்து பரந்தது; வெம் புகை.       5.14.7

எரியினால் யானைகள் நிறம் மாறுதல்

நீலம் நின்ற நிறத்தன கீழ்நிலை
மாலின் வெம் சின யானையை மானுவ;
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால்
தோல் உரிந்து கழன்றன; தோல் எலாம்.       5.14.8

எருமைக்கு மாதர் ஒதுங்கல்

மீது இமம் கலந்தால் அன்ன வெம் புகை
சோதி மங்கலத் தீயொடு சுற்றலால்
மேதி மங்குலின் வீழ் புனல் வீழ் மட
ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார்.       5.14.9

அனற்பொறிகளால் கடல்மீன் மடிதல்

பொடித்து எழுந்து பெரும் பொறி போவன
இடிக் குலங்களின் வீழ்தலில் எங்கணும்
வெடித்த; வேலை வெதும்பிட மீன்குலம்
துடித்து வெந்து புலர்ந்து உயிர் சோர்ந்தவால்.       5.14.10

பொன்மாளிகை உருகித் திரளல்

பருகு தீ மடுத்து உள் உறப் பற்றலால்
அருகு நீடிய ஆடகத் தாரைகள்
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன
திருகில் பொன் நெடும் தண்டில் திரண்டவால்.       5.14.11

தரையும் வெந்தது

உரையின் முந்து உலகு உண்ணும் எரி அதால்
வரை நிவந்து அன்ன பன் மணி மாளிகை
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ?
தரையும் வெந்தது; பொன் எனும் தன்மையால்.       5.14.12

புகை வானுலகத்தும் பரவல்

கல்லினும் வலிது ஆம் புகைக் கற்றையால்
எல்லி பெற்றது; இமையவர் நாடு இயல்
வல்லி கோலி நிவந்தன; மா மணிச்
சில்லி ஓடும் திரண்டன தேர் எலாம்.       5.14.13

கனலும் கள் குடித்தது

பேயம் மன்றினில் நின்று பிறங்கு எரி
மாயர் உண்ட நறவு மடுத்ததால்;
தூயர் என்றவர் வைகு இடம் துன்னினால்
தீயர்; அன்றியும் தீமையும் செய்வரால்.       5.14.14

கடலும் மேகமும் வெப்பமுறுதல்

தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல
வழு இல் வேலை உலையின் மறுகின;
எழும் எழும் சுடர்க் கற்றை சென்று எய்தலால்
குழுவு தண்புனல் மேகம் கொதித்தவே.       5.14.15

பேய்த்தேரைப் புனல் என மயங்கல்

ஊனில் ஓடும் எரியொடு உயங்குவார்
கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா
வானில் ஓடும் மகளிர் மயங்கினார்
வேனில் ஓடு அரும் தேர் இடை வீழ்ந்தனர்.       5.14.16

வண்டு தீச்சுடரைத் தாமரை என மயங்கல்

தேன் அவாம் பொழில் தீப் படச் சிந்திய
சோனை மா மலர்த் தும்பி தொடர்ந்து அயல்
போன தீச் சுடர் புண்டரிகத் தடம்
கானம் ஆம் என வீழ்ந்து கரிந்தவே.       5.14.17

நற்கடன் பூண்ட நங்கையர் மடிதல்

"நல் கடம் இது நம் உயிர் நாயகன்
மற்கடம் தறெ மாண்டனன்; வாழ்வு இலம்;
இல் கடந்து இனி ஏகலம் யாம்"எனா
வில் கடந்த நுதல் சிலர் வீடினார்.       5.14.18

கா வேரொடும் கரிதல்

பூ கரிந்து முறி பொறி ஆய் அடை
நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய்
மீ கரிந்து நெடும் பணை வேர் உறக்
கா கரிந்து கரும் கரி ஆனவே.       5.14.19

விண்ணவர் ஊர்கள் உருகி ஒழுகல்

கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
ஊர் முழுக்க வெதுப்ப உருக்கின;
தூர் ஒழுக்கம் அறாமையின் துன்னு பொன்
வேர் விழுப்பது போன்றன விண் எலாம்.       5.14.20

அரக்கரும் அமுதுண்டு ஆவி பெறல் (6049-6050)

நெருக்கி மீ மிசை ஓங்கும் நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சேண் உற
உருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.       5.14.21

பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல்
கருகி முற்றும் எரிந்து எழு கார் மழை
அருகு சுற்றும் இருந்தையது ஆய் அதின்
உருகு பொன்திரள் ஒத்தனன் ஒள் கதிர்.       5.14.22

குதிரைகள் எரிபடல்

தளை கொளுத்திய தாவு எரி தாமணி
முளை கொளுத்தி முகத்து இடை மொய்த்தபேர்
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன;
வளை குளப்பின் மணி நிறம் வாசியே.       5.14.23

வான் ஏற முயன்ற அரக்கர் எரியில் விழல்

எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகைக்
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர்; கோளும் உற்று
அழுந்துபட்டு உளர் ஒத்து அயர்ந்து ஆர் அழல்
விழுந்து முற்றினர்; கூற்றை விழுங்குவார்.       5.14.24

அரக்கியர் கூந்தலில் தீப்பற்றல்

கோசிகத் துகில் உற்ற கொழும் கனல்
தூசு இன் உத்தரிகத்தொடு சுற்று உறா
வாச மைக் குழல் பற்ற மயங்கினார்
பாசிழைப் பரவைப் படர் அல்குலார்.       5.14.25

ஆடையில் தீப்பற்றிய அரக்கர் கடலில் மண்டுதல்

நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர்
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார்
புலவியின் கரை கண்டவர் அமிர்து உணப் புணரும்
கலவியின் கரை கண்டிலர் மண்டினர் கடல் மேல்.       5.14.26

கிளி பதைப்பக் கண்டு மகளிர் வருந்தல்

பஞ்சரத்தொடு, பசும் நிறக் கிளி வெந்து பதைப்ப,
அஞ்சனக் கணில் அருவி நீர் முலைமுன்றில் அலைப்பக்
குஞ்சரத்து அன கொழுநரைத் தழுவு உறும் கொதிப்பால்,
மஞ்சு உறப் புகும் மின் எனப் புகை இடை மறைந்தார்       5.14.27

புகைப்படலத்துள் மறைந்த மகளிர்

வரையினைப் புரை மாடங்கள் எரி புக, மகளிர்,
புரை இல் பொன் கலன் வில் இட, விசும்பு இடைப் போவார்,
கரை இல் நுண் புகைப் படலையில் கரந்தனர்; கலிங்கத்
திரையின் உள் பொதி சித்திரப் பாவையின் செயலார்       5.14.28

மணம் பரப்பி மலர்ப்பொழில் எரிதல்

அகரும் நல் நறும் சாந்தமும் முதலின அனேகம்
புகர் இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்பப்,
பகரும் ஊழியில், கால வெம் கடும் கனல் பருகும்
மகர வேலையின், வெந்தன நந்தன வனங்கள்.       5.14.29

கற்பகக் காவும் கனலும் இடைதெரியாமை

மினைப் பரந்து எழு கொழும் சுடர், உலகு எலாம் விழுங்க,
நினைப்பு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால்,
சினைப் பரந்து, எரி சேர்ந்து இலா நின்றவும், சில, வெம்
கனல் பரந்தவும், தெரிகில; கற்பகக் கானம்       5.14.30

புகை கடலை விழுங்கல்

மூளும் வெம் புகை விழுங்கலின், சுற்று உறு முழு நீர்
மாளும் வண்ணம், மா மலை நெடும் தலை தொறும் மயங்கிப்
பூளை வீய்ந்து அன்ன போவன, புணரியில் புனல் மீன்
மீள, யாவையும் தெரிந்து இல முகில்கணம் விசைப்ப       5.14.31

திசையனைத்தும் புகை சூழல்

மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளி அம் கிரியும்
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ;
பக்க வேலையின் படியது பாற்கடல், முடிவில்
திக்கயங்களும், கயங்களும், வேற்றுமை தெரியா.       5.14.32

அரக்கரும் அரக்கியரும் கடலில் மூழ்கல்

கரிந்து சிந்திடக் கடும் கனல் தொடர்ந்து, உடல் கதுவ
உரிந்த மெய்யினர், ஓடினர், நீர் இடை ஒளிப்பார்,
விரிந்த கூந்தலும், குஞ்சியும் மிடைதலில், தாமும்,
எரிந்து வேகின்ற ஒத்தன, எறிதிரைப் பரவை.       5.14.33

மகவொடு போந்த அரக்கியர் அவலநிலை

மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை
அரும் கையால் பற்றி, மற்று ஒரு மகவு பின் அரற்ற,
நெருங்கி, நீரொடு, நெறிகுழல் சுறுக் கொள நீங்கிக்
கரும் கடல் தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி.       5.14.34

படைக்கலம் உருகி ஒன்றாதலில் ஒரு உண்மை

வில்லும், வேலும், வெம் குந்தமும் முதலின விறகாய்,
எல் உடைச் சுடர் எனப் புகர் எஃகு எலாம் உருகத்
தொல்லை நல் நிலை, தொடர்ந்து பேர் உணர்வு அன்ன தொழிலச்
சில்லி உண்டையில் திரண்டு அன படைக்கலச் சாலை.       5.14.35

தீப்பற்ற யானைகள் ஓடல்

செய் தொடர்க் கன வல்லியும், புரோசையும், சிந்தி,
நொய்தின் இட்ட வன் தறி பறித்து, உடல் எரி நுழைய,
மொய் தடச் செவி நிறுத்தி, வால் முதுகினை முருக்கிக்
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா.       5.14.36

பறவைகளை மீன்கூட்டம் விழுங்கல்

வெருளும் வெம் புகைப் படலையின் மேல் செல வெருவி,
இருளும் வெம் கடல் விழுந்தன, எழுந்தில பறவை;
மருளில் மீன் கணம் விழுங்கிட உலந்தன; மனத்து ஓர்
அருள் இல் வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தனர் அனைய.       5.14.37

இராவணன் மாளிகையில் தீப்புகல்

நீரை வற்றிடப் பருகி மா நெடு நிலம் தடவித்
தாருவைச் சுட்டு மலைகளைத் தணல் செய்து தனிமா
மேருவைப் பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல்
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது; உயர் தீ.       5.14.38

வானவர் மகளிர் நிலைகுலைந்தோடல்

வான மாதரூம் மற்று உள மகளிரும் மறுகிப்
போன போன திக்கு அறிவரும் இரியலர் போனார்;
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர்; இலங்கைக்
கோன் அவ் வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைவார்.       5.14.39

மகளிர் குழலும் நறுமணம் பெறல்

நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகையத்
தேவு தேன் மழை செறி பெரும் குலம் எனத் திசையின்
பாவைமார் நறும் குழல்களும் பரிமளம் கமழ்ந்த.       5.14.40

இராவணன் எழுநிலை மாடம் எரிதல்

சூழும் வெம் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெம் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்,
ஊழி வெம் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்தன ஒத்தன, நெடும் நிலை ஏழும்.       5.14.41

இராவணன் மாளிகை உருகி மேருப் போலத் தோன்றல்

பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தடம் நெடு மா நிலைக் கோயில்
நின்று துற்று எரி பருகிட நெரிவு உற உருகித்
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டு ஆம் எனத் தெரிந்த.       5.14.42

இராவணன் முதலியோர் வெளியேறுதல்

அனைய காலையில் அரக்கனும், அரிவையர் குழுவும்,
புனை மணிப் பொலி புட்பக விமானத்துப் போனார்;
நினையும் மாத்திரை யாவரும்; நீங்கினர்; நீங்கா
வினை இலாமையில் வெந்தது, அவ் விலங்கல் மேல் இலங்கை.       5.14.43

இராவணன் நகர் எரிந்த காரணம் வினவுதல்

ஆழித் தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி
'ஏழுக்கு ஏழென அடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழிக் காலம் வந்து உற்றதோ? பிறிது வேறு உண்டோ?
பாழித் தீ சுட வெந்தது என்? நகர்' எனப் பகர்ந்தான்.       5.14.44

நிகழ்ந்தது கூற இராவணன் சினத்தல்

கரங்கள் கூப்பினர், தங்களைத் திருவொடும் காணார்,
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் :'இறையோய்!
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டது'என்று உரைத்தலும், இராவணன் கொதித்தான்.       5.14.45

இராவணன் சினந்து நகைத்தல்

இன்று புன் தொழில் குரங்கு தன் வலியினால் இலங்கை
நின்று வெந்து மா நீறு எழுகின்றது; நெருப்புத்
தின்று தேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்;
நன்று நன்று போர் இராவணன் வலி'என நக்கான்.       5.14.46

எரியைப் பற்றிவரக் கட்டளையிடல்

'உண்ட நெருப்பைக்
கண்டு எதிர் பற்றிக்
கொண்டு அணைக'என்றான்
அண்டரை வென்றான்.       5.14.47

அனுமனைப் பற்றிவரக் கட்டளையிடல்

'உற்று அகலா முன்
செற்ற குரங்கைப்
பற்றுமின்'என்றான்
முற்றும் உணர்ந்தான்.       5.14.48

வீரர் விரைந்து செல்லல்

சார் அயல் நின்றார்
வீரர் விரைந்தார்;
'நேருதும்'என்றார்
தேரினர் சென்றார்.       5.14.49

பல வீரர்கள் செல்லல்

எல்லை இகந்தார்
வில்லர் வெகுண்டார்
பல் அதிகாரத்
தொல்லர் பெயர்ந்தார்.       5.14.50

வீரர்கள் எழுவர் போர்க்கு எழல்

நீர்கெழு வேலை நிமிர்ந்தார்
தார்கெழு தானை சமைந்தார்
போர்கெழு மாலை புனைந்தார்
ஓர் எழு வீரர் உயர்ந்தார்.       5.14.51

வீரர் அனுமனைக் காணல்

விண்ணினை மேலை விளம்பார்;
மண்ணினை ஓடி வளைந்தார்;
அண்ணலை ஓடி அணைந்தார்;
கண்ணினில் வேறு அயல் கண்டார்.       5.14.52

அரக்கர் அனுமனைச் சூழ்தல்

'பற்றுதிர் பற்றுதிர்'என்பார்;
'எற்றுதிர் எற்றுதிர்'என்பார்;
'சுற்றுதிர் சுற்றுதிர்'என்பார்;
முற்றினர் முற்றும் முனிந்தார்.       5.14.53

அனுமனும் அரக்கரும் பொருதல் (6082-6088)

ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார்;
கால் கொடு கை கொடு கார்போல்
வேல் கொடு கோலினர்; வெம்தீ
வால் கொடு தானும் வளைந்தான்.       5.14.54

பாதவம் ஒன்று பகுத்தான்;
மாதிரம் வாலின் வளைந்தான்;
மோதினன்; மோத முனிந்தார்
ஏதியும் நாளும் இழந்தார்.       5.14.55

நூறிட மாருதி நொந்தார்
ஊறிட ஊன் இடு புண் நீர்
சேறு இட ஊரிடு செம்தீ
ஆறிட ஓடினது; ஆறாய்.       5.14.56

தோற்றினர் துஞ்சினர் அல்லால்
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார்;
காற்றின் மகன் கலை கற்றான்
கூற்றினும் மும்மடி கொன்றான்.       5.14.57

மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
மொய்ம்பினர் வீரர் முடிந்தார்
ஐம்பதினாயிரர் அல்லார்
பைம் புனல் வேலை படர்ந்தார்.       5.14.58

தோய்த்தனன் வால் அது தோயக்
காய்த்திய வேலை கலந்தார்
போய்த்திலர் பொன்றினர் போனார்
ஏய்த்து என மைந்தர் எதிர்ந்தார்.       5.14.59

சுற்றின தேரினர் தோலா
வில் தொழில் வீரம் விளைத்தார்
எற்றினன் மாருதி எற்ற
உற்று எழு வீரர் உலைந்தார்.       5.14.60

பிராட்டி தங்கும் சோலையில் தீ பரவாமை

விட்டு உயர் விஞ்சையர்'வெம் தீ
வட்ட முலைத் திரு வைகும்
புள் திரள் சோலை புறத்தும்
சுட்டிலது'என்பது சொன்னார்.       5.14.61

பிராட்டியை அனுமன் வணங்கி மகிழ்தல்

வந்து அவர் சொல்ல மகிழ்ந்தான்
வெம் திறல் வீரன் வியந்தான்
உய்ந்தனென் என்ன உவந்தான்
பைந்தொடி தாள்கள் பணிந்தான்.       5.14.62

பிராட்டி மகிழ அனுமன் மீளல

பார்த்தனள் சானகி பாரா
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள்;
'வார்த்தை என்?''வந்தனை'என்னாப்
போர்த் தொழில் மாருதி போனான்.       5.14.63

அனுமன் செல்ல அழல் மறைதல்

'தெள்ளிய மாருதி சென்றான்
கள்ள அரக்கர்கள் கண்டால்
எள்ளலர் பற்றுவர்'என்னா
ஒள் எரியோனும் ஒளித்தான்.       5.14.64
---------------

5.15 திருவடி தொழுத படலம் 6093 - 6185

அனுமன் (அரிஷ்டமென்னும்) குன்றினின்று வான் வழி மீளுதல்

'நீங்குவென் விரைவின்'என்னும் நினைவினன் மருங்கு நின்றது
ஆங்கு ஒரு குடுமிக் குன்றை அருக்கனில் அணைந்த ஐயன்,
வீங்கினன் உலகை எல்லாம்; விழுங்கினன் என்ன, வீரன்
பூங் கழல் தொழுது வாழ்த்தி விசும்பு இடைக் கடிது போனான்.       5.15.1

வழியிடை மைந்நாகமலையிடம் உற்றதுணர்த்திய அனுமன் மகேந்திர வரையில் குதித்தல்

மைநாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்திக்
கை நாகம் அனையோன், உற்றது உணர்த்தினன்; கணத்தின் காலைப்
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடும் வரவு பார்க்கும்
கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடைக் குதியும் கொண்டான்.       5.15.2

வானரவீரர் அனுமன் வரக்கண்டு மகிழ்தல்

போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க,
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர், மன்னோ
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தனர்; பறவைப் பார்ப்பு
தாய் வரக் கண்டது அன்ன உவகையின், தளிர்த்தார் அம்மா.       5.15.3

அனுமன் வரவால் வானரவீரர்பால் நிகழ்ந்த செயல்கள்

அழுதனர் சிலவர், முன் நின்று ஆர்த்தனர் சிலவர், அண்மித்
தொழுதனர் சிலவர், ஆடித் துள்ளினர் சிலவர், அள்ளி
முழுது உற விழுங்குவார் போல் மொய்த்தனர் சிலவர், முற்றும்
தழுவினர் சிலவர், கொண்டு சுமந்தனர் சிலவர், தாங்கி.       5.15.4

வானரர் அனுமனை உபசரித்தல்

தேனொடு கிழங்கும் காயும் நறியன, அரிதின் தேடி
மேல்முறை வைத்தோம்; அண்ணல்! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி;
மான வாள் முகமே எங்கட்கு உரைத்தது, மாற்றம்; என்று,
தான் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார்.       5.15.5

அனுமனுடலில் உள்ள புண்களைக்கண்டு வானரர் வருந்துதல்

தாள்களில் மார்பில் தோளில் தலைகளில் தடக்கை தம்மில்
வாள்களில் வேலில் வாளி மழைகளின் வகிர்ந்த புண்கள்,
நாள்கள்மேல் உலகில் சென்ற எண்ணன, நம்பி தன்னை
ஊழ் கொள நோக்கி நோக்கி, உயிர் உக உளைந்து உயிர்த்தார்.       5.15.6

அனுமன் அங்கதன் முதலியோரை வணங்கி அவரிடம் பிராட்டி கூறிய ஆசியையும் தெரிவித்தல்

வாலி காதலனை முந்தி வணங்கினன்; எண்கின் மன்னைக்
கால் உற வணங்கிப் பின்னைக் கடன்முறை கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி, ஆங்கண் இருந்தவன், எதிர்ந்தோர்க்கு எல்லாம்,
ஞால நாயகன் தன் தேவி, சொல்லினள் நன்மை என்றான்.       5.15.7

சென்றது முதல் திரும்பியது வரை நிகழ்ந்தவற்றைச் சொல்லும்படி அனுமனிடம் வானரவீரர் வேண்டல்

என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர்; இறைஞ்சித் தாழ்ந்து
நின்றனர், உவகை பொங்க விம்மலர் நிமிர்ந்த நெஞ்சர்,
'சென்றது முதலா வந்தது இறுதியாச் செப்பல் பாலை
வன் திறல் உரவோய்!'என்னச் சொல்லுவான் மருத்து மைந்தன்.       5.15.8

அனுமன், பிராட்டியின் தவமும் அவள்பக்கல் அடையாளம்
பெற்றமையும் கூறித் தன் வென்றி கூறாது விடுத்தல்

ஆண் தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமையச் சொல்லிப்
பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று, போரில்
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி
மீண்டதும், விளம்பான்; தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி.       5.15.9

அனுமன் கூறாதவற்றையும் குறிப்பால் உணர்ந்த வானர வீரர் மேற்செய்ய வேண்டியதை அனுமனிடம் வினவுதல்

பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை
உரை செய, ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத,
கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட,
தெரிதர உணர்ந்தார்; பின்னர் என் இனிச் செய்தும் என்றார்.       5.15.10

அனுமன் விடையும் வானரர் புறப்படுதலும்

யாவதும் இனி வேறு எண்ண வேண்டுவது, இறையும் இல்லை;
சேவகன் தேவி தன்னைக் கண்டது விரைவின் செப்பி,
ஆவது அவ் அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம்;
போவது புலமை என்னாப் பொருக்கென எழுந்து போனார்.       5.15.11

வானரவீரர் மதுவனம் அடைதல்

போயினர், களிப்பினோடும் புங்கவன் சிலையின் நின்றும்
ஏயின பகழி என்ன, எழுந்து விண் படர்ந்து தாவிக்
காய் கதிர்க் கடவுள் வானத்து உச்சி சென்று இறுக்கும் காலத்து
ஆயின வீரரும், போய் மதுவனம் அதில் இறுத்தார்.       5.15.12

வானரர் உணவுவேண்ட அனுமன் முதலியோர் அங்கதனை அடைதல்

'ஏத நாள் இறந்த சால, என்பது ஓர் வருத்தம் நெஞ்சம் அத்து,
ஆதலால், உணவு தேய்ந்து வருந்தினம், அளியம் எம்மைச்
சாதல் தீர்த்து அளித்த வீர! தந்தருள், உணவும்'என்னப்
'போதும் நாம் வாலி சேய்பால்' என்று உடன் எழுந்து போனார்.       5.15.13

வானரத்தலைவர், அங்கதன்பால் வானரப்படைக்கு மதுவளிக்குமாறு வேண்டல்

அங்கதன் தன்னை அண்மி, மனும் இருகை கூப்பிக்
'கொங்கு தங்கு அலங்கல் மார்ப! ன்னுடைக் குரக்குச் சேனை,
வெம் கதம் ஒழிந்து சால ந்தின, வேடை ஓடி,
இங்கு இதற்கு அளித்தல் வேண்டும் ால் உமிழ் பிரசம்'என்றான்.       5.15.14

அங்கதன் இசைந்தமையால் வானரர் மதுவுண்டு மகிழ்தல் (6107-6108)

என அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்துச்
சென்று, உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனின் ஊடே
ஒன்றின் முன் ஒன்று பாயும், ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம்
தின்று தின்று உவகை கூரும், தேன் நுகர் அளியின் மொய்த்தே.       5.15.15

ஒருவர் வாய்க்கொள்ளும் தேனை ஒருவர் உண்டு எளிதில் போவார்;
ஒருவர் கைக் கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவார்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர், விழுவர், ஓடி
ஒருவர் மேல் ஒருவர் ஏறி, 'ஓகை'என்று உவகைகூர்வார்.       5.15.16

மதுவனம் காவலர் வானரவீரரை அச்சுறுத்தி வெருட்ட முயலுதல்

இன்னன நிகழும் காலை, எரிவிழித்து, எழுந்து சீறி,
அந் நெடும் சோலை காக்கும் வானரர், அவரை, நோக்கி,
'மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீவிர்
என் நினைந்து என்ன செய்தீர்? நும் உயிர்க்கு இறுதி'என்ன.       5.15.17

காவலர் மதுவனம் அழிந்தமை ததிமுகற்கியம்புதல் (6110-6111)

'முனியுமால் எம்மை எம் கோன்' என்று அவர், மொழிந்து போந்து,
'கனியும் மா மது வனத்தைக் கட்டு அழித்திட்டது; இன்று
நனி தரு கவியின் தானை, நண்ணலார் செய்கை நாண;
இனி எமால் செயல் இன்று;' என்னத் ததிமுகற்கு இயம்பினாரே       5.15.18

கேட்டவன்'யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்?
காட்டிர்'என்று எழுந்தான்; அன்னார், 'வாலிசேய் முதல கற்றோர்
ஈட்டம் வந்து இறுத்தது ஆக, அங்கதன் ஏவல் தன்னால்,
மாட்டின கவியின் தானை; மதுவளர் உலவை ஈட்டம்.'       5.15.19

காவலர் சொற்கேட்ட ததிமுகன் மதுவனத்துள் புக வானரர் அங்கதனிடம் சரண்புகுதல் (6112-6113)

'உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால், உறுதி கொண்டே,
குரங்கினம் தம்மையெல்லாம் விலக்கினம்; கொடுமை கூறிக்
கரங்களால் எற்ற நொந்தேம்; காவலோய்! என்னலோடும்
தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும்.'       5.15.20

என உரைத்து, அனலின் பொங்கி, எழுந்து இரைத்து, இரண்டு கோடி
கனை கழல் கவியின் சேனை, கல் எனக் கலந்து புல்ல,
புனை மதுச்சோலை புக்கான், மதுநுகர் புனிதச் சேனை,
அனகனை வாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.       5.15.21

ததிமுகன் அங்கதன்பாற் சினந்து கூறுதல்

இந்திரன் வாலிக்கு ஈந்த இன்சுவை மதுவின் கானம்,
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை தன்னைச்
சிந்தினை; கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே?
மந்தரம் அனைய தோளாய்! இற்றது உன் வாழ்க்கை இன்றே.       5.15.22

ததிமுகனும் அங்கதனும் பொருதல்

'மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ'என்னாக்
கதும் என வாலி சேய் மேல் எறிந்தனன் கரும் கல் பாறை
அதுதனைப் புறங்கையாலே அகற்றி அங்கதனும் சீறித்
ததிமுகன் தன்னைப் பற்றிக் குத்தினன் தடக்கை தன்னால்.       5.15.23

அங்கதன் ததிமுகனைத் தாக்கித் துரத்தி, அவனுடன் வந்தாரையும் தண்டிக்கும்படி, தன்னுடன் வந்தார்க்குச் சொல்லுதல்

வாய் வழி குருதி சோர மணிக் கையால் மலங்க மோதிப்
'போய் மொழி கதிரோன் மைந்தற்கு' என்று அவன் தன்னைப் போக்கித்
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை தன்னைக்
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான்.       5.15.24

அங்கதன் படைவீரர் ததிமுகன் படைவீரரை வருத்த அங்கதன் அவரையும் வெருட்டுதல்

பிடித்தனர்; கொடிகள் தன்னால் பிணித்தன; பின்னும் முன்னும்
இடித்தனர், அசனி அஞ்ச எறுழ்வலிக் கரங்கள் ஓச்சி;
துடித்தனர் உடல்கள் சோர்ந்தார், 'சொல்லும் போய் நீரும்'என்னப்
படித்தனன் வாலி மைந்தன். பயத்துடன் அவரும் போனார்.       5.15.25

வானரவீரர் மதுவனத்தில் வருத்தம் தீர்ந்திருத்தல்

அலை புனல் குடையுமா போல் மதுக் குடைந்து ஆடி, தம் தம்
தலைவர்கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே,
உலைவு உறு வருத்தம் தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்; இப்பால்
சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே.       5.15.26

கவிக்கூற்று நாடச்சென்றவர் மீண்டது நவின்றோம் நாடவிட்டவர் செய்தி நவில்வோம் எனல்

முத்தலை எஃகினாற்கும் முடிப்ப அரும் கருமம் முற்றி,
வித்தகத் தூதன் மீண்டது இறுதியா விளைந்த தன்மை,
அத்தலை அறிந்தது எல்லாம் அறைந்தனம்; ஆழியான் மாட்டு
இத்தலை நிகழ்ந்தது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம்.       5.15.27

சுக்கிரீவன் பிராட்டியை நாடிவருமாறு வானரரை ஏவிவிட்டு இராமபிரானைத் தேற்றிக்கொண்டிருத்தல்

'சேற்று இள மரை மலர்த் திருவைத் தேர்க'எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை
நால் திசை மருங்கினும் ஏவி நாயகன்
தேற்றினன் இருந்தனன்; கவியின் செம்மலே.       5.15.28

சுக்கிரீவன் தேற்ற இராமபிரான் தேறுதல்

கார்வரை இருந்துள கதிரின் காதலன்
சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான்
ஆருயிர் ஆயிரம் உடையன்; ஆம் என
சோர்தொறும் உயிர்த்து உயிர்த்து உணரத் தோன்றுவான்.       5.15.29
அனுமன்பால் வைத்த நம்பிக்கையால் இராமபிரான் உயிர்தாங்கி யிருத்தல்

தண்டல் இல் நெடும் திசை மூன்றும் தாயினர்
'கண்டிலர் மடந்தையை'என்னும் கட்டுரை
'உண்டு உயிர் அகத்து'என ஒறுக்கவும் உளன்;
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான்.       5.15.30

துயருற்ற இராமபிரான் சுக்கிரீவனொடு சொல்லுதல் (6123-6127)

ஆரியன் அருந்துயர்க் கடலுள் ஆழ்பவன்
'சீரியது அன்று நம் செய்கை; தீர்வு அரும்
மூரி வெம் பழியொடு முடிந்தது ஆம்'எனச்
சூரியன் புதல்வனை நோக்கிச் சொல்லினான்.       5.15.31

'குறித்த நாள் இறந்தன குன்றத் தென் திசை
வெறிக் கருங் குழலியை நாடல் மேயினார்
மறித்து இவண் வந்திலர்; மாண்டுளார் கொலோ?
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை? பெற்றியோய்!       5.15.32

'மாண்டனள் அவள்;'இவள் மாண்ட வார்த்தையை
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று'; எனாப்
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொல்லோ?
தேண்டினர் இன்னமும் திரிகின்றார் கொல்லோ?'.       5.15.33

'கண்டனர் அரக்கரைக் கறுவு கைம் மிக
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால்
விண் தலம் அதனில் மேவினர்கொல்? வேறு இலாத்
தண்டல் இல் நெடுஞ்சிறைத் தளைப்பட்டார் கொலோ.'       5.15.34

"கூறின நாள் அவர் இருக்கை கூடலம்
ஏறல் அஞ்சுதும்;' என'இன்ப துன்பங்கள்
ஆறினர் அருந்தவம் அயர்கின்றார் கொல்லோ?
வேறு அவர்க்கு உற்றது என்? விளம்புவாய்"என்றான்.       5.15.35
சுக்கிரீவன்பால் ததிமுகன் வருதல்

என்று உரைத்து இடர் உழந்து இருக்கும் ஏல்வையில்
வன் திறல் ததிமுகன் வானரை ஈசன் முன்
தன் தலைப் பொழிதரு குருதி தன்னொடும்
குன்று எனப் பணிந்தனன்; இருகை கூப்பியே.       5.15.36

ததிமுகன் மதுவனம் அழிந்தமை கூறச் சுக்கிரீவன் அழித்தவர் ஆர்? எனல்

எழுந்து நின்று'ஐய! கேள் இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம் அடைய'என்றலும்
வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே
'மொழிந்திடு அங்கு யார் அது முடித்து உேளார்?'என.       5.15.37

ததிமுகன் மதுவனமழித்தாரைக் கூறித் தான் தகைந்தவாறும் தாக்குண்டவாறும் அறிவித்தல் (6130-6132)

'நீலனும் குமுதனும் நெடிய குன்றமே
போல் உயர் சாம்பனும் புணரி போர்த்து என
மேல் எழு சேனையும் விரைவின் வந்து உறாச்
சால்பு உடை மதுவனம் தனை அழிப்பவே.       5.15.38

'தகைந்த அச் சேனையைத் தள்ளி நின்னையும்
இகழ்ந் துரைத்து இயைந்தனன் வாலி சேய்; மனக்கு
உகந்தன புகன்ற அவ் உரை பொறாமையே
புகைந்து ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே.       5.15.39

'இமைத்தல்முன் "வாலிசேய் எழில்கொள் யாக்கையைச்
சமைத்தி" என்று எறிதரப் புறம் கையால் தகைந்து,
அமைத் தரு கனல் என அழன்று, என் பற்றியே
குமைத்து, உயிர் பதைப்ப "நீ கூறு போய்"என்றான்.'       5.15.40

ததிமுகன் சொல்லிய செய்தி உவகைதருவதென்று சுக்கிரீவன் இராமபிரானிடம் சொல்லுதல் (6133-6134)

ஏம்பலோடு எழுந்து நின்று இரவி கான்முளை
பாம்பு அணை அமலனை வணங்கி'பைந் தொடி
மேம்படு கற்பினள் என்னும் மெய்ம்மையைத்
தாம் புகன்றிட்டது இச்சலம்'; என்று ஓதினான்.       5.15.41

'பண் தரு கிளவியாள் தன்னைப் பாங்கு உறக்
கண்டனர்; அன்னது ஓர் களிப்பினால் அவர்
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது
அண்ட நாயக! இனி அவலம் தீர்க'என.       5.15.42

இராமபிரான் வந்தவர் யாது சொல்வரோ என்று வருந்தியிருத்தல்

'வந்தனர் தென் திசை வாவினார்'எனப்
புந்தி நொந்து "என்னை கொல் புகலல் பாலர்?"என்று
எந்தையும் இருந்தனன்; இரவி கான்முளை
நொந்த அத் ததிமுகன் தன்னை நோக்கியே.       5.15.43

மதுவனத்தில் தங்கியவர் யார்யார்? என்ற சுக்கிரீவனுக்குத் ததிமுகன் கூறுதல்

'யார் அவண் இறுத்தவர்? இயம்புவாய்'என
'மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன்
சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார்;
ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார்.       5.15.44

சுக்கிரீவன் ததிமுகனுக்கு உறுதி கூறுதல் (6137-6139)

என்று அவன் உரைத்தபோது இரவி காதலன்
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே
'ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய்
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.       5.15.45

'கொற்றவன் பணி தலைக் கொண்டு தணெ் திரை
சுற்றிய திசை எலாம் துருவித் தோகையைப்
பற்றிய பகைஞரைக் கடிந்து பாங்கர் வந்து
உற்றனர்; அவரை யாம் உரைப்பது என்னையோ?.'       5.15.46

'அன்றியும் வாலி சேய் அரசு அது; ஆதலின்
பின்றுதல் தீது அரோ; பிணங்கும் சிந்தையாய்!
ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டுமேல்
சென்று அவன்தனைச் சரண் சேர்தி ஈண்டு'என.       5.15.47

ததிமுகன் மதுவனத்துக்கு மீளுதல்

வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
உணங்கிய சிந்தையன் ஒடுங்கும் மேனியன்
கணங்கேளாடு ஏகி அக் கானம் நண்ணினான்
மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்து அரோ.       5.15.48

ததிமுகனைக்கண்ட அங்கதன் சினத்தலும் ததிமுகன் வணங்குதலும்

கண்டனன் வாலி சேய் கறுவு கைம் மிக
'விண்டவன் நம் எதிர் மீண்டுளான் எனின்
உண்டிடுகுதும் உயிர்'என்ன உன்னினான்;
'தொண்டு'எனத் ததிமுகன் தொழுது தோன்றினான்.       5.15.49
அங்கதனும் ததிமுகனும் சினந்தணிந்து அளவளாவுதல்

'போழ்ந்து அன யான் செய்த குறை பொறுக்க'எனா
வீழ்ந்தனன் அடி மிசை; வீழ வாலி சேய்
தாழ்ந்து கை பற்றி மெய் தழீஇ கொண்டு'உம்மையான்
சூழ்ந்ததும் பொறுக்க'எனா முதன்மை சொல்லினான்.       5.15.50

வானரர் முன்னே அனுமனை இராமனிடம் அனுப்புதல்

'யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏம் உற துயர் துடைத்து அளித்த ஏற்றம் போல்
தாமரைக் கண்ணவன் துயரம் தள்ள நீர்
போம்'எனத் தொழுது முன் அனுமன் போயினான்.       5.15.51

ஏனை வானரர் சுக்கிரீவனிடம் சேர்தல்

'வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான்
என்று கொண்டு யாவரும்'எழுந்து போதலே
நன்று'என ஏகினார்; நவைக்கண் நீங்கினார்.       5.15.52

இராமபிரான் சுக்கிரீவனை வினவுதல்

இப் புறத்து இராமனும் இரவி சேயினை
ஒப்பு உற நோக்கி'வந்து உற்ற தானையர்
தப்பு அறக் கண்டனம் என்பரோ? தகாது
அப்புறத்து என்பரோ? அறைதியால்' என்றான்.       5.15.53

அனுமன்வர இராமபிரான் அவனை நோக்குதல்

என்புழி அனுமனும் இரவி என்பவன்
தென் புலத்து உளன் எனத் தெரிவது ஆயினான்;
பொன் பொழி தடக்கை அப் பொரு இல் வீரனும்
அன்பு உறு சிந்தையன்; அமைய நோக்கினான்.       5.15.54

அனுமன் பிராட்டியின் தூயநிலையைக் குறிப்பால் உணர்த்துதல்

எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல் தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.       5.15.55

அனுமன் செயலால் பிராட்டியின் தூயநிலை முதலியவற்றை இராமபிரான் அறிதல்

திண் திறலவன் செயல் தெரிய நோக்கினான்;
வண்டு இயல் ஓதியும் வலியள்; மற்று இவன்
கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று; எனக்
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான்.       5.15.56

அனுமன் செயலால் இராமபிரான் உற்ற உவகை நிலை

ஆங்கு அவன் செய்கையை அளவை ஆம் எனா
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான்;
வீங்கின தோள்; புனல் மலர்க்கண் விம்மின;
நீங்கினது அருந்துயர்; காதல் நீண்டதே.       5.15.57

அனுமன் தான் பிராட்டியைக் கண்டமை இராமபிரானிடம் கூறுதல்

'கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெள் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்ட நாயக! இனித் தவிர்தி ஐயமும்
பண்டு உள துயரும்'என்று அனுமன் பன்னுவான்.       5.15.58

அனுமன் பிராட்டி பெருந்தகவினைத் தான் கண்டவாறு விரித்துரைத்தல் (6151-6171)

"உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன்
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்;
என் பெரும் தெய்வம்; ஐயா! இன்னமும் கேட்டி? என்பான்.       5.15.59

பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு, எனப் பொறையில் நின்றாள்
தன்னலது இல்லை, தன்னை ஒப்பு, எனத் தனக்கு வந்த
நின்னலது இல்லை நின்னை ஒப்பு, என நினக்கு நேர்ந்தாள்;
என்னலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள்.       5.15.60

உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான்
வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து,
என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது எம்மோய்!       5.15.61

வில் பெரும் தடம் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இல் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரியக் கண்டேன்.       5.15.62

கண்ணினும் உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின்
எண்ணினும் உளை நீ; கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப்
புண்ணிலும் உளை நீ; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ!       5.15.63

வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒரு சார், விண் தோய்
காலையும் மாலை தானும் இல்லது, ஓர் கனகக் கற்பச்
சோலை அங்கு அதனில், உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையின் இருந்தாள்; ஐய! தவம் செய்த தவம் ஆம் தையல்.       5.15.64

மண்ணொடும் கொண்டுபோனான், வான் உயர் கற்பினாள் தன்
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்; உலகம் பூத்த
கண் அகன் கமலத்து அண்ணல், 'கருத்து இலாள் தொடுதல் கண்ணின்,
எண் அரும் கூறு ஆய் மாய்தி' என்றது ஓர் மொழி உண்டு என்பார்.       5.15.65

தீண்டிலன் என்னும் வாய்மை, திசைமுகன் செய்த முட்டை
கீண்டு இலது, அனந்தன் உச்சி கிழிந்து இலது, எழுந்து வேலை
மீண்டில, சுடர்கள் யாவும் விழுந்தில, வேதம் செய்கை
மாண்டிலது, என்னும் தன்மை வாய்மையான் உணர்தி, மன்னோ!       5.15.66

சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த
மாகத்தார் தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப்
பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத் தாளும்
ஆகத்தாள் அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள்.       5.15.67

இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்திப்
பொலம் குழையவரை எல்லாம் பொது உற நோக்கிப் போந்தேன்,
அலங்கு தண் சோலை புக்கேன்; அவ் வழி அணங்கு அன்னாளைக்
கலங்கு வெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில் கண்டேன்.       5.15.68

அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச
நெருக்கினர் காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க,
இரக்கம் என்று ஒன்று தானே ஏந்து இழை வடிவம் எய்தித்
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள்; அத் தமியள் அம்மா!       5.15.69

மாண்பு இறந்து அமைந்த கற்பின் வாள் நுதல், நின்பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களில் தவெிட்டி, தீராக்
காண் பிறந்தமையால், நீயே கண் அகன் ஞாலம் தன்னுள்
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி; அன்றே.       5.15.70

அயிர்ப்பு இலர் காண்பார், முன்னும் அறிந்திலர் எனினும், ஐய!
எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற
மயில் புரை இயலினாரும், மைந்தரும், நாளும் ஆங்கே
உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும்.       5.15.71

தையலை வணங்கற்கு ஒத்த இடைபெறும் தன்மை நோக்கி,
ஐய! நான் இருந்த காலை, அலங்கல் வேல் இலங்கை வேந்தன்,
எய்தினன், இரந்து கூறி, இறைஞ்சினன்; இருந்து நங்கை
வெய்து உரை சொல்லச் சீறிக் கோறல் மேல்கொண்டு விட்டான்.       5.15.72

ஆயிடை, அணங்கின் கற்பும், ஐய! நின் அருளும், செய்ய
தூய நல் அறனும், என்று இங்கு இனையன, தொடர்ந்து காப்பப்
போயினன், அரக்கிமாரைச் சொல்லுமின் பொதுவின் என்றாங்கு
ஏயினன், அவர் எலாம் என் மந்திரத்து உறங்கி இற்றார்.       5.15.73

அன்னது ஓர் பொழுதில், நங்கை, ஆருயிர் துறப்பதாக
உன்னினள், கொடி ஒன்று ஏந்திக் கொம்பொடும் உறைப்பச் சுற்றி,
தன்மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையில், தடுத்து நாயேன்,
பொன் அடி வணங்கி நின்று, நின்பெயர் புகன்ற போழ்தில்.       5.15.74

"வஞ்சனை அரக்கர் செய்கை இது"என, மனம் கொண்டேயும்,
'அஞ்சன வண்ணத்தான் தன் பெயர் உரைத்து, அளியை என்பால்,
துஞ்சு உறு பொழுதில் தந்தாய், துறக்கல்'என்று உவந்து சொன்னாள்
மஞ்சு என, வண்ணக் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள்.       5.15.75

ஆழிபெற்ற பிராட்டிநிலை (6168-6171)

அறிவு உறத் தெரியச் சொன்ன பேர் அடையாளம் யாவும்
செறிவு உற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்டக் கண்டாள்;
இறுதியில் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது; எந்தாய்!       5.15.76

ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற
திரு முலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ! நின்பால்
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால், வெந்து
உருகியது; உடனே ஆறி வலித்தது; குளிர்ப்பு உள் ஊற.       5.15.77

வாங்கிய ஆழி தன்னை, 'வஞ்சர் ஊர் வந்ததாம்'என்று,
ஆங்கு உயர் மழைக் கண் நீரால், ஆயிரம் கலசம் ஆட்டி,
ஏங்கினள், இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனி
வீங்கினள்; வியந்தது அல்லால், இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள்.       5.15.78

அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்தபின் அடுத்த எல்லாம்,
சொல்முறை அறியச் சொல்லி, 'தோகை! நீ இருந்த சூழல்
இன்னது என்று அறிகிலாமே, இத்தனை தாழ்த்தது'என்றேன்;
மன்ன, நின் வருத்தப் பாடும் உணர்த்தினேன்; உயிர்ப்பு வந்தாள்.       5.15.79

அனுமன் இராமபிரான்பக்கல் பிராட்டியின் சூளுறவினைக் கூறுதல்

இங்கு உள தன்மை எல்லாம் இயைபு உளி இயையக் கேட்டாள்;
அங்கு உள தன்மை எல்லாம் அடியனுக்கு அறியச் சொன்னாள்;
'திங்கள் ஒன்று இருப்பென், இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை;
மங்குவென் உயிரொடு'என்று, உன் மலர் அடி சென்னி வைத்தாள்.       5.15.80

அனுமன் இராமபிரானிடம் சூடாமணி வழங்குதல்

வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி,
கைத் தலத்து இனிதின் ஈந்தாள்; 'தாமரைக் கண்கள் ஆர
வித்தக! காண்டி'என்று, கொடுத்தனன்; வேத நல் நூல்,
உய்த்து உள காலம் எல்லாம், புகழொடும் ஒக்க நிற்பான்.       5.15.81

சூடாமணியைப் பெற்ற இராமனது நிலை (6174-6175)

பை பயப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,
மெய் உற வெதும்பி, உள்ளம் மெலிவு உறு நிலையை விட்டான்;
ஐயனுக்கு, அங்கி முன்னர் அம் கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே; கை புக்க மணியின் காட்சி.       5.15.82

பொடித்தன உரோமம், போந்து பொழிந்தன கண்ணீர், பொங்கித்
துடித்தன மார்பும் தோளும், தோன்றின வியர்வின் துள்ளி,
மடித்தது மணிவாய், ஆவி, வருவது போவது ஆகித்
தடித்தது மேனி, என்னே யார் உளர், தன்மை தேர்வார்.       5.15.83

அங்கதன் முதலியோர் வந்து சேர்தல்

ஆயிடைக் கவிகேளாடும் அங்கதன் முதலின் ஆயோர்
மேயினர், வணங்கிப் புக்கார், வீரனைக், கவியின் வேந்தை;
போயின கருமம் முற்றிப் புகுந்தது ஓர் பொம்மல் தன்னால்,
சேய் இரு மதியம் என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார்.       5.15.84

மேற் செய்யத்தகுவன குறித்து இராமபிரான் விரைவு கொள்ளுதல்

ஆண்டையின் அருக்கன் மைந்தன், ஐய! கேள், அரிவை நம்பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும், காலம் தாழ
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன்; என்றலோடும்
தூண் திரண்டு அனைய தோளான், பொருக்கென எழுந்து சொன்னான்.       5.15.85

சுக்கிரீவன் கட்டளைப்படி வானர சேனை புறப்படுதல்

எழுக எம் படைகள் என்றான்; ஏ எனும் அளவின், எங்கும்
முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவன் முடுக்க, முந்திப்
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்னப் பொங்கி
வழுவல் இல் வெள்ளத் தானை தென் திசை வளர்ந்தது அன்றே.       5.15.86

வழி வகுத்துச் செல்லுமாறு இராமன் நீலனைப் பணித்தல்

நீலனை நெடிது நோக்கி நேமியோன் பணிப்பான், நம் தம்
பால் வரும் சேனை தன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம்,
சால்பு உற முன்னர்ச் சென்று சரி நெறி துருவிப் போதி;
மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ.       5.15.87

அனுமன் தோள்மேல் இராமபிரான் ஏறியமர்தல்

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இருகை கூப்பிப்
'புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடைப் புகுதி'என்னாத்
தன் தலை படியில் தாழ்ந்தான்; அண்ணலும் சரணம் வைத்தான்;
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கிச் சொன்னான்.       5.15.88

அங்கதன் தோளில் இலக்குவன் ஏறச் சேனை புறப்படுதல்

'நீ இனி என்றன் தோள் மேல் ஏறுதி நிமல'என்ன
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி,
நாயகற்கு இளைய கோவும் நன்று'என அவன் தன் தோள்மேல்
பாய்தலும், தகைப்பு இல் தானை, படர்நெறி படர்ந்தது அன்றே.       5.15.89

வானோர் மலர்மழை பொழிதல்

6182. கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்பக் காலின்
அருள்தரு குமரன் தோள் மேல், அங்கதன் அலங்கல் தோள் மேல்,
பொருள் தரும் வீரர் போக, பொங்கு ஒளி விசும்பில் தங்கும்
தெருள் தரும் புலவர், வாழ்த்திச் சிந்தினர் தெய்வப் பொன் பூ.       5.15.90

மலைவழியே வானரசேனை செல்லுதல்

வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்; வய வெம் சேனை
எய்திடின், என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,
பெய் கனி கிழங்கு தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த
செய்ய மால் வரையே ஆறாச் சென்றன; தகைப்பு இல் சேனை.       5.15.91

அனுமன் இலங்கையில் கண்ட சிறப்புக்களைச் சொல்லக் கேட்டு வானரசேனை எளிதல் வழிகடத்தல்

வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை வெய்யோர்
சோர்வு இலாக் காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக்
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத
வார் கழல் அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதில் போனார்.       5.15.92

அனைவரும் தென்றிசைக் கடலைக் காணுதல்

அந் நெறி நெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும்
நல் நெறிக் குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த சேனை,
இன்னெடும் பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்ப்
பன்னிரு பகலில் சென்று தென் திசைப் பரவை கண்டார்.       5.15.93

-----------------


This file was last updated on 30 June 2016.
Feel free to Webmaster.